தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்துறைப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் குறித்த முயற்சிகளில் இந்தியா

2 mins read
896dd9e0-5d2a-4356-8208-9de153704d71
‘இண்டர்நேஷனல் சோலார் அலையன்ஸ்’ அமைப்பின் தலைமையகத்தைப் பார்வையிடச் சென்றிருந்த செய்தியாளர்கள், இத்திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிந்துகொண்டனர். - படம்: அனுஷா செல்வமணி

இந்தியக் கடற்படை, கடல்துறைப் பாதுகாப்புக்காக ‘இன்ஃபர்மேஷன் ஃபியூஷன் சென்டர் - இந்தியன் ஓஷன் ரீஜியன்’ (Information Fusion Centre - Indian Ocean Region) எனும் அமைப்பு ஒன்றை ஆறாண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட அந்த அமைப்பில் 12 நாடுகளைச் சேர்ந்த அனைத்துலகத் தொடர்பு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் அவர்களின் வேர்களுடன் இணைவதற்கும் இந்தியாவின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சு ‘நோ இந்தியா ப்ரோக்ராம்’ (Know India Programme) எனும் திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

இத்திட்டத்தின் 79வது சந்திப்பில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 செய்தியாளர்களுக்கு அத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் அமைந்துள்ள அந்த அமைப்புக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள கடற்பாதைகள் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகக் கருதப்படுகின்றன. உலகின் கடற்படை வர்த்தகத்தில் 75 விழுக்காடு இந்தியப் பெருங்கடல் பகுதியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படை பயங்கரவாதம், கடற்கொள்ளை, ஆயுதம் தாங்கிய கொள்ளை போன்ற சவால்கள் நிறைந்திருப்பதால் அந்த அமைப்பு பல நாடுகளுடன் கைகோத்துள்ளது.

ஆறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தற்காப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இமைப்பைத் தொடங்கி வைத்தார். கைகோத்துள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

பருவநிலை மாற்றத்திற்கான முயற்சி

சூரியவொளி எரிசக்தி மூலம் பருவநிலை மாற்றங்களை முறியடிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. ‘இண்டர்நேஷனல் சோலார் அலையன்ஸ்’ எனும் திட்டம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், சூரியவொளி எரிசக்தி மூலம் குறைந்த செலவில் குறைந்த கரிம வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

அமைப்பின் தலைமையகத்தைப் பார்வையிடச் சென்றிருந்த செய்தியாளர்கள், இத்திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிந்துகொண்டனர்.

குறைந்த வளர்ச்சியுடைய நாடுகள், சிறிய தீவு நாடுகள் போன்றவற்றுக்கு குறிப்பாக உதவிக்கரம் நீட்டும் இத்திட்டம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு அந்நாடுகளுக்குச் சூரியவொளி எரிசக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது.

சிங்கப்பூரில் இடப்பற்றாக்குறை தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக இருப்பதால், மிதக்கும் சூரியவொளி தகடுகளைப் பயன்படுத்தும் தெரிவை ‘இண்டர்நேஷனல் சோலார் அலையன்ஸ்’ திட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்