மனிதர்களுக்கு வியக்கத்தக்க பல அற்புதங்களை இயற்கை தந்துள்ளது. அதில் மிகச்சிறந்த ஒன்றுதான் தேன்.
பண்டைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தேன், அதன் சுவை, மணம், வளமான மருத்துவக் குணங்கள், சுகாதார நன்மைகள் காரணமாக மனிதர்களின் வாழ்வியலில் பழங்காலம் முதல் இன்றுவரை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் ‘குறிஞ்சிப் பூவின் தேன்’ பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இன்று, உலகளாவிய ஆராய்ச்சிகள் இதன் நன்மைகளை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளன.
தேன் பல்வேறு பூக்களிலிருந்து சேகரிக்கப்பட்டு தேனீக்களால் தயாரிக்கப்படுவதால் எண்ணற்ற பயன்களை நமக்கு அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேன் ஒரு சிறந்த மருந்தாகும். தேன் சாப்பிடுபவர்களுக்கு ஆயுள் அதிகம் என்றே சொல்வார்கள்.
அதுமட்டுமல்லாமல், உலகிலேயே அதிக ஆண்டுகள் கெடாமல் இருக்கும் ஒரே உணவுப்பொருள் தேன்.
ஆரோக்கியப் பலன்கள்
தேன் இயற்கையான தன்மையுடன் செயல்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றுடன் கலந்து சாப்பிடும்போது உடல் எடை குறைகிறது. உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இருமல், தொண்டை வலி போன்றவற்றிற்குத் தேன் பயன்படுகிறது.
மேலும், தேன் மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்து தூக்கத்தை மேம்படுத்துகிறது. இதய நோயையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் தன்மையையும் இது கொண்டுள்ளது.
தினமும் காலையில் வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும். இரவில் பாலுடன் சேர்த்து குடித்தால் நல்ல உறக்கம் கிடைக்கும். சருமத்தில் பூச்சு மருந்தாகவும் காயங்களை ஆற்றவும் தேனைப் பயன்படுத்துவதும் வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
சில தேன் வகைகள்
குறிஞ்சித் தேன்: நீலகிரி மலைகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் நீலக் குறிஞ்சிப் பூவிலிருந்து சேகரிக்கப்படும் தேன், ‘திரவத் தங்கம்’ எனப் பெயர் பெற்றது. ஆன்டிஆக்சிடன்ட் சத்துகள் நிரம்பியது இது.
மலைத் தேன்: மலையில் உள்ள மூலிகைச் செடிகள் மற்றும் பூக்களில் உள்ள தேனைச் சேகரித்து, செங்குத்தான பாறைகளில் தேனீக்கள் கூடு கட்டும். இது பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வாழும் மக்களால் சேகரிக்கப்படும்.
கொசுவந்தேன்: மரப்பொந்துகளில் தேனீக்களால் உருவாக்கப்படும் இது, சிறப்பு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தேன்கூட்டைக் கட்டும் தேனீக்கள் மிகச் சிறியவையாக இருப்பதால் இந்தப் பெயரைக் கொண்டுள்ளது.
முருங்கைத் தேன்: முருங்கை மரம் பண்ணைகளில் தேனீக்கள் சேர்க்கும் தேன் வகைதான் இது. முருங்கைத் தேன் உடல் சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சி பெற உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
பண்ணைத் தேன்: கூட்டுப் பண்ணை விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் தேனீக்கள் சேர்க்கும் தேன் இது. தேனீக்களின் தேவை போக மீதமுள்ள இந்தத் தேனை, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்வர். உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை நீக்க இது உதவும்.