பொட்டலமிடப்படும் பானங்களில் நியூட்ரி கிரேட் (Nutri-Grade) முத்திரை சேர்க்கப்படுவது கடந்த 2022 டிசம்பர் மாதத்திலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நலமிக்க, குறைந்த அளவு சர்க்கரை உள்ள பானங்களுக்கு ‘ஏ’ தர நிலையும், அதிக அளவு சர்க்கரை அல்லது கொழுப்பு இருக்கும் பானங்களுக்கு ‘டி’ தரநிலையும் (‘D’ grade) வழங்கப்படும்.
2023முதல் கடைகளில் தயாரிக்கப்படும் பானங்களுக்கும் அந்தச் சட்டம் பொருந்துகிறது.
சிங்கப்பூரர்கள் அதிக அளவில் சர்க்கரையை உட்கொள்வதால், அவர்கள் பருகும் பானங்களில் உள்ள சர்க்கரை அளவை அறிந்து, முறையான முடிவை எடுக்க அவர்களுக்கு உதவுவதற்காக சுகாதார மேம்பாட்டு வாரியம் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது
மூன்று ஆண்டுகள் முடிந்து[Ϟ]விட்ட நிலையில், அத்திட்டம் உதவியதா? மக்களிடையே மாற்றம் தென்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண முனைந்தது தமிழ் முரசு.
வாடிக்கையாளர்களிடம் தென்படும் மாற்றம்
நியூட்ரி கிரேட் அறிமுகமானதற்குப் பிறகு, தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவில் சர்க்கரை சேர்க்கும்படி கேட்பதாகக் கூறினார் ‘நாதன் கஃபே’ ஊழியர் பெரியசாமி செல்வம், 54.
“நாங்கள் தயாரிக்கும் பானத்தில் மட்டுமல்லாமல் பொட்டலமிடப்படும் பானங்களிலும் நியூட்ரி கிரேட் அளவைப் பார்த்தபின்பே அவர்கள் பானங்களை வாங்குகின்றனர்,” என்று அவர் கூறினார்.
தேக்கா சந்தையில் அமைந்திருக்கும் இன்னொரு பானக் கடையான அர் ரஹமான் கஃபே உரிமையாளருமான 53 வயது முஜிபுர் ரஹமானும் இக்கருத்தை ஆமோதித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பக்கத்தில் அமைந்திருக்கும் கடைகளில் வேலை பார்க்கும் நடுத்தர வயது ஊழியர்களில் பலரும் 50% சர்க்கரை அளவை விரும்புவதாகக் கூறினார்.
நியூட்ரி கிரேட் அறிமுகமானபின், தாங்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வெகுவாக அதிகரித்திருப்பதாக திரு ரஹமான் கருதுகிறார்.
செங்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள காம்பஸ் ஒன் கோப்பித்தியாம் கிளையில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார் செலீன் லீ மைலிங்.
தம் கடைக்கு வாடிக்கையாக வருவோரிடத்தில் ஒரு மாற்றத்தைக் கண்டதாக செலீன் கூறினார். முன்பு, முழுச் சர்க்கரை அளவு கேட்டவர்கள், இப்பொழுது 25% அல்லது 50% சர்க்கரையே போதும் என்று சொல்வதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
கோப்பி ஓ கோசோங், கோப்பி சியூ டாய் - இது போன்ற சர்க்கரை குறைவான அல்லது சர்க்கரை அல்லாத பானங்கள் கடையில் அதிகம் விற்பனையாகின்றன.
தலைமுறையினரிடையே மாற்றம்
வயதானவர்களில் சிலர் மட்டும் சர்க்கரையை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதை கவனிப்பதாகக் கூறினார் ரஹமான்.
அதற்காக, அவர்கள் தங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்வதில்லை எனக் கருதிவிட முடியாது.
மூத்தோரிடத்தில் நல்லதொரு மாற்றம் தென்பட்டாலும், இளையர்கள் தொடர்ந்து இனிப்பு மிகுந்த பானங்களையே வாங்குவதாக கடைக்காரர்கள் வருத்தத்துடன் கூறினர்.
“சர்க்கரையை அளவோடு உட்கொள்ளவேண்டும் என்று தெரிந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அதை கடைப்பிடிப்பது கடினமாகவே உள்ளது,” என்கிறார் 24 வயது சுவாதிகா.
‘டமாரு சிங்கப்பூரில்’ வேலை பார்க்கும் இவர், சர்க்கரை நிறைந்த மென்பானங்களையே பெரும்பாலும் அருந்துகிறார்.
மனவுளைச்சலால் வாடும்போது, மென்பானங்களைக் குடிப்பது மனத்திற்கு இதமாக இருப்பதாகவும், மனவுளைச்சலைக் குறைக்க உதவுவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், நியூட்ரி கிரேட் சின்னத்தைப் பார்க்கும்பொழுது, அவ்வப்போது ‘ஏ’, ‘பி’ தரநிலைகொண்ட பானங்களை வாங்குவதாகவும் அவர் சொன்னார்.
கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் மனிதவளப் பிரிவில் பணிபுரியும் ரதி, 27, நியூட்ரி கிரேட் வந்த பிறகும் தொடர்ந்து கோக் (Coke) பானத்தையே விரும்பி அருந்துகிறார்.
சர்க்கரை நிறைந்த மென்பானங்களில் வெவ்வேறு அளவு சர்க்கரை சேர்த்த பானங்கள் இருந்தாலும், அவற்றைப் பருகும்போது பெரிய மாற்றம் ஒன்றும் தெரிவதில்லை.
