சிங்கப்பூரை அசத்தவிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

2 mins read
e7403815-2c1e-43ed-9608-f39fff62a6ba
சிங்கப்பூரில் முதல்முறையாக நடக்கவிருக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி.  - படம்: கேஎஸ் டாக்கிஸ்

25 ஆண்டு திரைப்பயணத்தைப் பிரதிபலிக்கும் 34 பாடல்களின்வழி, ஒரு மாபெரும் இசைவிருந்தை சிங்கப்பூர் ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார் பிரபலத் தமிழ் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

சிங்கப்பூரில் முதல்முறையாக நேரடி இசைக் கச்சேரி வழங்கவிருக்கும் ஹாரிஸ், உன்னதத் தரத்தில் கச்சேரியை நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“கார்த்திக், நரேஷ் ஐயர், சைந்தவி, ஸ்ரீநிஷா, ஸ்ரீதர் சேனா, ஹரிப்பிரியா, திவாகர், எனது  மகனான சாமுவேல் நிக்கோலஸ் போன்ற பிரபலப் பாடகர்கள் இன்னிசை பொழிய, மூன்று மணி நேர நேரடி இசையை வழங்கவுள்ளேன்,” என்றார் அவர்.

50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவை வழிநடத்திவரும் அவர், மொத்தம் 730 கிலோகிராம் எடைகொண்ட இசைக்கருவிகளை நிகழ்ச்சிக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் இதுவே எனது முதல் மேடை; உலகிற்கு முதல் நுழைவாயிலாக எனக்கு இருந்தது சிங்கப்பூர்தான்,” என்று 1994ஆம் ஆண்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

“இது எனது 40வது சிங்கப்பூர்ப் பயணம்,” என்று குறிப்பிட்ட திரு ஹாரிஸ், தமது இசைக் கருவிகளை வாங்குவதற்கு சிங்கைக்கு வந்ததாகச் சொன்னார்.

“மின்னலே முதல் மக்காமிஷி வரை என் பிரபலப் பாடல்களை சிங்கப்பூர் ரசிகர்களுக்கு வழங்க ஆவலாக காத்திருக்கிறேன்,” என்று புத்துணர்வோடு பகிர்ந்துகொண்டார் ஹாரிஸ்.

தனது ரசிகர்கள் பலர் ‘ஜென்-ஸி’ தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், தன் பாடல்களை மீண்டும் மீண்டும் ரசிக்கும் அத்தலைமுறையினருக்கு நன்றி கூறினார்.

தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் செயற்கை நுண்ணறிவு பற்றியும் அதனால் ஏற்படும் சவால்களைப் பற்றியும் ஹாரிஸ் கருத்துரைத்தார்.

“ஒருபோதும் செயற்கை நுண்ணறிவுவழி இசையமைக்க மாட்டேன்; அது இசைத்துறையையே அழித்துவிடும்,” என்றார் அவர்.

பால்டப்பா, அசல் கோலார் போன்ற தனித்துச் செயல்படும் புதுமுகக் கலைஞர்களை அனைத்துலக அரங்கில் பிரபலமாக்குவது தமது விருப்பம் என்ற அவர், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பகிர்ந்துகொண்டார்.

‘கேஎஸ் டாக்கிஸ்’ (KS Talkies), ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’(Malik Streams), தாஜ் மகால் ஃபூட் (Taj Mahal Food), ராயல் கிங்ஸ் குழுமம் (Royal Kings) ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 6.0’ (Hearts of Harris 6.0) நேரடி இசை நிகழ்ச்சி, ‘தி ஸ்டார்’ அரங்கில், தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்