சுய சந்தேகத்தை நாம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். இது ஏற்படும்போது ஓர் உறுதியற்ற உணர்வு நம்மை ஆட்கொள்வது போல் இருக்கும்.
நமது சொந்தத் திறனைப் பற்றிய தெளிவின்மையையும் அசௌகரியத்தையும் பயத்தையும் இது ஏற்படுத்தி, நாம் இதுவரை எடுத்த முடிவுகளையும் எதிர்காலத்தில் எடுக்கவிருக்கும் முடிவுகளையும் நாமே சந்தேகப்பட இது வழிவகுக்கிறது. இதனால் புதிய முயற்சிகள் எடுக்க தயக்கமும் பயமும் ஏற்படலாம்.
சுய சந்தேகத்தைச் சமாளிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அதன் சுமை மேலும் மேலும் அதிகரித்து, மற்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். அதனால், இதை முளையிலேயே கிள்ளி எறிய முயல வேண்டும்.
சுய விழிப்புணர்வு
சுய சந்தேகத்தைத் தீர்க்கும் முதல் படியாக, நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். “எந்த நேரங்களில் நமக்கு சுய சந்தேகம் ஏற்படுகிறது? இந்தச் சந்தேகம் எதனால் தோன்றுகிறது? நம்முடைய திறமைகளைப் பற்றி யார் கருத்து கூறினாலும், அதை நிரூபிக்க வேண்டும் என்கிற எண்ணமா அல்லது ஏற்கெனவே நடந்த ஒரு தோல்வியால் ஏற்படும் பயமா?,” போன்ற எண்ணங்களைச் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நமது எண்ணங்களை அநேக நேரங்களில் எழுதிக்கொள்வது பயனளிக்கக் கூடியது. இது, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழியாக அமையும்.
நேர்மறை சுய உரையாடல்
நம்முடைய மனத்தில் நிகழ்கின்ற சுய உரையாடல், சுய சந்தேகத்தை வளர்க்கும் அல்லது உடைக்கும் திறனைக் கொண்டுள்ளது. நம்முடைய எண்ணங்களைத் திருத்தி, அவற்றை நம்பிக்கையூட்டும் வகையில் மாற்றியமைக்க முயல வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“என்னால் இதைச் செய்ய முடியும். இதையும் கடந்து செல்வேன்,” போன்ற வரிகளை நினைவில் கொண்டால் நமக்கு தன்னம்பிக்கை வளர உதவும். இதனைப் பழக்கமாக்கினால், நம்முடைய சுய சந்தேகத்தின் சுமையைக் குறைக்கலாம்.
மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தல்
சுய சந்தேகம் பெரும்பாலான நேரங்களில் நம்மைப் பிறருடன் ஒப்பிடுவதால் உருவாகிறது. ஒருவருடைய திறன்களையும் வாழ்க்கைச் சாதனைகளையும் பார்த்து, நம்மை அவர்களுடன் ஒப்பிடும்போது நம்முடைய சொந்தத் திறன்களை இது குறைத்து காட்டுவதுபோல் நாம் உணரலாம். இதனால் நம் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதற்கு மாறாக, நம்முடைய முன்னேற்றத்தை நாமே கணிக்க வேண்டும். நமது சிறிய வெற்றிகளையும் திறமைகளையும் கொண்டாடுவது சுய சந்தேகத்தை முறிக்க துணைபுரியும்.
தோல்வியை வெற்றியாக மாற்றுவது
தோல்வி காணாத மனிதனைக் காண்பது அரிது. ஆனால், நாம் தோல்விகளை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். தோல்வியைக் கண்டு துவளாமல், அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற கருத்தை உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும். இது நம்முடைய சுய சந்தேகத்தைக் குறைப்பதோடு எதிர்கால வெற்றிகளுக்கும் வழிவகுக்கும்.
நேர்மறையான நபர்களுடன் பழகுவது
நாம் யாருடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது நமது வாழ்வில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் எதிர்மறையானவர்களுடன் நேரத்தைச் செலவழித்தால் அது நமது எண்ணங்களுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும்.
நம்மை ஊக்கப்படுத்தி, நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கும் நம்பகமானவர்களுடன் பழகும்போது நமது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம். இவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ, நெருங்கிய நண்பர்களாகவோ, வேலையிடத்தில் சக ஊழியர்களாகவோ இருக்கலாம். மேலும், நமது உணர்வுகளை இவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது அவர்கள் அளிக்கும் ஆதரவு நமது சுய சந்தேகங்களை விலக்கலாம்.
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்
சில நேரங்களில், தன்னம்பிக்கை இல்லாதபோதும், தன்னம்பிக்கை இருப்பதுபோல செயல்படுவது அவசியம். நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொண்டு துணிவுடன் செயல்பட்டால், அது நமக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
நேர்மறையான செயல் மூலம் தன்னம்பிக்கை உருவாகும். தன்னம்பிக்கை மூலம் சுய சந்தேகம் களையும்.

