ஒலிவாங்கியின் பின்னாலிருந்து முகமறியா நேயர்களோடு உரையாட உதவும் வானொலிப் பணிதான் தமக்கு மிகவும் விருப்பமானது என்று கூறியுள்ளார் பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளரான திரு பி.எச்.அப்துல் ஹமீது.
இலங்கை வானொலி அறிவிப்பாளர் என்ற புள்ளியில் தொடங்கி, உழைப்பாலும் திறமையாலும் பல்வேறு துறைகளில் உச்சம் தொட்டு, உலகத் தமிழர்களின் இதயங்களில் ‘அன்பு அறிவிப்பாளர்’ என்ற அடைமொழியுடன் தம் பெயரைப் பொறித்த திரு ஹமீது, தமிழ் முரசின் ஆய கலை அரிய கலைஞர் வலையொளித் தொடருக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார்.
தமிழ்மொழியை அடுத்த தலைமுறையினரின் சிந்தைக்குக் கொண்டுசெல்லும் மிகப் பெரிய பொறுப்பை ஒலிபரப்பாளர்கள் புரிந்துகொண்டு எப்போதும் அதை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தாய்மொழி என்பது ஒரு குழந்தையின் தாய் பேசிய மொழி அல்லது தந்தை பேசிய மொழி எனக் கருதக்கூடாது. கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்னும், தன்னைச் சுற்றி ஒலிக்கும் மொழியைக் கேட்டு, உள்வாங்கி, பின் அந்த மொழியைக் குழந்தை பிரசவிக்கிறது. அதனால் மொழி அந்தக் குழந்தையைத் தாயாக்குகிறது என்று கவிஞர் அப்துல் காதர் கூறியிருப்பதை நினைவுகூர்ந்தார்.
மூத்த ஒலிபரப்பாளர்கள் சம வயதினரைப்போல் தம்மை நடத்தியது வளர்ச்சிக்கு வித்திட்டது என்றும் தேடித் தேடிப் புதுமையைப் புகுத்த வேண்டும் என்ற இலக்கு தமக்கு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம் இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிராத காலகட்டத்தில் ரயிலில் பதிவு செய்த நாடகம், இந்திய-இலங்கைக் கலைஞர்களை இணைத்து ஒலிபரப்பிய நாடகம், தற்காலத் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி, கொவிட்-19 பெருந்தொற்று நேரத்தில் இணையவழி இன்னிசைக் கச்சேரி நடத்திய அனுபவங்களைத் திரு ஹமீது பகிர்ந்துகொண்டார்.
வேடிக்கை நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட அதன் வழியாகவும் சாமானிய மக்களுக்கு மொழி இலக்கணத்தைக் கொண்டுசெல்கிறோம் என்ற பொறுப்புணர்வுடன் நிகழ்ச்சிகள் படைத்ததை அவர் விவரித்தார்.
படைப்பாளராகத் தாம் பெற்ற பயிற்சிகளைக் கடைப்பிடிப்பது மட்டுமன்றி தாம் சந்தித்த ஒவ்வொருவரிடமிருந்தும் தொழில் சார்ந்த பல்வேறு நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து நடைமுறைப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் என்பதை உணர்த்தும் சம்பவங்களை எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் வாசிப்பு மிக அவசியம் என்றார் அவர்.
வானலைகளில் ஒரு வழிப்போக்கன் என்ற தலைப்பில் தமது வானொலிப் பணி அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்டது பற்றிப் பேசியபோது, தமது சிந்தனை ஓடும் வேகத்திற்கு விரல்கள் ஒத்துழைக்காததால், ஆற்றொழுக்காய்ப் பேசினாலும் அந்தக் கருத்துகளை எழுத்துவடிவில் படைக்கும் முயற்சியைப் பல காலம் தள்ளிப் போட்டதாய்க் கூறினார்.
‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனிடமும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனிடமும் தாம் கண்டு வியந்த அம்சங்களையும் தாமும் பின்பற்ற விரும்பும் அம்சங்களையும் திரு ஹமீது குறிப்பிட்டார்.
தமிழக ஊடகங்களில் நிகழ்ச்சி தொகுப்போரின் நாவில் தமிழும் ஆங்கிலமும் கலந்து பயன்படுத்தப்படுகிறது அல்லது தமிழ் வெறும் இணைப்புச் சொற்களுக்கு மட்டுமே பயன்படுகிறது என்ற கவலையை அவர் பதிவுசெய்தார்.
உயர்கல்வித் துறையில் தமிழின் நிலை உயர வேண்டும். அந்த மாற்றம் தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபடுவதே தமது எதிர்காலத் திட்டம் என்றார். அதற்கு உரம் சேர்க்கும் விதமாக, 1815ஆம் ஆண்டு கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் நோக்குடன் அமெரிக்காவிலிருந்து இலங்கை சென்ற மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் (Samuel Fisk Green), மருத்துவக் கல்விக்கான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியது, ‘தமிழர்க்குத் தொண்டாற்றியவர்’ என்ற வாசகத்தைத் தமது கல்லறையில் பொறிக்கச் சொன்னது போன்ற அரிய தகவல்களையும் குறிப்பிட்டார்.
திரு பி.எச். அப்துல் ஹமீதுடனான சிறப்பு நேர்காணல் இடம்பெறும் வலையொளி நிகழ்ச்சி இரண்டு பகுதிகளாகத் தமிழ் முரசின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.