‘பேஷன் ஃபுருட்’ என்று அழைக்கப்படும் கொடித்தோடைப்பழம் வெப்ப வலய நாடுகளில் இயற்கை வழங்கும் ஓர் அரிய பரிசாகும். இதைத் தமிழில் தாட்பூட் பழம் என்றும் அழைப்பார்கள். மஞ்சள், ஊதா உட்பட பல வண்ணங்களில் இடத்திற்கும் சூழலுக்கேற்ப இந்தப் பழத்தைக் காணலாம்.
நம் உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ள இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.
இந்தப் பழத்தை அப்படியே வெட்டிச் சாப்பிட்டாலே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். அதேசமயம், இதைப் பிற ஆரோக்கியமான உணவுப் பொருள்களுடன் சேர்த்து சாலடாகவும் தயார்செய்து சாப்பிடலாம். இதன் சாற்றைக் குளிர்பானமாகவும் ‘ஸ்மூத்தி’யாகவும் அருந்தலாம்.
கொடித்தோடை உடல்நலத்திற்கு வழங்கும் பல நன்மைகளைக் குறித்து விரிவாக ஆராய்வோம்.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்சிடன்
கொடித்தோடையில் நிறைந்துள்ள ‘ஆன்டி-ஆக்சிடன்ஸ்’, குறிப்பாக ‘பேட்டா கெரோட்டீன்’, ‘ஃபிரீ ரேடிகல்’ அளவைக் கட்டுக்குள் வைத்துச் சமநிலைப்படுத்தவும் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை வெகுவாகக் குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இதில் உள்ள ‘ஆன்டி-ஆக்சிடன்ஸ்’ வயதான தோற்றத்தைத் தடுக்கவும் சருமத்தின் அழகைப் பேணவும் உதவுகின்றன.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியம்
கொடித்தோடைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்து, இதய நோய், ‘ஹைப்போதைராய்டிசம்’ ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், தசை, நரம்புச் செயல்பாட்டை வலுப்படுத்தி உடலில் திரவங்களைச் சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி
கொடித்தோடைப் பழத்தில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துகிறது. இது உடற்சோர்வு, சளி, காய்ச்சல் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைக்கிறது. அதனுடன், சருமத்திற்கு தேவையான ‘கொலாஜன்’ உற்பத்தியை அதிகரித்து வைட்டமின் சி அதை இளமையாக வைத்திருக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து
கொடித்தோடை அதிக அளவிலான நார்ச்சத்து கொண்டுள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் உட்பட பல்வேறு வயிறு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் இது உதவுகிறது. மேலும், உடலில் ரத்த சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்துக்கொள்ளவும் நீரிழிவு ஏற்படும் அபாயத்தையும் கொடித்தோடைப்பழம் குறைக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
தூக்க நலத்தை மேம்படுத்தும் தன்மைகள்
கொடித்தோடைப் பழத்தில் உள்ள சில இயற்கை கூட்டுப் பொருள்கள், நரம்புகளை ஆசுவாசப்படுத்தி, மனதிற்கு அமைதி தருகின்றன. இரவில் நிம்மதியாக தூங்க வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாமல், நரம்புகளின் ஆரோக்கியத்தையும் இப்பழம் மேம்படுத்துகிறது.
எலும்புகளுக்கான ஊட்டச்சத்து
கொடித்தோடையிலிருக்கும் அதிக இரும்புச்சத்து, மெக்னீசியம், ஃபாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. எலும்பு அடர்த்தியைப் பராமரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கவும் இது உதவுகிறது.

