பியானோ இசைக் கலைஞரும் ஆசிரியருமான 34 வயது பர்விந்தர்ஜீத்தின் இசை ஆற்றல், அக விருப்பின் விடாமுயற்சியால் பெறப்பட்டது.
ஆர்ட்:டிஸ் (ART:DIS) அமைப்பின் வழி உடற்குறையுள்ள மாணவர்களுக்கும் பியானோ சொல்லித் தரும் பர்விந்தர் பிறப்பிலேயே செவிப்புலனை இழந்தவர். எட்டு வயதில் பியானோ வாசிக்கப் பழகிய அவர், இன்று அனைத்து வயதினருக்கும் பியானோ சொல்லிக் கொடுக்கிறார்.
பர்வினின் தாயார் கருவுற்றிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட ‘ரூபெல்லா’ கிருமித் தொற்று கருவையும் தாக்கியது. கருவைக் கலைக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால் அவ்வாறு செய்ய பர்வினின் தாயாருக்கு மனம் வரவில்லை.
‘சோக்கா காக்காய்’ அமைப்பில் உறுப்பினராகி, பெளத்த சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்த அவர், பிரார்த்தனை வழி மன அமைதியைத் தேடினார். பின்னர் மற்றொரு மருத்துவர் கொடுத்த தைரியத்தால், பிரசவத்துக்குத் தயாரானார்.
பர்வினுக்கு மூன்றரை வயதாக இருந்தபோது அவருக்குச் செவிப்புலன் குறைபாடு கண்டறியப்பட்டது. அச்செய்தியை அவருடைய தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், பர்வினுக்குத் தானாகவே காது கேட்கத் தொடங்கிவிடும் என்ற நப்பாசையில் காத்திருந்தார்.
ஆறு வயதில்தான் பர்வினுக்குக் காதொலிக் கருவி பொருத்தப்பட்டது. எனினும், அது இடது காதுக்கு உதவியதே தவிர, வலது காதுக்குப் பலன் தரவில்லை.
ஒருமுறை ‘சோக்கா காக்காய்’ அனைத்துலக அமைப்பின் மூன்றாம் தலைவர் டைசாகு இகேதா சிங்கப்பூருக்கு வந்து, அவ்வமைப்பின் பாலர் பள்ளியில் பியானோ வாசித்தார். அப்போது ஐந்து வயதாக இருந்த பர்வினை அந்த இசை ஆட்கொண்டது.
“அப்போது நான் காதொலிக் கருவி போட்டிருக்கவில்லை. ஆனாலும், திரு இகேதா அவ்வளவு அழுத்தமாக வாசித்ததால், அந்த இசையின் அதிர்வுகளை என்னால் உணரமுடிந்தது. இசையைக் கற்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. பெற்றோர் என்னை எட்டு வயதில் தனியார் பியானோ வகுப்பில் சேர்த்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“இசையைப் புரிந்துகொள்ள செவிப்புலன் தேவை. அது இல்லாததால் கடினமாக இருந்தது. என்றாலும் என் ஆசிரியர் ஊக்கப்படுத்தினார். நாங்கள் முயற்சியைக் கைவிடவில்லை,” என்றார் பர்வின்.
மனத்தின் முடிவு
செவிப்புலன் குறைபாடுள்ளோருக்கான கனோசியன் பள்ளியில் படித்த பர்வின், ஓராண்டுக்குப் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, மேற்கல்விக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.
ஆனால், தந்தைக்கு உடல்நலம் குன்றியதால் அவர் சிங்கப்பூர் திரும்பினார்.
தந்தை இறப்பதற்குமுன், “இசை ஆசிரியராகும் லட்சியத்தைக் கைவிடாதே,” என பர்வினை ஊக்குவித்தார். அப்போதுதான் இசைப் பாதையில் தொடர முடிவெடுத்தார் பர்வின்.
“என் நண்பர்கள் பலரும் என்னைப் பார்த்து சிரித்தனர். உன்னால் எப்படி பியானோ ஆசிரியராக முடியும்? என்று கிண்டல் செய்தனர். என் மனதுக்கு செவிசாய்த்து, என் லட்சியத்தில் குறியாக இருந்தேன்,” என்றார் பர்வின்.
அவர் பியானோ 8ஆம் நிலை (Grade 8) தேர்ச்சியைப் பெற்றார்.
திருப்புமுனை
வலது காதில் ‘கோக்லியர் கருவி’யை மூளையில் பொருத்த 19 வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பர்வின். ஆனால், இடது காதில் காதொலிக் கருவியால் உணரும் சத்தங்களும் வலது காதில் கோக்லியர் கருவியால் கேட்கும் சத்தங்களும் வேறுபட்டதால் பர்வின் பெரும் மனச்சோர்வுக்கு ஆளானார். அதற்குப் பழக அவருக்கு ஓராண்டு காலம் தேவைப்பட்டது.
2016 ஜனவரியிலிருந்து ஓராண்டு காலம் முழுநேர ஆசிரியர் உதவியாளராகக் கனோசியன் பள்ளியில் ஆங்கிலம், கணிதம் கற்பித்த பர்வினுக்கு, 2017ல் பியானோ சொல்லித் தர வாய்ப்புக் கிடைத்தது.
‘லர்ன் 2 பிலே மியூசிக் அகேடமி’யில் ஒன்றரை ஆண்டுகள் பகுதி நேரமாக பியானோ சொல்லிக் கொடுத்த அவர், 2019ல் லொவ்ரி இசைப் பள்ளியில் முழுநேர பியானோ ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு அவரது பயணம் நான்கு ஆண்டுகள் நீடித்தது.
2010 முதல் ‘சோக்கா புது நூற்றாண்டு பல்லிசைக் குழு’விலும் உறுப்பினராக இருந்துள்ளார் பர்வின். 2015 முதல் 2016 வரை சிங்கப்பூர் இளம் சீன இசைக்குழுவிலும் இருந்தார்.
“என் தாயார் அன்று எடுத்த முடிவால்தான் இன்று நான் இருக்கிறேன்,” என்ற பர்வின், “உடற்குறையுள்ளோர் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய நான் ஊக்கப்படுத்த விரும்புகிறேன்,” என்றார்.