பொதுவாக, முதுமையின் அறிகுறியாகக் கருதப்படும் நரைமுடி இப்போதெல்லாம் பலருக்கும் இளவயதிலேயே தலைகாட்டி விடுகிறது.
இதனால், தன்னம்பிக்கையை இழந்துவிடும் அளவிற்குச் சிலர் கவலையில் மூழ்கிவிடுகின்றனர்.
இந்நிலையில், நரைமுடி குறித்த புதியதொரு தகவல் தோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜப்பானிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு மூலம் வெளியாகியிருக்கிறது.
நரைமுடிக்கும் மெலனோமா (Melanoma) எனும் ஒருவகை தோல் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பிருப்பதை அந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவை இரண்டும் ஒரே வகையான மெலனோசைட் குருத்தணு (Melanocyte Stem Cell) என்ற உயிரணுக்களிலிருந்து தோன்றுகின்றன.
மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் இந்த மெலனோசைட் உயிரணு, தலைமுடிக்கும் தோலுக்கும் நிறம் தருகிறது.
ஆனால், அந்த உயிரணுக்களுக்குச் சேதம் ஏதும் ஏற்பட்டால் இரண்டு விஷயங்களில் ஒன்று நடக்கலாம்.
ஒன்று, அந்தச் சேதமடைந்த உயிரணுக்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றன. அதாவது, முன்கூட்டியே முதிர்ச்சி அடைந்து செயலிழக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதன் விளைவாக, முடி நிறம் இழந்து நரைத்துவிடுகிறது. இது உடல் தன்னைப் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறது என்பதற்கான அறிகுறி.
மற்றொன்று, அந்தச் சேதமடைந்த உயிரணுக்கள் அதிக சூரிய ஒளி, வேதிப்பொருள்கள், கார்சினோஜென் (carcinogen) போன்ற காரணங்களால் கட்டுப்பாடின்றி தொடர்ந்து பெருகலாம். இதன் விளைவாக மெலனோமா புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கும்.
அதே நேரத்தில், தலைமுடி நரைத்துப்போனால் புற்றுநோய் வராது எனக் கருதக்கூடாது.
சேதமடைந்த உயிரணுக்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது, நீண்ட காலத்திற்கு நலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த ஆய்வின் வரம்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஆய்வு எலிகளை வைத்து நடத்தப்பட்டவை.
அதனால், மனித உடலில் மெலனோசைட் குருத்தணு அதேபோன்ற முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதிசெய்ய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையிலான உயிரியல் சார்ந்த வேறுபாடுகள், மனிதர்களின் வாழ்க்கைமுறை, மரபணுச் சிக்கல்கள் ஆகியவை காரணமாக, மனிதர்களில் நரைமுடி, புற்றுநோய் அபாயம் குறித்த நிலை மிகவும் நுணுக்கமானதாக பார்க்கிறது.

