முதுமையில் ஏற்படும் மறதிநோயின் அபாயத்தைக் குறைக்கும் வழிகள்

முதுமையில் ஏற்படும் மறதிநோயின் அபாயத்தைக் குறைக்கும் வழிகள்

படம்: ‌ஷட்டர்ஸ்டாக்

14 Nov 2026 - 6:00 am

2 mins read

முதுமை அடையும்போது ஏற்படும் மறதி நோயின் ஆபத்தைக் குறைக்க அன்றாட வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளவேண்டிய முக்கியப் பழக்கவழக்கங்களை 25 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த அமெரிக்க இதய, ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் ஜெரமி லண்டன் பகிர்ந்துள்ளார்.

மறதி நோயை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், உடல்நலத்தைச் சீராகப் பராமரிப்பதன் மூலம் நீண்டகால மூளை நலத்தைப் பாதுகாக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

அவர் பரிந்துரைத்த சிலவற்றை இக்கட்டுரை விவரிக்கிறது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது

ரத்த அழுத்தத்தை 130/80க்குக் கீழ் வைத்திருக்க வேண்டும். உடல் எடையைக் குறைப்பதும் வழக்கமான உடற்பயிற்சியுமே இதற்கான முதன்மை வழிகளாகும்.

மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளைத் தேவைப்பட்டால் உட்கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம் மூளைக்கு ரத்தத்தைச் செலுத்தும் நாளங்களைப் பாதிக்கும் என்பதால் இதனைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

பார்வை, செவித் திறனைப் பரிசோதித்தல்

தங்களது பார்வை, செவித்திறனை மூத்தோர் பரிசோதிக்க வேண்டும். தேவையெனில், காது கேட்கும் கருவி அல்லது கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிகிச்சையளிக்கப்படாத கண்பார்வை, செவித்திறன் பிரச்சினைகள் மூளையின் தகவல் செயலாக்கத் திறனைக் குறைக்கும்.

வழக்கமான உடற்பயிற்சி

ஏரோபிக், தசை வலிமைக்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது ரத்த நாளக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதுடன் மூளையின் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

ரத்தச் சர்க்கரை, வளர்சிதை மாற்றம்

ரத்தச் சர்க்கரை அளவு, உள்ளுறுப்பு கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். புகைப்பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் மூளைக்கு ரத்தத்தை விநியோகிக்கும் நாளங்களைப் பாதுகாக்கும்.

மது அருந்துவதைக் குறைத்தல்

மது அருந்துவதைக் குறைந்த அளவில் வைத்துக்கொள்வது இதய, மூளை ஆகிய உறுப்புகளின் நலனுக்கு நன்மை அளிக்கும்.

தலைக் கவசம்

வாகனம் ஓட்டும்போது அல்லது விளையாட்டுப் பயிற்சிகளின்போது தலைக்கவசம் அணிவது நரம்பியல் பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்.

மன அழுத்தத்திற்குச் சிகிச்சை

மனநலமும் அறிவாற்றல் நலனும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால் மன அழுத்தத்திற்கு உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

சமூகப் பிணைப்பும் நல்ல தூக்கமும்

உறவுகளுடன் தொடர்பில் இருப்பது, மூளைக்கு வேலை தரும் செயல்களில் ஈடுபடுவது, போதுமான தூக்கம் ஆகியவை மூப்படைதலின்போது மூளையின் கூர்மையைப் பேண உதவும்.

குறிப்புச் சொற்கள்