தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோரையும் ஈர்க்கும் உடற்பயிற்சிக்கூடம்

3 mins read
எனேபிலிங் விளையாட்டு நிதிமூலம் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த விரும்பும் ‘இனர்வேட் ஃபிட்னஸ்’
781803a8-5f99-4a3e-83b0-31308ce1a122
உடற்குறையுள்ளோருக்குக் கைகொடுக்கும் உடற்பயிற்சிக்கூடமாக ‘இனர்வேட் ஃபிட்னஸ்’ திகழ்கிறது. - படம்: மோசஸ் ஜேம்ஸ்

தந்தைக்கு இளம்வயதில் நீரிழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது கால் அகற்றப்பட்டது. அவர் 51வது வயதில் இறந்தார். அப்போது மோசஸ் ஜேம்சுக்கு ஒன்பது வயதுதான்.

அதனால், தம் தந்தையைப் போன்ற உடற்குறையுள்ளோருக்குத் தம்மால் இயன்ற பராமரிப்பைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்தே மோசசின் மனத்தில் இருந்து வந்துள்ளது.

பல்லாண்டுகள் கழித்து மோசஸ், 36, அக்கனவை நனவாக்கினார். 2014ல் தம் தோழர் லைனலுடன் அவர் தொடங்கிய சமூக நிறுவனமான ‘இனர்வேட் ஃபிட்னஸ்’, உடற்குறையுள்ளோருக்கு ஏதுவான உடற்பயிற்சிக்கூடமாகத் திகழ்கிறது. தற்போது அக்கூடம் ஹேம்லிடன் சாலையில் உள்ளது.

பல்கலைக்கழகத்தில் மோசஸ் தாதிமைப் படிப்பை மேற்கொண்டதால் அந்த அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.

2017ல் உடற்குறையுள்ளோருக்கென ‘அடேப்டிவ்ஸ்’ எனும் புதிய திட்டத்தை உடற்பயிற்சிக்கூடம் தொடங்கி சிங்கப்பூருக்கு அதை அறிமுகப்படுத்தியது.

‘இனர்வேட் ஃபிட்னஸ்’ இணை நிறுவனர்கள் மோசஸ் ஜேம்ஸ் (இடது), லைனல்.
‘இனர்வேட் ஃபிட்னஸ்’ இணை நிறுவனர்கள் மோசஸ் ஜேம்ஸ் (இடது), லைனல். - படம்: மோசஸ்

வழக்கமாக உடற்பயிற்சிக்கூடங்களில் உள்ள வசதிகளோடு, உடற்குறையுள்ளோருக்குப் பொருத்தமான வசதிகளும் இக்கூடத்தில் உள்ளன.

“ஒவ்வொருவரின் உடற்குறைக்கும் ஏற்றவாறு உடற்பயிற்சிக் கருவிகளிலோ, அவற்றைப் பயன்படுத்தும் விதத்திலோ மாற்றம் ஏற்படுத்துகிறோம். அக்கருவிகளைப் பயன்படுத்தாமலேயே, அதே தசைகளைப் பயன்படுத்தும் மற்ற உடற்பயிற்சிகளைக் கற்பிக்கிறோம்,” என்றார் மோசஸ்.

குழு உடற்பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகக் கூறிய அவர், பார்வை, செவிப்புலன் குறைபாடு உடையோர் இணைந்து அதே வகுப்பில் பங்கேற்றுள்ளதையும் உதாரணமாகச் சுட்டினார்.

“எங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்குறை இல்லாதவர்கள் முழுக் கட்டணம் செலுத்துகின்றனர்; அந்தப் பணத்தை வைத்து அல்லது மற்ற நிறுவனங்களுடன் திட்டங்கள் வகுத்து நாங்கள் உடற்குறையுள்ளோருக்குச் சலுகை வழங்குகிறோம்,” என்றார் மோசஸ்.

