கடந்த ஜூலை 19ஆம் தேதியன்று அமெரிக்க இணையப் பாதுகாப்பு நிறுவனமான ‘க்ரவுட்ஸ்ட்ரைக்கின்’ செயலிழப்பால் ஆயிரக்கணக்கான கணினிச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டபோது, 32 வயதான திரு எரிக் டெங் குழப்பமடையவில்லை.
அதனைத் தனது சக தொழில்நுட்ப ஊழியர்கள் சரிசெய்துவிடுவார்கள் என நம்பினார்.
ஆனால் அவர் தனது வருங்கால மனைவியை நினைத்து அச்சமடைந்தார்.
“எனது பணியிடத்தில் இணையம் செயலிழந்தபோது, அதுகுறித்து அதிகம் யோசிக்கவில்லை” என்றார் உள்ளூர் தளவாட நிறுவனத்தின் திட்ட மேலாளரான எரிக்.
“இது ஒரு வழக்கமான இணையச் செயலிழப்பு என்று நான் உணர்ந்தேன். அதனை உரிய ஊழியர்கள் இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பார்கள் எனவும் நினைத்தேன்” என்றார் அவர்.
ஆனால் கட்டிடப் பொறியாளரான அவரது வருங்கால மனைவி, 30, தனது விடுப்பு நாளான அன்று, வீட்டில் திரு டெங்கின் கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
அதனை நினைத்துதான் அவர் கவலை கொண்டார். ஏன்? அவருக்கு வாரத்தில் குறைந்தது மூன்று முறை, திருடப்பட்ட கடவுச் சொற்களை மீட்டெடுக்கச் சொல்லும் போலி இணைப்புகளுடன் கூடிய மோசடி மின்னஞ்சல்கள் வருவது வழக்கமாகியுள்ளது.
“இதுபோன்ற இணையச் செயலிழப்புச் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இவ்வாறான மின்னஞ்சல்கள் வந்தால் அவர் அதனுள் நுழைந்து விடுவார் என பயந்தேன்” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அவரைக் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டபோது அவ்வாறு எதுவும் நிகழ்திருக்கவில்லை என்பதில் மனநிம்மதி அடைந்தேன்” என்றும் சொன்னார்.
நிலைத்தன்மையில்லா நேரத்தில் கவலை
திரு டெங்கின் கவலை சரியானது தான். இவ்வாறான நிச்சயமற்ற சூழலை மோசடிக் கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார் சிங்கப்பூர் காவல்துறையின் மோசடிப் பொதுக்கல்வி அலுவலகத்தின் உதவி இயக்குநரான காவல்துறை கண்காணிப்பாளர் மேத்யூ சூ.
பரவலான, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் இதுபோன்ற நிகழ்வுகளை மோசடிக் கும்பல் பயன்படுத்தி பலரை தங்கள் வலையில் விழ வைக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
இச்சூழலில், அந்நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட தகவல்கள் மூலம் பயனர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைத் திருடும் போலி இணைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்புண்டு என்றார் அவர்.
‘ஃபிஷிங்’ எனும் தூண்டிலிடும் போலி மின்னஞ்சல்களின் பொது அறிகுறிகள்:
- முன்பின் தெரியாத, தெளிவற்ற மின்னஞ்சல்களிலிருந்து வரும் செய்திகள், படங்கள், விளம்பரங்கள், அதிலிருக்கும் இணைப்புகள்.
- பெயர் தெளிவாக இல்லாத, சீரற்ற இணையதள முகவரிகள் கொண்ட மின்னஞ்சல்கள் (www.m1cr0soft.1234.com.co போன்றவை)
- இணையதள முகவரித் தேடல் பட்டியில் (Search Bar) பூட்டு போன்ற சிறு குறி இல்லாத இணைய முகவரிகள், ‘https://’ குறியீடு இல்லாத முகவரிகள்
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் மறை சொற்கள், தனிப்பட்ட, வங்கி விவரங்களைப் பதிவிடச் சொல்வது
- அதிகாரபூர்வ தளங்களான ‘ப்ளே ஸ்டோர்’ ‘ஆப் ஸ்டோர்’ ஆகியவற்றில் இல்லாத மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டுவது
இந்த ‘க்ரவுட்ஸ்ட்ரைக்’ செயலிழப்பு மட்டுமின்றி, மோசடி நபர்கள் பயன்படுத்திக்கொள்ளும் இதர வாய்ப்புகள்.
