தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழிலில் புதுமை பனிக்கூழின் குளுமை

2 mins read
4085ecbf-c31d-4c09-b8c7-01b15601259a
ஹெவன்லி சண்டே உரிமையாளர்கள் சப்ரீனா, சுரேந்தர்.  - படம்: நந்தன் சிவபிரகாஸ்  

பெரும்பாலோருக்குப் பிடித்தமான பனிக்கூழ் (ஐஸ்கிரீம்), பசியாறப் பலரும் உண்ணும் தானியவகை உணவு (Cereal) இரண்டையும் சேர்த்து வித்தியாசமான சுவையில் விற்பனை செய்யும் ஐஸ்கிரீம் கடையை நடத்திவருகின்றனர் சுரேந்தர், சப்ரீனா இணையர்.

ஜூரோங் வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ஹெவன்லி சண்டே’ (Heavenly Sundae) ஐஸ்கிரீம் கடை குடியிருப்பாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசாங்க அமைப்பில் விற்பனை நிர்வாகியாகப் பணிபுரிந்த சப்ரீனா, 40, நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் சுயதொழில் செய்த சுரேந்தர், 40, இருவரும் கடந்த ஆண்டு இந்த ஐஸ்கிரீம் கடையை தொடங்கினர். அதற்கு கொவிட்-19 காலத்தில் அவர்கள் தொடங்கிய ‘பொன்பொன்ஸ்’ (Bonbons) சாக்லேட் விற்பனை அடித்தளம் இட்டது.

கொவிட்-19 நேரத்தில் சுரேந்தரின் சுயதொழில் அடிவாங்கியது. அப்போது வீட்டிலிருந்தபடியே ‘பொன்பொன்ஸ்’ சாக்லேட்டுகளை விற்க ஆரம்பித்த சுரேந்தரும் சப்ரீனாவும் காலப்போக்கில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகருக்குச் சென்றபோது தங்களுக்குப் பிடித்த பனிக்கூழும் சீரியலும் சேர்ந்த இனிப்புப் பண்டத்தைச் சுவைத்தனர். அதுபோன்ற தனித்துவமான இனிப்புப் பண்டம் அதிகம் கிடைப்பதில்லை என்பதாலும் பனிக்கூழ், சீரியல் இரண்டின் மீதான தங்கள் விருப்பத்தாலும் சிங்கப்பூரில் அதை அறிமுகம் செய்தனர் இந்த இணையர். பொதுவாக, உணவுத் துறையில் காலடி எடுத்துவைக்கும் இந்தியத் தம்பதியர் பனிக்கூழ் கடைகளை அரிதாகவே திறக்கின்றனர். “இந்தியர்கள் குறிப்பிட்ட வேலையைத்தான் செய்வார்கள் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள எண்ணினோம்,” என்று கூறினார் சப்ரீனா.

தொடங்கிய மூன்று நாள்களுக்குள் கடைக்கு வெளியில் நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். சப்ரீனாவுக்கும் சுரேந்தருக்கும் தெரியாமலே அவர்களின் கடை சமூக ஊடகங்களில் பிரபலமானது. பல இனத்தவரும் வயதினரும் நாடி வரத் தொடங்கியதைக் கண்டு அவர்கள் நெகிழ்ந்தனர்.

வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தைத் தரவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள அவர்கள் ஈ‌‌‌‌சூனில் புதிய கிளையைத் திறக்கத் திட்டமிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்