சுருள்முடி என்பது இயற்கையின் அழகான படைப்புகளில் ஒன்றாகும். உலக மக்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினரும், அதில் குறிப்பாக தெற்காசிய மக்களிடையே கிட்டத்தட்ட 85 விழுக்காட்டினரும் இயற்கையான சுருள் அல்லது அலையான கூந்தல் உடையவர்கள் என்று கூறப்படுகிறது.
சுருள்முடி அழகான, தனித்துவமான தோற்றம் தருகிறது. அதே வேளையில், அதைப் பராமரிப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம். சுருள் சுருளாக, கட்டுக் கடங்காததாக இருப்பதால் சராசரி முடி பராமரிப்பு முறை இவ்வகை முடிக்குப் பொருந்தாது.
சுருள்முடி உடையவர் களுக்கு, சுருட்டை காரணமாக தலையிலிருந்து உற்பத்தியாகும் இயற்கை எண்ணெய் முடியின் நுனி வரை பரவுவதில்லை. இதனால் முடி எளிதில் வறட்சியாகி சிக்கிவிடுவதும், பிசைந்ததுபோல் காட்சியளிப்பதும் வழக்கம்.
சரியான பராமரிப்பு முறையைப் பின்பற்றினால் சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கலாம்.
தலை குளிப்பதற்கு முன்
சுருட்டை முடி பராமரிப்பில் ஈரப் பதத்தை தக்கவைப்பது முக்கியம் என்பதால், ஷாம்பு பயன் படுத்துவதற்கு முன்பு வாரத்திற்கு ஓரிரு முறை முடியில் எண்ணெய் அல்லது ‘ஹேர் மாஸ்க்’ பயன் படுத்துவது சிறந்தது.
இளஞ்சூட்டில் தேங்காய், திரவ தங்கம் (ஆர்கன்), ரோஸ்மேரி எண்ணெய் வகைகளைத் தலையில் தடவி, ஓரிரு மணி நேரம் ஊறவைத்து குளிக்கலாம். இது நம் முன்னோர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்த ஒரு பழக்கம்.
ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல், தயிர், முட்டை, தேன், வாழைப்பழம் போன்றவற்றை சேர்த்து தலையில் தடவி ஊறவைத்து குளிப்பது முடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
அரிசி ஊறிய நீரைத் தலையில் பயன்படுத்துவது, சுருள் முடியை மேம்படுத்தவும் உச்சந் தலையை சுத்தம் செய்யவும் உதவும்.
தொடர்புடைய செய்திகள்
தலை குளிக்கும்போது
ஷாம்பூ தயாரிப்பில் ‘சல்ஃபேட்’ எனும் வேதிப்பொருள் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இது, தலைமுடியின் இயற்கை எண்ணெய்களை அகற்றி, வறட்சிக்கும் முடி உதிர்வதற்கும் வழிவகுக்கிறது.
சுருட்டை முடி ஏற்கெனவே வறண்ட தன்மையைக் கொண்டுள்ளதால் முடியை மேலும் சேதப்படுத்தாமல் இருக்க சல்ஃபேட் இல்லாத ஷாம்பூவை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன்வழி உச்சந்தலையில் சேரும் அழுக்குகளை அகற்றி அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
சுருட்டை முடி பராமரிப்பில் ‘கண்டிஷனர்’ முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கூந்தலின் ஈரப்பதத்தை நீடிக்கவும் முடியை மென்மையாக வைத்திருக்கவும் உதவும். கண்டிஷனரை கூந்தலின் வேரிலிருந்து நுனிவரை தடவுவதற்குப் பதிலாக இதை நடுவிலிருந்து நுனிவரை மட்டுமே தடவ வேண்டும்.
மேலும், சுருட்டை முடி கொண்டவர்கள் வாரத்தில் இரண்டு, மூன்று முறை தலையைக் கழுவினால் போதும். அடிக்கடி தலையைக் கழுவுவது முடியை மேலும் வறட்சியடையச் செய்யும்.
தலைக்கு குளித்த பின்
சுருட்டை முடி எளிதில் சிக்குவதால், அகலமான பல் கொண்ட சீப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அலசும்போது அல்லது ஈரமாக இருக்கும்போது, கைவிரலால் நிதானமாக சிக்கை நீக்கி, பின் சீப்பு பயன்படுத்தினால் அதிக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
கூந்தலின் ஈரப்பதத்தை நீடிக்கவும் சுருள் வடிவத்தை நீண்ட நேரம் தக்கவைக்கவும் ஈரமாக இருக்கும் முடியில் ‘லீவ்-இன் கண்டிஷனர்’, தலைமுடி ஜெல், தலைமுடி கிரீம் போன்றவற்றை தடவலாம்.
‘ஹேர் ஸ்ட்ரெய்ட்டனர்’, ‘ப்ளோ ட்ரையர்’ போன்ற வெப்பமூட்டும் மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிக வெப்பம் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் முடியை உலர்த்த வேண்டும்.
வெப்பம் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தால், வெப்பப் பாதுகாப்பு ‘ஸ்ப்ரே’யை தலைமுடி முழுவதும் அடித்தபின் ‘டிஃப்யூசர்’ போன்ற சுருள்முடிக்கென்று உருவாக்கப்பட்ட கருவிகளை பயன்படுத்தலாம். டிஃப்யூசர் என்பது வெப்பத்தைச் சமமாக விநியோகிக்க உதவும் ப்ளோ ட்ரையரில் பொருத்தக்கூடிய ஒரு தனி இணைப்பாகும்.
தூங்கும்போது உராய்வால் தலைமுடி சிக்கி உதிரலாம். இதைத் தவிர்க்க, பட்டுத் தலையணையைப் பயன்படுத்தி அல்லது பட்டுத் துணியில் முடியைக் கட்டிவைத்து தூங்கலாம்.
ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை சுருட்டை முடியைத் திருத்தம் செய்தால், முடியின் முனைகளில் உள்ள சேதங்களையும் பிளவுகளையும் நீக்க முடியும். இதனால் முடி உதிர்வது குறைவதோடு முடி வளர்வதும் சீராக இருக்கும்.

