பல்வேறு நிறங்களிலும் பாணிகளிலுமான ஸ்னீக்கர் காலணிகளின் ரசிகர்களைச் சுண்டியிழுக்க ‘ஸ்னீக்கர் கான்’ (Sneaker Con) எனப்படும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
2025 பிப்ரவரியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடங்கியது. 2024 மார்ச் மாதத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு 17,000க்கும் அதிகமானோர் வருகையளித்தனர்.
ஜப்பானின் ஹிரோஷி ஃபுஜிவாரா, பிலிப்பீன்சைச் சேர்ந்த பிக் பாய் செங், சிங்கப்பூர் வடிவமைப்பாளர் மார்க் ஓங் ஆகிய பிரபல காலணி வடிவமைப்பாளர்கள் கடந்த நிகழ்ச்சிக்கு வருகையளித்தனர். ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அறிவுசார் சொத்து மேம்பாட்டு நிறுவனங்களான ‘ஓ4எக்ஸ்’ மற்றும் எஸ்பிஎச் மீடியா உடனான கூட்டுறவுப் பங்காளித்துவத்தின்கீழ் நடைபெறும் முதல் வாழ்வியல் நிகழ்ச்சியாக ‘ஸ்னீக்கர் கான் தென்கிழக்காசியா 2025’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
“ஸ்னீக்கர் ரசிகர்களுக்காக நாங்கள் பலதரப்பட்ட அனுபவங்களை அள்ளி வழங்கக் காத்திருக்கிறோம். சிங்கப்பூரிலும் ஆசியாவிலும் உள்ள எஸ்பிஎச் மீடியாவின் பார்வையாளர்களுடன் இவற்றைப் பகிர ஆவலுடன் இருக்கிறோம்,” என்று ‘தி ஓ4’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மிஷெல் லீ கூறினார்.
“ஓ4எஸ் நிறுவனத்தின் புத்தாக்க நிகழ்ச்சி முறையை எங்களது ஊடகத்திறனுடன் ஒன்றிணைப்பதன் மூலம் சமூகங்களை இணைத்து, கலாசாரத்தைக் கொண்டாடும் துடிப்புமிக்க, பல்தள அனுபவங்களைக் கொண்டுசேர்க்க நாங்கள் முயற்சி செய்கிறோம்,” என்று எஸ்பிஎச் மீடியாவின் துணைத் தலைமை நிர்வாகி குவெக் யூ சுவாங் தெரிவித்தார்.
ஓ4எக்ஸ், எஸ்பிஎச் மீடியாவுடன் கூட்டாக இணைந்து சிறப்பான மின்னிலக்கப் படைப்புகளையும் ‘டிசைன் யுவர் ஸ்னீக்கர்’ போட்டி ஒருங்கிணைந்த விளம்பரத் திட்டங்களையும் வழங்க உள்ளது. போட்டிக்கான மேல் விவரங்கள் பிந்தைய தேதியில் அறிவிக்கப்படும்.
வரும் நிகழ்ச்சியில், ‘த டிரேடிங் பிட்’ அங்கத்தில் வாடிக்கையாளர்கள் நேரடியாகக் காலணிகளை வாங்கி விற்கலாம் அல்லது பண்ட மாற்றம் செய்துகொள்ளலாம். ‘நாற்பதுக்கு நாற்பது’ (40 for 40) விளையாட்டுப் போட்டியில் குறிப்பிட்ட பங்கேற்பாளர்கள் இலவசக் காலணிகளைப் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“கலாசாரக் கொண்டாட்டம், புத்தாக்கம், வளர்ச்சி ஆகியவற்றை நோக்கிச் செல்லும் ஆவல்மிக்க பயணத்தை நாங்கள் தொடங்கவிருக்கையில், அடுத்தாண்டின் ‘ஸ்னீக்கர் கான் தென்கிழக்காசியா’ நிகழ்ச்சி, மறக்க முடியாத அனுபவத்தை அள்ளித்தர உள்ளது,” என்று ஸ்னீக்கர் கான் நிறுவனர் எலன் வினொகிரடோவ் கூறினார்.
2009 முதல் நடைபெற்று வரும் ‘ஸ்னீக்கர் கான்’ நிகழ்ச்சிக்கான பொது நுழைவுச்சீட்டுகள் $35 பெறுமானமுள்ளவை. சிறப்பு நுழைவுச்சீட்டுகளுக்கான விலை $55.

