சிங்கப்பூரில் நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் முதலிய நாட்பட்ட நோய்கள் தொடர்பான நீண்டகால ஆராய்ச்சிக்காக, ‘த ஹெல்த் ஃபார் லைஃப்’ (HELIOS-SG100K) ஆய்வு இந்தியப் பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக லீ காங் சியான் மருத்துவப் பள்ளி நடத்தும் இந்த ஆய்வு, தேசியச் சுகாதாரக் குழு, லண்டன் இம்பீரியல் கல்லூரி இரண்டின் ஆதரவுடன் இப்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது.
ஆசியச் சமூகங்களுக்கான மருத்துவ, மரபணுத் தரவுகளில் உள்ள இடைவெளியைக் குறைப்பதை ‘ஹீலியோஸ்’ ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் மூன்று முக்கிய இனக்குழுக்களான சீன, மலாய், இந்தியர்களை உள்ளடக்கிய 10,000க்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே ஆய்வின் முதல் கட்டத்தில் கலந்துகொண்டனர். தற்போது, இரண்டாம் கட்டத்தில், 30 முதல் 84 வயதுக்குட்பட்ட 50,000 சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களைப் பங்கேற்கச் செய்வது ஆய்வின் இலக்கு.
“இந்த ஆய்வில் சேகரிக்கப்படும் தனிப்பட்ட, விரிவான தரவு சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் ஆசியா முழுவதிலும் பரவலாகக் காணப்படும் நோய்கள் ஏற்படுவதற்குச் சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, மரபணுக் காரணிகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும்,” என்று தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ஜான் சேம்பர்ஸ் கூறினார்.
பலதரப்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டால், சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் நாட்பட்ட நோய்களை மேலும் சிறப்பாக முன்கூட்டியே கணிப்பதற்கும் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வலுவடையும் என்று அவர் விளக்கினார்.
மேலும், இதனால் சிங்கப்பூரர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றும் பேராசிரியர் ஜான் சொன்னார்.
‘ஹீலியோஸ்’ ஆய்வில் பங்கேற்பவர்கள் மூன்று முதல் ஐந்து மணி நேரம்வரை நீடிக்கும் விரிவான நேரடிச் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதில், ரத்தமும் சிறுநீரும் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்படும். மேலும், எலும்புகளுக்கும் கண்களுக்குமான ‘ஸ்கேன்’, இதயச் செயல்பாடு, சுவாசச் செயல்பாடு ஆகியவற்றுக்கான சோதனை, தோல், உடலியல் சோதனை முதலியவையும் மேற்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஆய்வின் மற்றோர் அங்கத்தில், பங்கேற்பாளர்கள் தங்களது உணவுமுறை, வாழ்க்கைமுறை, மனநலம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
பரிசோதனை முடிந்ததிலிருந்து இரு மாதங்களுக்குள், ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தனிப்பட்ட சுகாதார அறிக்கை வழங்கப்படும். இத்துடன் பங்கேற்பாளர்களுக்கு நன்றி கூறும் வகையில் சிறிய தொகை நினைவுப் பரிசாக வழங்கப்படும்.
பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மறைக்கப்படும். மேலும் இந்த ஆய்வு கடுமையான தரவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது.
“ஐந்தாம் தலைமுறைச் சிங்கப்பூரராக, சமூகத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு எனக்குள் ஏற்பட்டது. ‘ஹீலியோஸ்’ ஆய்வில் பங்கேற்றது எனது சொந்த நல்வாழ்வைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவியதோடு, சமூகத்திற்கு திருப்பித் தரும் ஒரு வழியாகவும் அமைந்தது,” என்றார் ஆய்வில் பங்கேற்ற, உருமாற்றம், வர்த்தக மேம்பாட்டு வல்லுநர் அர்ஜுன ராஜ், 40.
குழந்தைப் பருவத்தில் வோல்ஃப்-பார்கின்சன்-ஒய்ட் நோய்க்குறி (Wolff-Parkinson-White syndrome) கண்டறியப்பட்ட அவருக்குக் குடும்பத்தில் புற்றுநோய், இதய நோய் வரலாறும் இருப்பதாகச் சொன்னார். அதனால், வயதாகும்போது தனது உடல்நிலையை மேலும் கவனிப்பதற்கு உந்துதல் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
“இந்த முடிவுகள் எனது வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கங்கள், நான் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறேன், மன அழுத்தத்தை நிர்வகிக்கும் முறைகள் முதலியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்கு உதவியுள்ளன,” என்று அவர் கூறினார்.
தேசிய அளவில் நடைபெறும் இந்த ஆய்வில் பங்கேற்று, உடல்நலம் குறித்த மேல் விவரங்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் https://healthforlife.sg என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.