பேரிழப்பிலிருந்து நண்பரைக் காத்தார்

பேரிழப்பிலிருந்து நண்பரைக் காத்தார்

3 mins read
பெரிய அளவில் பொருள் வாங்குபவர் போலியானவர் என்று தெரியவந்தது
0ccfab4f-4eff-46cd-b6b8-30194f17e859
மோசடியின் மாதிரி வடிவம். - படம்: கெட்டி இமேஜஸ்

கடந்த மாதம் தன் நண்பரின் குறுஞ்செய்தியைப் பார்த்தபோது, மின்னிலக்கச் சந்தையாளரான

ஸ்டீவன் லிம், 41, அவருடைய பணம் பறிபோகாமல் தான் தடுக்கப்போவதை நம்பியிருக்க வாய்ப்பில்லை.

திரு லிம்மின் நண்பரான ஈரச்சந்தையில் பூக்கடை வைத்திருக்கும் திரு லியுவைத் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் உள்ளூர்ப் பள்ளி ‘ஆசிரியர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மாண்டரின் மொழியில் பேசிய அந்த ‘ஆசிரியர்’ பள்ளியில் நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவையொட்டி, அலங்காரம் செய்வதற்குரிய பூக்கள் வாங்க உள்ளதாகத் தெரிவித்தார். அவர் கூறிய பூக்களின் மொத்த மதிப்பு ஆயிரக்கணக்கில் இருந்ததை எண்ணி உற்சாகமடைந்தார் லியு. அவரது சிறு வணிகத்துக்கு இது பெருந்தொகை.

அதுகுறித்து உடனடியாகத் தன் நண்பர் திரு லிம்மிடம் பகிர்ந்து கொண்டார் திரு லியு. “முதலில் கேட்கும்போது இது நல்ல வாய்ப்பாகத்தான் தோன்றியது,” என்றார் லிம்.

அடுத்த நாள் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. அந்த ‘ஆசிரியர்’ மீண்டும் லியுவுக்கு அழைத்து, பள்ளி தங்குவிடுதிக்குத் தேவைப்படும் மெத்தைகளை வாங்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

விற்பனையாளருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திரு லியுவின் வங்கிக் கணக்குக்கு செலுத்துவதாகக் கூறி, வங்கிக் கணக்கு விவரங்

களைக் கேட்டுள்ளார் அந்த ‘ஆசிரியர்’.

சற்று நேரத்தில், அந்த ‘ஆசிரியர்’ $18,000 பணம் அனுப்பியதற்கான திரைச்சுடுவைப் (Screenshot) பகிர்ந்தார். இதுகுறித்து உடனடியாக திரு லிம்மிடம் பகிர்ந்துகொண்டார் திரு லியு.

“என் நண்பருக்கு மின்னிலக்கப் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததால் அப்போதும் அவருக்குச் சந்தேகம் ஏற்படவில்லை,” என்று தெரிவித்தார் திரு லிம்.

“ஆனால் எனக்கு அது அபாய மணியாகவே தோன்றியது,” என்றார் லிம்.

“பொதுவாக பள்ளிகள் சிங்கப்பூரின் அரசாங்க மின்கொள்முதல் அமைப்பான ‘ஜீபிஸ்’ (GeBIZ) மூலமாகத்தான் தேவையான பொருள்களை முன்பதிவு செய்வார்கள். வாட்ஸ்அப் மூலமாகவோ, வேறு சமூக ஊடங்கங்களின் வழியாகவோ இவ்வித பரிமாற்றங்கள் நடக்காது. அத்துடன், முதலில் அவர் வாங்க நினைத்த மலர் அலங்காரப் பொருள்கள் எப்படி மெத்தையாக மாறியது? இது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன,” என்றார் லிம்.

அவற்றைக் குறித்து தெளிவுபடுத்திக்கொள்ள திரு லிம் அந்த ‘ஆசிரியரை’ தொடர்புகொண்டு பேசியபோது, தொடர் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

“அது மோசடி அழைப்புதான்,” என்றார் லிம். இதுபோன்ற போலி மெத்தை வாங்கும் வாடிக்கையாளர் குறித்த செய்திகளை உடனடியாகத் தன் நண்பருக்குத் தெரியப்படுத்தினர் லிம்.

பகிரவும், விழிப்புடன் இருக்கவும்

“கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி முதல் இவ்வகை மோசடியில் சிக்கி மொத்தம் $831,000 இழந்த குறைந்தது 60 பேர் பட்டியலில் திரு லியுவும் இணைந்திருக்கக் கூடும்,” என்று காவல்துறை கூறியது.

பெரும்பாலான வழக்குகளில் மோசடியாளர்கள் தங்களை ஆசிரியர்கள் என்றோ கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் என்றோ அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர் என்றார் சிங்கப்பூர்க் காவல்துறையின் ஊழல் பொதுக் கல்வி அலுவலக செயல்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ரோஸி ஆன் மெக்கின்டைர்.

“மோசடியாளர்கள் புகழ்பெற்ற வணிகங்களின் வாடிக்கையாளர்கள் போலவும் ஆள்மாறாட்டம் செய்கின்றனர். அவ்வாறு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது சிறு வணிகர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர்கள் கையாளும் சூழ்ச்சி,” என்றார் அவர்.