எடுத்துக்காட்டாக, குறைந்த சர்க்கரையுள்ள கோக் (Coke Less Sugar), சர்க்கரையே சேர்க்கப்படாத கோக் (Coke Zero) என்ற இரண்டுமே இனிப்பாகவே இருப்பதாக ரதி கூறினார்.
ஆனால், ‘பபிள் டீ’ பருகும்போது, குறைந்த அளவில் சர்க்கரை சேர்ப்பது, சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்ப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடிப்பதாக அவர் சொன்னார்.
“நாங்களும் மாற முனைகிறோம். முற்றிலுமாக சர்க்கரையைக் குறைக்கவில்லை என்றாலும், இதுவே ஒரு நல்ல தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம், வாழ்க்கையை ஒரே ஒருமுறைதானே வாழமுடியும்!” என்று சிரித்தவாறே கூறினார் ரதி.
விருப்பமும் பணமும்
சக ஊழியர்களும் நண்பர்களும் நியூட்ரி கிரேட் சின்னத்தை கவனத்தில்கொள்வதில்லை என்கிறார் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்றுவிப்பாளரான சேகரன் கருப்பையா, 55.
“வேலைப் பளுவால் உடல்நலம் பேண நேரம் கிடைப்பதில்லை. ஒரு பானம் எந்த ‘கிரேட்’ கொண்டுள்ளது என்று தேடி வாங்குவதற்குப் பதிலாக, கண்ணில் படும் பானத்தை அவர்கள் வாங்கிவிடுவர்,” என்று அவர் கூறினார்.
சொந்த விருப்புவெறுப்புகளும் பணமும் எந்த பானத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் முதன்மையான பங்கை வகிக்கின்றன.
“எனக்கு இனிப்பு அறவே பிடிக்காது. அதனால், நான் சர்க்கரை இல்லாத பானங்களையே வாங்குவேன். ஆனால், என் நண்பர்கள், சர்க்கரை இருந்தால்தான் பானம் சுவையாக இருக்கும் என்பார்கள்,” என்றார் சேகரன்.
சர்க்கரை குறைந்த அளவில் இருக்கும் பானங்கள் ஓரளவிற்கு மலிவான விலையில் விற்கப்படுவதால் அவற்றை வாங்குவது தமக்குச் சாதகமாக இருப்பதாக அவர் உணர்கிறார்.
கடைக்காரர்கள் ஊக்குவிப்பு
கடைக்காரர்களும் சர்க்கரை குறைவான பானங்களை வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
“எங்கள் வயதான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் இளநீர் போன்ற ஆரோக்கியமான பானங்களைப் பரிந்துரைப்போம். செண்டோல் (chendol) செய்வதற்கு நாங்கள் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவோம்,” என்று கூறினார் செல்வம்.
வேறு சில கடைகளிலும் சர்க்கரைக்குப் பதிலாக, நாட்டுச் சர்க்கரை, தேன் முதலியவற்றைப் பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்கள் கேட்கலாம்.
கோப்பித்தியாம் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நியூட்ரி கிரேட் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்க்கப்படவேண்டும் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.
அதோடு, ஐஸ் லெமன் டீ, பார்லி போன்ற பானங்களுக்கு அந்நிறுவனமே புதிய செய்முறையை உருவாக்கியுள்ளது. அவற்றில், சர்க்கரை அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கும் பானத்தின் சர்க்கரை அளவைப் பொறுத்து, அதன் தரத்தைக் குறைத்து மதிப்பிடலாம் என்ற அச்சத்தால் கடைக்காரர்கள் பலர் 100% சர்க்கரை அளவையே பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்.
இதனால், உணவங்காடி நிலையங்களில் செயல்படும் சில பானக் கடைகளின் காட்சிப் பலகையில் ஒவ்வொரு பானத்திற்கும் நியூட்ரி கிரேட் கணக்கிடப்படுவதில்லை.
கட்டுப்பாடே காக்கும்
ஒரு கண் நியூட்ரி கிரேட் சின்னத்தைப் பார்க்கும்போது, இன்னொரு கண் சர்க்கரை நிறைந்த மென்பானங்களைப் பார்க்கின்றது.
இந்நிலையில், மக்களுக்கு நல்லதொரு நினைவூட்டியாகத் திகழும் நியூட்ரி கிரேட் சின்னம், சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்க பேரளவு உதவியுள்ளது.
‘Healthy 365’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் சில நடவடிக்கைகளை முடிப்பவர்களுக்கு நலப்புள்ளிகள் (Healthpoints) வழங்கப்படுகின்றன. இவை பயன்மிக்க சில நன்மைகளை அளிக்கின்றன.
அச்செயலியைப் போல, நியூட்ரி கிரேட் சின்னத்தைக் கருத்தில்கொண்டு, ஆரோக்கியமான பானங்களை வாங்குபவர்களுக்கு அணுகூலங்களை வழங்குவது, தங்களைப் போல் சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாதவர்களுக்கு நன்மை பயக்கும் என்று ரதியும் சுவாதிகாவும் கூறினர்.
இருந்தாலும், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், தன்னையும் அறியாமல் மென்பானத்தை நோக்கியே கைகள் நீளலாம்.
அத்தகைய தருணங்களில், ஆசையை அடக்கி, மாற்றுவழிகளை நாடலாம். எடுத்துக்காட்டாக, பழச்சாற்றையோ தண்ணீரையோ பருகலாம்.
வேறு வழி இல்லையெனில், வழக்கமான சர்க்கரை அளவைப் பாதியாகக் குறைத்து பானத்தைப் பருகலாம்.
சர்க்கரை அளவைக் குறைப்பது நம் கைகளில்தான் உள்ளது. ஆகவே, நமது நல்வாழ்விற்குப் பொறுப்பேற்று, நல்ல முடிவுகளை எடுப்போம்!

