செயற்கை நுண்ணறிவு - இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பம் பலரது பணியிலும் அன்றாட வாழ்விலும் பல்வேறு செயல்பாடுகளிலும் இன்றியமையாத உதவியாளராக மாறியுள்ள நிலையில், தற்போது மனிதர்களின் தனிப்பட்ட வேலைகளையும் எளிதாக்கவுள்ளது.
அதற்கு முன்னோடியாக, ஜப்பான் நாட்டில் துணிகளைச் சுத்தம் செய்யும் சலவை இயந்திரம் போல மனிதர்களைச் சுத்தம் செய்யும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒசாகாவைச் சேர்ந்த அறிவியல் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இக்கருவி, தனிப்பட்ட சுகாதாரத்திலும் நலத்திலும் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் உடலளவிலும் மனத்தளவிலும் முற்றிலும் புத்துணர்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இக்கருவி, வரும் 2025ஆம் ஆண்டு ஒசாகா எக்ஸ்போவில் அறிமுகம் காணவுள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இக்கருவி, உடைகளையும் சலவை செய்வல்லது. அதற்கு 15 நிமிடமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நவீன நீர்ப்பீய்ச்சி, நுண்குமிழ்கள் கொண்டு சுத்தம் செய்யும் வசதியுடன் ஒரு ‘ஸ்பாவில்’ குளிப்பது போன்ற உணர்வை இக்கருவி ஏற்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இதனைப் பயன்படுத்துவோரின் சருமவகை, உடல்வாகு, அளவு, எடை உள்ளிட்டவற்றைக் கணித்து, அவற்றின் அடிப்படையில் எந்த வகையான குளியல், சுத்தம் செய்யும் முறை சிறந்தது என்பதையும் இக்கருவி கண்டறிந்து செயல்படும்.
அப்போதைய மனநிலைக்கு ஏற்றாற்போன்ற அமைதிதரும் காணொளிகளும் திரையில் தோன்றும்.
முன்னதாக, 1970களில் இயந்திரவியல் அடிப்படையில் இயங்கும் இவ்வகை கருவிகள் அறிமுகம் கண்டிருந்தாலும் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாகும் முதல் கருவி இது.
தொடர்புடைய செய்திகள்
சுகாதாரத்திற்கும் மன அமைதிக்கும் தற்போது முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், இந்தக் கருவிக்கு வரவேற்பு இருக்கும் என விஞ்ஞானிகள் குழு நம்புகிறது. இதற்கான முன்பதிவுகளை நிறுவனம் பெறத் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர்.