தீபாவளி என்றாலே முதலில் தோன்றுவது விளக்குகள், உறவுகள், அன்பு, சுவைமிகு உணவுகள் போன்றவைதான்.
லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பாரம்பரிய பலகாரங்கள் எக்காலத்திற்கும் ஏற்றவை என்றாலும், பண்டிகை விருந்தை எளிமையான, படைப்புத்திறன் மிக்க சமையல் குறிப்புகளுடன் மேலும் நவீனமாக்கலாம்.
செய்வதற்கு எளிதானவையாகவும் விருந்தினர்களைக் கவரக்கூடியவையாகவும் இருக்கும் சில புதுமையான தீபாவளி சமையல் யோசனைகளை இங்குப் பார்க்கலாம்.
சாக்லேட் லட்டு
வறுத்த கடலை மாவை உருக்கிய நெய், வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அதைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, உருக்கிய டார்க் அல்லது மில்க் சாக்லேட்டில் முக்கி எடுங்கள். சாக்லேட் இறுகும்வரை அவற்றைப் பேக்கிங் தாளில் வைத்து ஆறவிடுங்கள். சாக்லேட் உறைந்ததும் சுவையில் மட்டுமின்றி, தோற்றத்திலும் பாரம்பரியமும் நவீனமும் கலந்த இனிப்பு தயார்.
மாம்பழம்/அன்னாசிப் பழ பேடா
பழக்கூழை, அதாவது பழத்தின் சதைப்பற்றுள்ள பகுதியைத் தனியாக எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். சிறிது ஏலக்காய்த் தூளைச் சேர்த்துக் கலக்கவும். சற்று ஆறிய பிறகு, சிறிய வட்ட வடிவங்களாக உருட்டிக்கொள்ளலாம். பழத்தின் இயற்கை மணம், பாரம்பரிய பேடாவை புத்துணர்ச்சியூட்டும் இனிப்பாக மாற்றுகிறது.
சீஸ் முறுக்கு
1 குவளை அரிசி மாவு, உப்பு, சிறிது மிளகாய்த் தூள், 1 மேசைக்கரண்டி துருவிய செடார் சீஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசையுங்கள். பின்னர் முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுங்கள். சீஸ், மொறுமொறுப்பான முறுக்குக்கு புதுமையான சுவையைச் சேர்க்கிறது.
மசாலா சமோசா
இதற்கு ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட ‘பஃப் பேஸ்ட்ரி’ மாவைக் கடையிலிருந்து வாங்கியோ அல்லது புதிய சமோசா மாவை சுயமாகத் தயாரித்தோ பயன்படுத்தலாம். மாவைத் தேவைக்கேற்பச் சிறிய சதுரங்களாக வெட்டி, அவற்றை மஃபின் அச்சுகளின் உட்புறத்தில் வைக்கவும். தனியாக வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி அல்லது பருப்பு வகைகளுடன் மசாலா சேர்த்துக் கிளறி எடுத்துக்கொள்ளவும். அதை மாவின் நடுவில் வைத்து சமோசா செய்துகொள்ளவும். பெரிய பாத்திரத்தில் எண்ணெய்யைக் காயவைத்து, அதில் சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். ஒரே கடியில் சுவைக்க ஏற்ற இந்த சமோசாக்கள், பண்டிகைக் கால தேநீர் விருந்துகளுக்குச் சிறந்த சிற்றுண்டியாகும்.
பிஸ்தா கப்கேக்
சாதாரண கப்கேக் மாவை தயார்செய்து, அதில், ஏலக்காய்த் தூளையும் பொடிசெய்த பிஸ்தா பருப்புகளையும் சேர்க்கவும். பிறகு அதை, அச்சுகளில் நிரப்பி, ஏற்கெனவே சூடாக்கப்பட்டிருந்த சூட்டடுப்பில் (Oven) பேக் செய்யவும். பின்னர் லேசான வெண்ணிலா அல்லது பன்னீர் மணமுடைய ஐசிங்கைக் கொண்டு அழகாக அலங்கரிக்கலாம். நறுமணம் மிக்க ஏலக்காயின் சுவை, கப்கேக்குகளின் ஒவ்வொரு கடியிலும் பண்டிகை உணர்வை வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
பண்டிகைக் காலப் பானங்கள்
ரோஸ் மில்க் லாட்டே அல்லது குங்குமப்பூ கலந்த சூடான சாக்லேட் பானத்தைத் தயார்செய்து பண்டிகைச் சுவையை அனுபவிக்கலாம். ரோஸ் மில்க் லாட்டே தயாரிக்க, பாலை ரோஸ் சிரப்புடன் சேர்த்து சூடாக்கி கொதிக்கவிடுங்கள். குங்குமப்பூ சாக்லேட் பானத்துக்கு, பாலை குங்குமப்பூ சேர்த்துக் காய்ச்சி, அதில் சாக்லேட்டை சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். நுரை பொங்கியதும் இவ்விரு பானங்களையும் வண்ணமயமாக அலங்கரித்துப் பரிமாறலாம்.