செய்தியை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பது செய்தித்தாள். செய்தித்தாளையே மக்களுக்குக் கொண்டுசேர்ப்பவர் விநியோகிப்பாளர்.
ஊரே தூங்கும் வேளையில் துயில் களைந்து அதிகாலை 3 மணிக்கே செய்தித்தாள் கட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் இடங்களுக்கு அவர்கள் சென்றுவிடுகின்றனர். அங்கிருந்து வீடு வீடாகப் பத்திரிகைகளை விநியோகித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பும்போது சூரியன் உதித்திருக்கும்.
தொடக்கக் கால நினைவுகள்
1950களிலிருந்து இன்றுவரை நாள் தவறாமல் தன் தம்பியுடன் செய்தித்தாளை விநியோகித்து வருகிறார் 87 வயது திரு இராசு சாமிக்கண்ணு. அவர் 1956 முதல் அச்சுக்கோப்பவராகவும் 1958 முதல் லைனோ இயந்திரம் இயக்குபவராகவும் ஸ்டார் பிரஸ்ஸில் பணியாற்றினார்.
சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரான இவர், சங்கத்தின் ஆக மூத்த உறுப்பினர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
“1950களில் தமிழ் முரசு பிற்பகல் 2 மணிக்கு வெளிவரும் இதழாக இருந்தது. அதை பியுபி ஊழியர்கள் தங்கள் நண்பகல் உணவு இடைவேளையின்போது சென்று பெற்றுக்கொண்டு வீடு வீடாகச் சென்று விநியோகிப்பார்கள்,” என்றார் திரு சாமிக்கண்ணு.
தாம் தொடங்கியபோது ரிவர் வேலி சாலையில் அமைந்திருந்த டைம்ஸ் ஹவுஸுக்கு மிதிவண்டியிலேயே சென்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சீன, மலாய் நாளிதழ்களைப் பெற்றுக்கொண்டு டெல்டா சாலையில் விநியோகித்துவந்தார்.
“அப்பொழுதெல்லாம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசு நாளிதழ்களெல்லாம் விலை 15 காசுதான். விநியோகிப்பாளராக நான் 12 காசுக்கு வாங்கினேன். அதனால் ஓர் இதழ் விற்றால் மூன்று காசு லாபம். அன்றாடம் 100 இதழ்கள் விற்போம். மாதம் $100 ஈட்டலாம்,” என்றார் திரு சாமிக்கண்ணு.
“1960களில் பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டபோது செய்தித்தாள் விற்பனை கூடியது. அப்போது ஒரு நாளுக்கு 300 செய்தித்தாள்கள்கூட விற்றேன். பல இடங்களிலும் மின்தூக்கி இல்லாததால் ஏறி இறங்கி விநியோகிக்க வேண்டியிருந்தது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அப்பொழுதெல்லாம் விநியோகிப்பாளர்களுக்கிடையே போட்டித்தன்மையால் சண்டைகள்கூட ஏற்படும்; கும்பல் தொடர்புகளும் இருந்தன.
“எஸ்பிஎச் நாளிதழை ஏற்று நடத்தியபின்புதான் விநியோகத்தில் ஓர் ஒழுங்கு வந்தது,” என்றார் அவர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தித்தாளை விநியோகித்து வந்துள்ளார் திரு ராம வைத்திலிங்கம், 62.
“அப்போதெல்லாம் செய்தித்தாள் கனமாக இருந்தது. 400 பக்கங்கள்கூட வந்துள்ளன. அதனால் செய்தித்தாளைத் தரைவீடுகளில் வீசுவது கடினமாக இருக்கும். அப்போது 4, 5 மணிக்கு வரும். இப்போது 3, 3.30 மணிக்கே செய்தித்தாள் வந்துவிடுகிறது. 6 மணிக்குமேல் போக்குவரத்து அதிகரித்துவிடுவதால் புகுந்து செல்வது சற்று சிரமமாக இருக்கும்,” என்று திரு வைத்திலிங்கம் விவரித்தார்.
சிலர் நேரடியாக எஸ்பிஎச்சுக்கே சந்தா கட்டினாலும், பல இடங்களுக்கும் மாத இறுதியில் சென்று சந்தாக் கட்டணத்தை வசூலிப்பதும் விநியோகிப்பாளரின் பொறுப்பாக இருந்தது.
“முன்பு அன்றாடம் 300 செய்தித்தாள்களை விநியோகித்தேன். இப்போது 1,000 செய்தித்தாள்களை விற்கிறேன். இடையே அதற்கும் மேலாக விற்பனையாகியது. வருமானம் நன்றாக இருந்தது,” என்றார் திரு வைத்திலிங்கம்.
ஜெயலலிதா தேர்தலில் வென்றபோது கிட்டத்தட்ட 30,000 பிரதிகள் விற்பனையானது தமிழ் முரசின் வரலாற்றிலேயே ஆக அதிகமாக இருந்தது.
குடும்பத் தொழில்
செய்தித்தாள் விநியோகிப்பாளர்களில் பலரும் தங்கள் தந்தையர் வழியில் அத்துறையில் நுழைந்தனர்.
சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சி ஜெயகுமார், 40 ஆண்டுகளாக செய்தித்தாள் விநியோகித்த தம் தந்தையிடமிருந்து 1985ல் அத்தொழிலை ஏற்று நடத்தினார்.
“அப்பொழுதெல்லாம் 8,000-10,000 நாளிதழ்கள்கூட விற்றோம்,” என்றார் அவர்.
