தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சன்லவ் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் கிராமியக் கலைமணம்

2 mins read
9864e175-ac3d-40fe-82e7-8900924c0887
சன்லவ் வாம்போ வியூ பராமரிப்பு நிலையத்தில் பொய்க்கால் மயிலாட்டம். - படம்: சன்லவ் முதியோர் பராமரிப்பு நிலையம்

சன்லவ் அமைப்பின் வாம்போ வியூ முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த கிராமியக் கலைஞர்கள், முதியோர் முன்னிலையில் நடனமாடி மகிழ்வித்தனர்.

தவில் இசையும் நாயனமும் சூழ கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று சராசரி சிங்கப்பூரருக்கு மிகவும் மாறுபட்ட காட்சியும் கானமும் நிலையத்தில் இடம்பெற்றன. லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கிராமியக் கலைஞர்கள் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்தக் கொண்டாட்டம் ஜனவரி 16ஆம் தேதி காலை 10.30 அளவில் நடைபெற்றது.

கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ முப்பது முதியவர்களில் மூன்று, நான்கு பேர் இந்தியர்கள். பொங்கலைக் கொண்டாட இந்நிலையம் புதிதாக முயற்சி எடுத்திருப்பதாகக் கூறினார் நிலையத்தின் துணை நிர்வாகி லோபெஸ் ராயன்.

“பல்லினச் சமுதாயமான நம் சிங்கப்பூரில் பொங்கலைப் பற்றி விழிப்புணர்வு அதிகரிப்பதற்கான மற்றொரு முயற்சியாகவும் இது விளங்குகிறது. பண்டிகை ஒன்றின் மூலம் குதூகலத்தை அதிகப்படுத்துவதும் எங்கள் நோக்கமாகும்,” என்றார் திரு ராயன்.

பங்கேற்ற முதியோரில் ஒருவரான லட்சுமி, கிராமப்புற நடனங்களைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தமது பூர்வீக ஊரை இவை நினைவுபடுத்துவதாகக் கூறினார்.

நிலையத்திற்கு வரும்படி முதியோரிடம் வேண்டுகோள்

இதற்கிடையே, இந்திய முதியோர் கூடுதலாக சன்லவ் நிலையத்திற்கு வரும்படி திருவாட்டி மகாலட்சுமி அண்ணாமலை, 39, தமிழ் முரசிடம் கேட்டுக்கொண்டார்.

“உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றுடன் விளையாட்டுகள், மனமகிழ் நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு இதம் அடையலாம். குழுவாகச் சேரும்போது உடற்பயிற்சி மேலும் சுவாரசியமாகிறது. முதியோரின் ஒட்டுமொத்த நலனுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் துணைபுரியும்,” என்று அவர் கூறினார்.

தீவெங்கிலும் தற்போது 208 துடிப்புமிக்க மூப்படைதல் நிலையங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்