தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கம் பரிசளித்த நிறுவனம்

2 mins read
குடும்பமாக தன் ஊழியர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம்
9435b341-f181-4555-a6c1-5a983151864d
ஹன்‌ஷிகா நிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

தீபாவளியை முன்னிட்டு, தன் நிறுவனத்தில் பணியாற்றும் 80 வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைப் பாராட்ட ஒரு சிங்கப்பூர் வர்த்தகம் தங்க ஆபரணங்களையும் பரிசுகளையும் வழங்கியுள்ளது.

அரை சவரன் முதல் இரண்டு சவரன் வரை தங்கச் சங்கிலி, தங்க டாலர், தங்கக் காப்பு, தங்கக் காசு எனப் பரிசுமழையை ஏறக்குறைய 30 ஊழியர்கள்மீது பொழிந்தது ஹன்‌‌‌ஷிகா பொறியியல், கட்டுமான நிறுவனம்.

சனிக்கிழமை (அக்டோபர் 26) மாலை ஹன்‌ஷிகா நிறுவனம் நான்காம் ஆண்டாக நடத்திய தீபாவளி நிகழ்ச்சியில் ஊழியர்கள் ஆடிப் பாடி, பட்டாசு வெடித்து, அறுசுவை உணவு உண்டு ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிறப்பாக, நெடுங்காலம் பணியாற்றியவர்கள், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தியவர்கள், கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் எனப் பல பிரிவுகளில் ஊழியர்கள் தங்கப் பரிசுகளைப் பெற்றனர்.

ஹன்‌ஷிகா நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு என்பதால் தொலைக்காட்சி, கைப்பேசி, ‘ஹோம் தியேட்டர்’, குக்கர் போன்ற ஒன்பது அதிர்‌‌‌ஷ்டக் குலுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

அனைத்து ஊழியர்களும் புத்தாடை, பலகாரங்கள், வெப்பக் குடுவை (Thermos Flask), $50 ரொக்கம் ஆகியவற்றைப் பெற்றனர்.

“எங்கள் நிறுவனம் ஒரு குடும்பம்போல அழைத்து அன்பளிப்புகளை வழங்கியது எதிர்பாரா மகிழ்ச்சியை அளித்தது,” என்றார் தலைத் தீபாவளி கொண்டாடும் ஊழியர் விஜயகுமார். அவருக்கு ஒரு தங்கச் சங்கிலி, பட்டு உடை, மாங்கல்யப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மனைவியுடன் தலைத் தீபாவளியைக் கொண்டாடும் விஜயகுமாருக்கு ஹன்‌ஷிகா இணை நிறுவனர் ராஜபாண்டியன் தங்கச் சங்கிலி அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
மனைவியுடன் தலைத் தீபாவளியைக் கொண்டாடும் விஜயகுமாருக்கு ஹன்‌ஷிகா இணை நிறுவனர் ராஜபாண்டியன் தங்கச் சங்கிலி அணிவித்து பரிசுகளை வழங்கினார். - படம்: ரவி சிங்காரம்

“சென்ற ஆண்டு ஒரு வாடகைத் தொழிற்சாலையில் கொண்டாடினோம். இவ்வாண்டு எங்கள் சொந்தத் தொழிற்சாலையில் கொண்டாடுகிறோம். அந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிக்க விரும்பினோம்,” என்றனர் ஹன்‌ஷிகாவின் இணை நிறுவனர்கள் மாலதி, ராஜபாண்டியன். தங்கள் இல்லப் பணிப்பெண்ணுக்கும் அவர்கள் புதிய கைப்பேசியை வழங்கினர்.

சிங்கப்பூரின் தனிச்சிறப்பு என்னவெனில், மற்ற இனத்தாரும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்குபெறுகிறார்கள். அவ்வகையில் சிறப்பு விருந்தினர்களாக ‘சிபிசி’ கட்டுமானத்தின் தலைமை நிர்வாகி சியா ஹங் வீயும் அவரின் மனைவியும் பங்கேற்றனர்.

“கட்டுமானத்தில் எல்லா நேரமும் வேலை தொடர்ந்துகொண்டே இருக்கும். இதற்கு மத்தியில், தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுத்து இத்தகைய கொண்டாட்டத்துக்கு ஹன்‌ஷிகா ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது,” என்றார் திரு சியா.

இவ்வாண்டு ஆயுத பூஜைக்காக ஊழியர்களை ஒருநாள் சுற்றுப்பயணமாக மலேசியாவிற்கு அழைத்துச் சென்றது ஹன்‌ஷிகா.

அதிர்‌ஷ்டக் குலுக்கலில் முதல் பரிசைப் பெற்ற செல்வகுமார் தினே‌ஷ்குமார் (வலது).
அதிர்‌ஷ்டக் குலுக்கலில் முதல் பரிசைப் பெற்ற செல்வகுமார் தினே‌ஷ்குமார் (வலது). - படம்: ரவி சிங்காரம்
தங்கள் முதலாளி ராஜபாண்டியனின் பிறந்தநாளன்று தொழிலாளர்கள் கேக் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தங்கள் முதலாளி ராஜபாண்டியனின் பிறந்தநாளன்று தொழிலாளர்கள் கேக் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்