சிங்கப்பூரின் மையப் பகுதிகளின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், அங்கு வாழ்ந்த, பணியாற்றிய மக்களின் கதைகளையும் தெரிந்துகொள்ளும் விதமான மூன்று மரபுடைமைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதைகள், சிங்கப்பூர் நதியின் வடக்குப் பகுதி முதல், பிராஸ் பாசா, பாடாங் எனப் பல்வேறு இன மக்கள் வாழ்ந்து துடிப்புமிக்கதாகத் திகழ்ந்த இடங்களின் கதைகளை விவரிக்கின்றன.
1999ல் தொடங்கப்பட்ட ஆகப் பழமையான இந்த மரபுடைமைப் பாதை, இரண்டாவது முறையாக மறுவடிவம் பெற்று பல்லின மக்களின் சொல்லப்படாத கதைகளைக் கொண்டாடுகிறது.
இளையர்களை ஈர்க்கும் வண்ணம் சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வசதியாக அணுகும் வகையில் இப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கழகத்தின் கல்வி, சமூக நலத்திட்டங்கள் பிரிவின் இயக்குநர் ஜெரால்ட் வீ கூறினார்.
‘தேசத்திற்கான பயணம்’ எனும் முதல் பாதை தற்போது சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் ஒரு பகுதியாக உள்ள அப்போதைய சிட்டி ஹாலில் தொடங்கி பாடாங், எஸ்பிளனேட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளின் வழியே முந்தைய எம்பிரஸ் பிளேஸ் கட்டடத்தில் (இப்போதைய ஆசிய நாகரிக அரும்பொருளகம்) முடிவடையும். ஆறு இடங்களை உள்ளடக்கிய 550 மீட்டர் நீளம் கொண்ட இப்பாதையை அரை மணி நேரத்தில் பார்த்து முடிக்கலாம்.
‘மையப் பகுதியின் செயல்பாடுகள்’ எனும் இரண்டாவது பாதை அப்போதைய ‘ஃபுல்லர்ட்டன்’ கட்டடத்தில் தொடங்கி சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் முடிவடையும் 2.2 கிலோமீட்டர் நீளமுள்ள பாதை, எட்டு இடங்களை உள்ளடக்கும்.
‘நற்பேற்றினைத் தேடுதல், புதிய வாழ்க்கையை உருவாக்குதல்’ எனும் ஆறு இடங்களை உள்ளடக்கிய ஒரு கிலோமீட்டர் நீளப் பாதை, செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் தொடங்கி ஆர்மேனியன் ஸ்திரீட்டில் முடிவடையும்.
1950 முதல் 1980கள் வரை உணவு, பொழுதுபோக்கு என, குடும்பத்தினர், நண்பர்களுடன் அப்பகுதியில் நேரம் செலவிட்ட பலரது கதைகளும் இப்பாதைகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
தொடர்புடைய செய்திகள்
இப்பாதைகளுக்கான ஊடக அறிமுக நிகழ்ச்சியில், கடந்த 1963 முதல் 1990கள் வரை ஸ்டாம்ஃபர்ட் ஹவுசில் ‘பாபி-ஓ’ எனும் பல்பொருள் அங்காடியை நடத்தி வந்த லால்வானி குடும்பத்தைச் சேர்ந்த ஷாலினி, தாம் அப்பகுதிகளில் சிறுமியாகச் சுற்றித் திரிந்த கதைகளைப் பகிர்ந்தார்.
“எனது மனத்துக்கு நெருக்கமான கதைகளைப் பலருடன் பகிர வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் அவர்.
இசைத் தட்டுகள் விற்பனை முதல் ‘காமிக்ஸ்’ வெளியீடு வரை மேலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டோரும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்தனர்.
இவற்றை அடுத்த தலைமுறை இளையர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில், கழகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் திரு வீ சொன்னார்.
ஆங்காங்கே விளக்கப் பதாகைகளுடன் சுயமாகச் சுற்றிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ள இப்பாதைக்கு, எஸ்ஜி60 முன்னிட்டு செப்டம்பர் 27 முதல் டிசம்பர் இறுதிவரை வழிகாட்டியுடன் கூடிய சுற்றுப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.