உடற்குறையுள்ளோருக்குப் பயிற்சி வழங்கும் அல்லது ஆதரிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் போன்றோருக்கும் அவர் பயிற்சி அளிக்கிறார்.

உடற்பயிற்சிக்கூடத்தில் தற்போது நான்கு முழுநேரப் பயிற்றுவிப்பாளர்களும் மூன்று பகுதிநேரப் பயிற்றுவிப்பாளர்களும் உள்ளனர்.

இதையடுத்து, உடற்குறையுள்ளோர், பயிற்றுவிப்பாளர்கள் கூடுதலானோரின் ஆற்றலை வலுப்படுத்த கூடுதல் வகுப்புகளையும் சமூகத்தில் உடற்குறையுள்ளோர் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டங்களையும் அவர் வழங்க விரும்புகிறார்.

உடற்குறையுள்ளோருக்காக உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றும் ‘இனர்வேட் ஃபிட்னஸ்’சின் ‘அடேப்டிவ்ஸ்’ திட்டம்.
உடற்குறையுள்ளோருக்காக உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றும் ‘இனர்வேட் ஃபிட்னஸ்’சின் ‘அடேப்டிவ்ஸ்’ திட்டம். - படம்: மோசஸ்

உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் சலுகைகளையும் அவர் வழங்க விரும்புகிறார்.

எனவேதான், எனேபிலிங் விளையாட்டு நிதிக்காக மோசஸ் விண்ணப்பித்துள்ளார். இந்நிதி, உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகள் சார்ந்த புதுப்பிக்கப்பட்ட பெருந்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.

உடற்குறையுள்ளோருக்காகச் சமூகம் வழிநடத்தும் விளையாட்டுத் திட்டங்களை ஆதரிக்கும். ஆகஸ்ட் 1 முதல் 30ஆம் தேதிக்குள், அவர்எஸ்ஜி மானியம் தளம்வழி (https://oursggrants.gov.sg/grants/ssgesfopn/instruction) இந்நிதிக்கு விண்ணப்பிக்கலாம். தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியான திட்டங்களும் நிதிக்குத் தகுதிபெறும். இந்நிதிக்கு அதிபர் சவால் ஆதரவளிக்கிறது. ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு பங்காளியாக இணைகிறது. பொதுமக்களும் https://go.gov.sg/givingsg-esf இணையத்தளம்வழி நன்கொடையளிக்கலாம்; நன்கொடைகளை அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையில் ஈடுசெய்யும்.

“தற்போது உடற்குறையுள்ளோருக்கு விளையாட்டுகளில் உதவக்கூடிய முறையான பயிற்சிபெற்றோர் நிறைய பேர் இல்லை. கூடுதலானோருக்குப் பயிற்சி வழங்கினால் இது மற்ற நிலைகளிலும் உடற்குறையுள்ளோருக்கு உதவும். இதற்கும் இந்நிதி உதவும்,” என்றார் மோசஸ்.

இதுபோக, ‘இனர்வேட் ஃபிட்னஸ்’சின் ‘ஆக்டிவ் சில்வர்ஸ்’ செயலி, துடிப்பான மூப்படைதல் நிலையங்கள், முதியோர்க் குழுக்களையும் சென்றடைகிறது. உடற்பயிற்சிக்கூடத்தில் முதியோருக்கென சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. உதவி தேவைப்படும் இளையோர்மீது தாக்கத்தை ஏற்படுத்தவும் மோசஸ் திட்டங்களை நடத்தி வருகிறார்.

உடற்பயிற்சிக்கூடத்தில் முதியோருக்காக உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தும் மோசஸ்.
உடற்பயிற்சிக்கூடத்தில் முதியோருக்காக உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தும் மோசஸ். - படம்: மோசஸ்
இனர்வேட் ஃபிட்னஸ் உடற்பயிற்சி.
இனர்வேட் ஃபிட்னஸ் உடற்பயிற்சி. - படம்: மோசஸ்
குறிப்புச் சொற்கள்