- சிடிசி பற்றுசீட்டுகள்: மோசடிப் பேர்வழிகள் ஜனவரி மாதம் சமூக மேம்பாட்டு மன்றங்களின் பற்றுச்சீட்டுகள் விநியோகத்தைப் பயன்படுத்தி, அவற்றையும் பிற தகவல்களையும் திருட, போலி இணைப்புகளை பயன்படுத்தி தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு தொடர்பு கொண்டனர்.
உண்மையான சிடிசி பற்றுசீட்டுகள் ‘ரிடீம் எஸ்ஜி’-இன் அதிகாரபூர்வ இணைப்புகள் (go.gov.sg/cdvc அல்லது voucher.redeem.gov.sg) மூலம் மட்டுமே வழங்கப்படுகின்றன.
- ஜிஎஸ்டி பற்றுசீட்டுகள்: போலியான பொருள், சேவை வரி பற்றுசீட்டுகள் தொடர்பான செயலி மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மோசடி நபர்கள் பயனர்களின் திறன்பேசியில் ஊடுருவி தகவல்களைத் திருட முயற்சித்தனர்.
ஜிஎஸ்டி பற்றுசீட்டுகள் ‘பேநவ்’ மூலம் அல்லது வங்கிக் கணக்கில் நேரடியாக மட்டுமே செலுத்தப்படும். ‘மெடிசேவ்’ ஜிஎஸ்டி பற்றுசீட்டுகள் மத்திய சேமநிதி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
- வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) 2024: ஏப்ரல் மாதம், வரவு செலவு நடவடிக்கைகளுக்கான தகுதியைச் சரிபார்ப்பதாகச் சொல்லி, போலியான செயலியும், இணைப்புகளும், டெலிகிராம் எனும் தகவல் பரிமாற்றத் தளம் மூலம் பலருக்கு அனுப்பப்பட்டது.
நிதி அமைச்சு அதன் mof.gov.sg/singaporebudget இணையதளத்தில் பட்டியலிட்டுள்ள அதிகாரபூர்வ தளங்கள் மூலம் மட்டுமே செய்திகளை அனுப்புகிறது.
- வரி: இவ்வாண்டின் தொடக்கத்தில் மோசடிப் பேர்வழிகள் அதிகாரிகள் அனுப்புவது போன்ற மின்னஞ்சல்கள் அனுப்பி ஆறு பயனர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடியுள்ளனர்.
உண்மையில் ‘Tax Refunds’ பயனர்களின் ‘பேநவ்’ மூலம் அல்லது வங்கிக் கணக்கில் நேரடியாக மட்டுமே செலுத்தப்படும்.
சொடுக்கும் முன் கவனித்துக்கொள்ளுங்கள்
ஸ்கேம்ஷீல்டையும் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்கவும்
- ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்து மோசடி அழைப்புகளிலிருந்தும் குறுஞ்செய்திகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
- அதிகாரபூர்வ செயலி ஸ்டோர்களிலிருந்து மட்டும் செயலிகளைப் பதிவிறக்கவும்.
- இரண்டு அல்லது பல அடுக்கு உறுதிப்பாட்டை வங்கி, சமூக ஊடக, சிங்பாஸ் கணக்குகளுக்கு அமைத்துக்கொள்ளவும்.
- ‘பேநவ்’, ‘பேலா’ உட்பட இணைய வங்கி பரிமாற்றங்களுக்கு பரிவர்த்தனை உச்ச வரம்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அமைத்துக்கொள்ளவும்.
மோசடிக்கான அறிகுறிகளை அடையாளம் காணவும்
- தெரியாதவரிடமிருந்து பணம் மாற்றிவிடும்படியோ கட்டணம் செலுத்தும்படியோ இணைப்புகள் அல்லது க்யூஆர் குறியீடுகள் வந்தால் அவற்றை பயன்படுத்தவேண்டாம். போலி வங்கி இணையத்தளங்களாக இருக்கக்கூடும்.
- தனிப்பட்ட தகவல்கள், சமூக ஊடகக் கணக்குகள், இணைய வங்கி கணக்கு விவரம், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் முதலியனவற்றை எவரிடமும் பகிரவேண்டாம்.
- இணைப்புகளையும் இணையப்பக்கங்களையும் சரியானதா என உறுதிப்படுத்தவும்.
- உங்களின் நிலை மோசடியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டால் 1800-722-6688 எனும் எண்ணில் மோசடித் தடுப்பு உதவியை நாடுங்கள்.
அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்
- மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் உடனே தெரிவித்து காவல்துறையிடம் புகாரளியுங்கள்.
- ஆக அண்மைய மோசடி தடுப்பு ஆலோசனைகளுக்கு தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் ScamAlert வாட்ஸ்அப் பக்கத்தைப் பின்தொடர்ந்து அதனை குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிருங்கள்.
சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது.