தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவை உபயோகிக்‌கும் செவிப்புலன் கருவிகள்

2 mins read
f1125e12-d131-49ad-a24e-7bf2040e417d
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் செவிப்புலன் கருவிகள் போன்ற நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் செவிப்புலன் ஆரோக்கியத்திற்கான அணுகுமுறையை மாற்றியமைக்கின்றன.  - படம்: ஃப்ரீபிக்‌

வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினையாக அடிக்கடி கருதப்படும் செவிப்புலன் இழப்பு, தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான இளையர்கள் உரத்த சத்தத்தால் ஏற்படும் நிரந்தர செவிப்புலனை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். சிங்கப்பூரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88 விழுக்காட்டினர் வயது சார்ந்த செவிப்புலன் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

செவிப்புலனை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், மேம்பட்ட தீர்வுகளின் குறைபாடு தொடர்ந்து காணப்படுகிறது.

‘ஏஐ’ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் செவிப்புலன் கருவிகள் போன்ற நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள், செவிப்புலன் ஆரோக்கியத்திற்கான அணுகுமுறையை மாற்றியமைக்கின்றன.

“இதுபோன்ற கருவிகள் தனிப்பயனாக்கப்பட்ட, தகவமைப்பு அனுபவத்தை வழங்குகின்றன,” என்று ‘அமேசிங் ஹியரிங்’ எனும் மருந்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செவிப்புலன் வல்லுநருமான ஷரத் கோவில் கூறினார்.

அடிக்கடி பயனர்களால் சரிசெய்துகொள்ள வேண்டியிருக்கும் பாரம்பரிய செவிப்புலன் கருவிகளைப்போல இல்லாமல், செயற்கை நுண்ணறிவை உபயோகிக்‌கும் கருவிகள் தானாகவே பல்வேறு சூழல்களுக்கேற்ப அதனை மாற்றியமைத்துக் கொள்வதோடு சத்தமான சூழல்களிலும் மற்றவர்களின் பேச்சைத் தெளிவாகக் கேட்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.

“செயற்கை நுண்ணறிவை உபயோகிக்‌கும் செவிப்புலன் கருவிகள் மற்றவர்களின் பேச்சைப் பின்னணி இரைச்சலிலிருந்து பிரித்தெடுக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. மேலும், கூட்டம் நிறைந்த உணவகங்கள் போன்ற சூழல்களில் சிரமமின்றி உரையாட வழிவகுக்கின்றன,” என்று திரு ஷரத் கூறினார்.

இச்சாதனங்கள் மேம்பட்ட இணைப்பையும் கொண்டுள்ளதால் பயனர்கள் கைப்பேசிகள், தொலைக்காட்சிகளிலிருந்து வரும் ஒலியைத் தடையின்றி கேட்க துணைபுரிகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடிப்படை முதல் உயர்மதிப்பு மாதிரிகள் வரை, செவிப்புலன் கருவிகள் ஒவ்வொரு பயனரின் தேவைகளுக்கும் நிதி நிலைக்கும் ஏற்ப தயாரிக்கப்படுகின்றன. அடிப்படை மாதிரிகள் எளிமையான செயல்பாடுகளை வழங்கினாலும், உயர்மதிப்பு மாதிரிகள் நுண்ணறிவைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கேற்ப நிகழ்நேரத்தில் சரிசெய்துகொள்ளும் திறன் போன்றவற்றை உள்ளடக்கி மேம்பட்ட செவித்திறன் அனுபவங்களை வழங்குகின்றன என திரு ஷரத் எடுத்துரைத்தார்.

மேலும், இந்த முன்னேற்றங்கள் ஒட்டுமொத்த செவித்திறன் ஆரோக்கியத்தில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் சொன்னார்.

“செவிப்புலன் கருவிகளின் தொடர் பயன்பாடு மூளைக்கு வழக்கமான செவிவழி உள்ளீட்டை வழங்குகிறது. இது, செவிப்புலன் இழப்புடன் தொடர்புடைய அறிவாற்றல் வீழ்ச்சியைத் தாமதப்படுத்தலாம்,” என்று திரு ஷரத் கூறினார்.

செயற்கை நுண்ணறிவை உபயோகிக்கும் செவிப்புலன் கருவிகள் செவிவழி பாதைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம், சமூக தனிமைப்படுத்துதலையும் அறிவாற்றல் சிதைவுடன் தொடர்புடைய அபாயங்களையும் பயனர்களிடையே குறைக்கின்றன என்றும் அவர் சொன்னார்.

செவித்திறன் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில் செவிப்புலன் இழப்புடன் யாரும் வாழ வேண்டியதில்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்