மேலும், திரு லிம் செய்தது போலவே மோசடிகள் குறித்த தகவல்களையும், செய்திகளையும் நண்பர்களுடனும் குடும்பத்தினரிடமும் பகிர்ந்துகொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

“உங்கள் தகவல் அவர்களைப் பெரிய மோசடிகளுக்கு இரையாகாமல் தடுக்கலாம்,” என்றார் திருவாட்டி ரோஸி.

தன் நண்பர் மோசடியில் சிக்காமல் பாதுகாத்ததில் மகிழ்ச்சி என்றார் திரு லிம். “கொவிட்-19 தொற்றுப்பரவல் காலத்தில் திரு லியு போன்ற சிறு வணிகர்கள் அனுபவித்த சிரமங்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் லாபமும் மிகவும் குறைவு. சில ஆயிரம் வெள்ளிகூட அவர்களுக்கு பேரிழப்பாக இருக்கும்,” என்றார் லிம்.

மொத்தமாக வாங்குவதாக ஆள்மாறாட்டம் செய்பவரின் பாவனைப் படம்.
மொத்தமாக வாங்குவதாக ஆள்மாறாட்டம் செய்பவரின் பாவனைப் படம். - படம்: கெட்டி இமேஜஸ்

மொத்தமாக வாங்குவதாக மோசடி செய்பவர்களின் உத்தி 

  1. மோசடிப் பேர்வழிகள் ‘வாடிக்கையாளர்கள்’ போர்வையில் சிறு வணிகர்களைத் தொலைபேசி வழியோ, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வழியோ தொடர்புகொண்டு பொருள்களை மொத்தமாக வாங்குவதுபோலப் பேசுகின்றனர்.
  2. பொதுவாக மோசடிப் பேர்வழிகள், கையிருப்பில் இல்லாத பொருள்கள், குறிப்பிட்ட நிறுவனம், குறிப்பிட்ட பொருள்களை அதிக அளவில் கேட்டுத் தொடர்புகொள்கின்றனர். குறிப்பாக, சிறு வணிகர்கள், சில்லறை விற்பனையில் ஈடுபடுவோர் விநியோகிக்க இயலாத அளவில் பொருள்களைக் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர் மோசடிப் பேர்வழிகள்.
  3. அப்பாவி சிறு வணிகர்களைத் தொடர்பு கொள்ளும் இவர்கள், கையில் இல்லாத பொருள்களைக் கேட்பதுடன், அவற்றை ஒரு குறிப்பிட்ட விநியோகிப்பாளரிடம் வாங்கித் தரும்படியும் பரிந்துரைக்கின்றனர். அந்த விநியோகிப்பாளரும் மோசடிக் கூட்டத்துடன் தொடர்புடையவராகவே இருப்பார்.
  4. மோசடி செய்பவர்கள், மொத்த பொருள்களுக்கான முன்பணத்தை முன்கூட்டியே செலுத்தியதுபோல போலிக் கட்டண ஆவணங்கள் மூலம் வணிகர்களை நம்ப வைக்கின்றனர். இது அந்தச் சிறு வணிகர் மோசடி பேர்வழி பரிந்துரைத்த மோசடி ‘விநியோகிப்பாளருக்கு’ முன்பணம் அளிக்கத் தூண்டும் விதமாக அமையலாம்.
  5. வணிகர்கள் உண்மையில் அந்த ‘வாடிக்கையாளரிடமிருந்து’ பணம் வராதபோதும், அந்த ‘விநியோகிப்பாளர்’ பணத்தை வாங்கிக்கொண்டு பொருளையும் அனுப்பாமல், பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இருக்கும்போதும், இருவருமே தொடர்பைத் துண்டித்தவுடனும் மட்டுமே அது மோசடி என்பதை உணர்வர்.

கவனத்துடன் இருக்கவும்

ஸ்கேம்ஷீல்டையும் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்கவும்

  1. ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து மோசடி அழைப்புகளிலிருந்தும் குறுஞ்செய்திகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். 
  2. புதிய வாடிக்கையாளர்கள், விநியோகிப்பாளர்களின் அடையாளத்தைத் தன்னிச்சையாக உறுதிசெய்வதைக் கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.
  3. புதிய விநியோகிப்பாளர்களுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதையோ முன்பணம் செலுத்துவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  4. விநியோகிப்பாளரைச் சந்தித்து பொருளைப் பெற்று பணம் செலுத்த முற்படுங்கள்.  

மோசடிக்கான அறிகுறிகளை அடையாளம் காணவும்

  1. தெரியாதவரிடமிருந்து பணம் மாற்றிவிடும்படியோ கட்டணம் செலுத்தும்படியோ இணைப்புகள் அல்லது கியூஆர் குறியீடுகள் வந்தால் அவற்றைப் பயன்படுத்தவேண்டாம். போலி வங்கி இணையத்தளங்களாக இருக்கக்கூடும்.
  2. வாங்குபவரின் அமைப்பைத் தொடர்புகொண்டு அடையாளத்தை உறுதிசெய்யவும்.
  3. உங்களின் நிலை மோசடியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டால் 1800-722-6688 எனும் எண்ணில் மோசடித் தடுப்பு உதவியை நாடுங்கள்.

அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்

  1. மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் உடனே தெரிவித்து காவல்துறையிடம் புகாரளியுங்கள்.
  2. ஆக அண்மைய மோசடித் தடுப்பு ஆலோசனைகளுக்கு தேசியக் குற்றத் தடுப்பு மன்றத்தின் ScamAlert வாட்ஸ்அப் பக்கத்தைப் பின்தொடர்ந்து அதனை குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிருங்கள்..
சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
குறிப்புச் சொற்கள்