சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலுடன் இணைந்து நடத்தும் ‘மாபெரும் பிரியாணித் திருவிழா’ மே 11ஆம் தேதி தொடங்கியது. இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்த விழா, உணவுப் பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மே 24ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், இந்தியாவின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த ஏழு தனித்துவமான பிரியாணி வகைகள் பரிமாறப்படுகின்றன.
ஹைதராபாத், லக்னோ, திண்டுக்கல், ஆம்பூர், தலச்சேரி, டெல்லி, கோல்கத்தா ஆகிய பகுதிகளின் பாரம்பரிய பிரியாணி வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஷங்ரிலா சிங்கப்பூர், ஷங்ரிலா ஈரோஸ் புதுடெல்லி, ஷங்ரிலா ராசா செந்தோசா ஆகிய பிரசித்திபெற்ற ஹோட்டல்களின் சிறப்புச் சமையல் வல்லுநர்கள், அந்தந்த வட்டாரங்களின் பாரம்பரிய சமையல் குறிப்புகளையும் உத்திகளையும் பயன்படுத்தி பிரியாணியைச் சமைத்துள்ளனர்.
தொடக்க விழாவில் கலந்துகொண்டவர்கள், பிரியாணியின் நறுமணம், மசாலாவின் கலவை, வட்டார சுவையைப் பெரிதும் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலின் உணவு, பானப் பிரிவு இயக்குநர் மேத்யூ பென்னின்க், “ஒவ்வொரு பிரியாணியும் ஒரு வட்டாரத்தின் வரலாற்றையும் அதன் கலாசாரத்தையும் விவரிக்கிறது.
“லக்னோவின் அவாதி (Awadhi) பிரியாணி முதல் தென்னிந்தியாவின் காரசாரமான பிரியாணி வரை, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிங்கப்பூரர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். முதல் நாளில் கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது,” என்றார்.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே கூறுகையில், “சிங்கப்பூர் நண்பர்களுக்காக இரண்டாவது ஆண்டாக இந்தப் பிரியாணி திருவிழாவை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். ‘இன்கிரெடிபல் இந்தியா’ (Incredible India) திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
“நாவூறும் பிரியாணி வகைகள், இந்தியாவைப் பற்றி மேலும் அறியவும் அங்கு சுற்றுலா செல்லவும் சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்,” எனக் குறிப்பிட்டார்.
இடம்: தி லைன் (The Line), ஷங்ரிலா சிங்கப்பூர், 22 ஆரஞ்சு குரோவ் ரோடு, டவர் விங், சிங்கப்பூர் 258350.
தேதி: மே 11 முதல் மே 24 வரை
நேரம்: நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை

