தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறுசுவை விருந்தெனினும் அளவோடு உண்பது நல்லது

2 mins read
b393d137-5d2d-425b-b572-554521a1b696
உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தீபாவளி உணவுகளைக் கட்டுப்பாட்டோடு உண்ண வேண்டும். - படம்: ஃபிரீபிக்‌

தீபாவளிப் பண்டிகை வந்துவிட்டாலே விதவிதமான பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், பானங்கள் என்று பல்வேறு அறுசுவை உணவு வகைகளை உட்கொள்ள பலரும் ஆவலாக இருப்பர்.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப தீபாவளிப் பண்டங்கள் உண்பதற்குச் சுவையாக இருந்தாலும் அளவுக்கதிகமாக சாப்பிடும்போது அது உடலுக்குக் கெடுதி விளைவிக்கலாம்.

உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தீபாவளி உணவுகளை எப்படிக் கட்டுப்பாட்டோடு உண்ண வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம்.

உணவில் கவனம்

பண்டிகைக் காலப் பரபரப்பில் பலரும் காலை உணவைத் தவிர்த்து விடுவதால் நண்பகல் உணவும் இடையில் நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் சாப்பிடும் அளவு அதிகரிக்கலாம். எனவே, காலை உணவை மறக்காமல் சாப்பிட்டுவிடுங்கள்.

உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்றால் இந்நிலை ஏற்படாமல் தவிர்க்‌கலாம். மேலும், ஆரோக்கியமான, சத்தான உணவுகளை உண்பதும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.

ஒருவருக்குப் பிடித்தமான உணவு வகைகளை உண்ணும்போது அளவுடன் சாப்பிடுவது அவசியம். ஓரளவு கட்டுப்பாட்டோடு இருக்க, தட்டிலிருப்பதைச் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். அதற்குப்பின் மீண்டும் தட்டை நிரப்புவதைத் தவிர்க்கலாம்.

உணவை மெதுவாக, நன்கு மென்று சாப்பிட வேண்டும். எவ்வளவு மெதுவாக உணவை மென்று சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறோம் என்பதிலும் உங்களால் கவனம் செலுத்த முடியும். அதனால், அதிகமாக சாப்பிடும் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலான மக்கள் உணவுண்ட பிறகு, குறிப்பாக இரவு உணவிற்குப் பிறகு உடனே உறங்கச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் சாப்பிட்ட உணவு சரியாகச் செரிமானிக்காமல் போகக்கூடும். ​உண்டதும் படுக்கைக்குச் செல்லாமல், சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்து, உணவு நன்கு செரித்தபின் தூங்கச் செல்லுங்கள்.

செரிமானம் பேணும் பானங்கள்

அதிகப்படியான சர்க்கரையுள்ள பானங்களையும் மதுபானங்களையும் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதோடு செரிமானத்தையும் பாதிக்கும். அதற்கு மாறாக, உணவு உட்கொள்வதற்கு இடையே அதிகளவில் தண்ணீர் குடித்து, உடம்பை நீரேற்றத்துடன் வைத்திருப்பது முக்கியம்.

வயிற்றுவலி ஏற்படும்போது எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீரில் இலவங்கப்பட்டைத் தூளையும் தேனையும் கலந்து குடித்தால், இது செரிமானத்தைச் சீராக்கி, விருந்தின்போது அசௌகரியங்களைத் தவிர்க்க உதவும்.

படுக்கைக்குச் செல்வதற்குமுன்பு வெதுவெதுப்பான நீர் குடிப்பது உணவை எளிதில் செரிமானிக்க உதவும். செரிமான முறையை மேலும் வேகப்படுத்த விரும்பினால் இஞ்சியையும் பெருஞ்சீரகத்தையும் அரைத்து, அவற்றைத் தண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது ஓமத்திராவகம் அருந்தலாம்.

குறிப்புச் சொற்கள்