“என் தந்தை நெடுங்காலம் பீப்பள்ஸ் பார்க்கில் நாளிதழ்களை விநியோகித்தார். நான் உயர்நிலைப் பள்ளிவரை உதவினேன். என் தந்தை எனக்காகச் சிறிய மிதிவண்டி ஒன்றை வாங்கினார். அதில் சென்று நான் செய்தித்தாள் விநியோகித்தேன்,” என்றார் 66 வயதாகும் ரெத்தினகுமார் சொக்கலிங்கம். 1980 முதல் இன்றுவரை அவர் தன் சொந்த வணிகமாக நாளிதழ்களை விநியோகித்து வருகிறார்.
கடந்த 40 ஆண்டுகளாக எஸ்பிஎச் செய்தித்தாள்களை விநியோகித்து வருகிறார் திரு கோவிந்தசாமி ராஜாராம், 77. தம் நான்கு பெண்களையும் பள்ளி பருவத்திலேயே தன்னுடன் விநியோகத்துக்கு அழைத்துவந்தார். “கஷ்டம் என்றால் என்ன, அப்பா எப்படிச் சம்பாதிக்கிறார் என அவர்களுக்கு உணர்த்த விரும்பினேன்,” என்றார் அவர்.
இன்று தன் மகள்கள் தத்தம் துறைகளில் இருந்தாலும், உதவி தேவைப்பட்டால் மருமகன்களும் அவர்களும் உதவுவார்கள் என்று திரு ரெத்தினகுமார் கூறினார்.
புதிய சவால்கள்
இணையம் வந்தபின் உலகம் முழுவதும் செய்தித்தாள் விற்பனை சவால்களைச் சந்தித்துள்ளது.
அக்காலத்தில் வீடுகள், ஒட்டுக்கடைகள், ஹோட்டல்கள் போன்ற பலவற்றுக்கும் செய்தித்தாள்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால், இன்றோ பல ஒட்டுக்கடைகளும் மூடப்பட்டுவிட்டன.
“இளையர்களும் செய்தித்தாளை வாங்குவதில்லை என்பதால் புதிய குடியிருப்புப் பேட்டைகளில் குறைவான செய்தித்தாள்களையே விநியோகிக்கிறோம்,” என்கிறார் திரு ரெத்தினகுமார்.
எனினும், 7-11, சியர்ஸ், என்டியுசி போன்றவற்றின் கிளைகள் எங்கெல்லாம் புதிதாகத் திறக்கின்றனவோ அங்கெல்லாம் தமிழ் முரசு செய்தித்தாள் கிடைக்கிறது. அண்மைக்காலமாக ஷெங் சியோங், பிரைம் பேரங்காடிகளிலும் தமிழ் முரசு கிடைக்கிறது, என்றார் தமிழ் முரசின் விநியோக மேலாளர் கே.ஏ.டபிள்யு. ஹாஜா, 76. அவர் தம் 21 வயதில் டைம்ஸ் ஹவுஸில் விற்பனைத் துறையில் சேர்ந்தார்.
முன்பு கோயில்கள் தங்களின் பக்தர்களுக்காக அதிக செய்தித்தாள்களை வாங்கின. மீண்டும் அத்தகைய திட்டத்தைத் தொடங்க தமிழ் முரசு முயல்வதாகவும் அவர் கூறினார்.
ஊழியர் பற்றாக்குறை மற்றொரு சவால்.
“இப்பொழுது பலரும் வேறு துறைகளுக்குச் செல்கின்றனர். நாம் இப்போது வீட்டுக்கு வீடு சென்று விநியோகிப்பதற்குப் பதிலாக அஞ்சல்பெட்டியிலேயே போட்டுவிடுவதால் குறைவான ஊழியர்களே தேவைப்படுகின்றனர்; நேரமும் மிச்சமாகிறது,” என்றார் சிங்கப்பூர் செய்தித்தாள் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சி ஜெயகுமார்.
அஞ்சல் பெட்டி வழியாக விநியோகிப்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளதாகவும் கீழே வரமுடியாத முதியோருக்கு எஸ்பிஎச் உதவுவதாகவும் திரு ஹாஜா தெரிவித்தார்.
புதிய நிரந்தரவாசிகள் தற்போது ஆர்வத்துடன் இத்துறையில் நுழைவதைக் காணமுடிவதாகக் கூறிய திரு ஜெயகுமார், ஆயினும் பலர் தாங்கள் விற்கக்கூடிய அளவிற்கே பத்திரிகைகளை வாங்கி விற்கின்றனர் என்றார்.
அடுத்த தலைமுறையில் தமிழும் தமிழ் முரசும்
மாணவர்களுக்குத் தமிழைக் கொண்டுசெல்ல பள்ளிகளுக்குத் தமிழ் முரசு நன்கு ஆதரவளிப்பதாகத் திரு ஹாஜா கூறினார்.
“திங்கட்கிழமைகளில் மாணவர் முரசு வெளியாவதால் தமிழ் முரசு நன்கு விற்பனையாகிறது. பள்ளி விடுமுறை நாள்களில்கூட பெற்றோர் தம் பிள்ளைகளுக்காகத் தமிழ் முரசை வாங்குகிறார்கள். கல்வி அமைச்சின் ஆதரவுடன் பாலர் முரசும் 2017ல் தொடங்கப்பட்டது,” என்று அவர் சொன்னார்.
கூடிய விரைவில் கிட்டத்தட்ட 150 செய்தித்தாள் விற்பனை இயந்திரங்களிலும் தமிழ் முரசு செய்தித்தாள் கிடைக்கும் என்றார் திரு ஹாஜா.

