மாறுபட்ட பேச்சுமுறை, பேச்சுக் குறைபாடு உள்ளோர்க்கு உதவும் விதமாக ‘புரொஜெக்ட் ரிலேட்’ எனும் தொடர்புச் செயலியைச் சிங்கப்பூரில் அறிமுகம் செய்துள்ளது கூகல் நிறுவனம்.
தற்போது ‘ஆன்ட்ராய்டு’ கருவிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செயலி பல்வேறு பேச்சுமுறைகளைக் கொண்டவர்களைப் பிறருடன் இணைத்து, அவர்களது அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்க உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலி கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகமானது. தற்போது இது சிங்கப்பூரில் வெளியீடு கண்டுள்ளது.
பல்வேறு சூழ்நிலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 500 வாக்கியங்களின் பதிவுகளைச் செய்யக் கோரி, அதனை அடிப்டையாகக் கொண்டு இந்தச் செயலி பேச்சுமுறைகளைக் கண்டறிகிறது.
இதன் இயந்திரக் கற்றல்முறை பயனர்களின் மாதிரிப் பதிவுகளை உள்வாங்கி, அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான தொடர்புக்கு உதவி செய்யும்.
இந்தச் செயலியில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. கேட்டு அறிவது, கேட்டதைத் திரும்பச் சொல்வது, கேட்டதைச் சொல் வடிவில் தருவது ஆகியவை அந்த அம்சங்கள்.
கேட்டல் அம்சத்தின் மூலம், பயனரின் பேச்சை நிகழ்நேரத்தில் உரையாக மாற்ற இயலும். பிறரது பேச்சை அறிந்துகொள்ளவும், பயனர் தனது வாக்கியத்தைப் பிறருக்குப் புரியவைக்கவும் இதனைப் பயன்படுத்தலாம்.
திரும்பச் சொல்லும் அம்சத்தின் மூலம் பயனர் கூற விரும்பியதைத் தெளிவாகத் தொகுத்துக் கூறலாம். உரையாடலின்போதும், வெவ்வேறு மொழி பேசும் உதவியாளர்கள், இல்லப் பணியாளர்களுக்குத் தெளிவான வழிமுறைகளை எடுத்துரைக்கவும் இது உதவும்.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாவது அம்சம், ‘கூகல் டாக்ஸ்’, ‘ஜிமெயில்’, ‘கூகல் டிரான்ஸ்லேட்’ உள்ளிட்ட அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் விசைப்பலகையைப் பயன்படுத்தாமல் குரல் வழிக் கட்டளைகள் பிறப்பிக்க உதவுகிறது.
பொதுச் சொற்றொடர்களைத் தவிர பெயர்கள், தெருப் பெயர்கள், அடிக்கடி பார்வையிடும், கடந்து போகும் இடங்களின் பெயர்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொற்களஞ்சியத்தை உருவாக்கிப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள அறிவு சார்ந்த குறைபாடுடையோர், அவர்களது குடும்பத்தினருடன் பணியாற்றும் ‘MINDS’ எனும் அமைப்புடன் இணைந்து செயலாற்ற உள்ளது கூகல் நிறுவனம். அங்குள்ள பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன், குறைபாடுடையவர்கள், சமூகத்திலுள்ள அனைவருடனும் எளிதில் தொடர்புகொள்ள உதவும் அம்சங்களைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற பல பயிற்சி அமர்வுகளை அது நடத்தவுள்ளது.
இந்த ‘புரொஜெக்ட் ரிலேட்’ செயலி மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாடுகளை அணுகக்கூடியதாக மாற்றும் முயற்சிகளில் ஒன்று என்கிறது கூகல். செவித்திறன் குறைபாடுள்ளோர்க்கு ‘லைவ் டிரான்ஸ்கிரைப்’ எனும் ‘நேரடி எழுத்துப்பெயர்ப்பு’, பார்வைத்திறன் குறைபாடு உள்ளோர்க்குப் பொருள்களை அடையாளம் காண உதவும் ‘லுக் அவுட்’ உள்ளிட்டவை இதன் அங்கங்களாகும்.