இந்தியா-சிங்கப்பூர் பொருளியல் பங்காளித்துவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான ‘இன்ஸ்பையர்’ கருத்தரங்கு (INSPire Forum) எனும் புதிய முயற்சி, நவம்பர் 4 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற சிங்கப்பூர் நிதியியல் தொழில்நுட்ப (Fintech) விழாவில் தொடக்கம் கண்டது.
அவ்விழா முதல் இரு நாள்களில் சேண்ட்ஸ் மாநாடு, கண்காட்சி மையத்திலும், பின்னர் சிங்கப்பூர் எக்ஸ்போவிலும் நடைபெற்றது.
இந்திய மேலாண்மைக் கழகத்தின் (ஐஐஎம்) சிங்கப்பூர்வாழ் முன்னாள் மாணவர் சங்கம், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் லாப நோக்கற்ற அமைப்பான எலிவாண்டி (Elevandi) உடன் இணைந்து இந்த முதல் ‘இன்ஸ்பையர்’ கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தடையற்ற மின்னிலக்க வர்த்தகம், அனைத்து மக்களுக்கும் திறன் மேம்பாடு, 7 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியலை அடைவதற்கான இந்தியாவின் பாதை ஆகிய உலகளாவிய தலைப்புகளில் நான்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பேச்சாளர்கள் 25 பேர், ஐஐஎம் முன்னாள் மாணவர்கள், இந்திய அரசாங்கப் பேராளர்கள், அனைத்துலகத் தலைவர்கள் என பலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
“ஐஐஎம் முன்னாள் மாணவர்களாகிய நாங்கள், குடும்பத்தினரோடு சிங்கப்பூரில் வேரூன்றிவிட்டோம். இந்தியாவின் பண்பாடு, வணிகச் சூழல் பற்றிய ஆழமான புரிந்துணர்வும் தொடர்புகளும் எங்களுக்கு உள்ளன.
“ஆகவே, இரு நாடுகளுக்கும் பங்காற்றும் நோக்குடன் இம்முயற்சியைத் தொடங்கியுள்ளோம்,” என்றார் ஐஐஎம் சிங்கப்பூர்வாழ் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும் ‘கிரேயான் டேட்டா’ (Crayon Data) தலைமை நிர்வாகியுமான சுரேஷ் சங்கர்.
“கடந்த நான்கு மாதங்களாக சிங்கப்பூரிலுள்ள ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு இடையே, இன்ஸ்பையர் கருத்தரங்கை நடத்த கடுமையாக உழைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியா - ஆசியான் இடையிலான இணையவழி வணிகத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? சுங்க வரிகளை நாடுகளுக்கிடையே எப்படித் தரப்படுத்துவது? அனைத்துலக நிதி மையமான சிங்கப்பூர் எவ்வழிகளில் இந்தியாவின் தூய்மையான எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது? போன்ற வினாக்களைக் கருத்தரங்கு ஆராய்ந்தது,” என்றார் ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) ஆலோசகரும் ஐஐஎம் சிங்கப்பூர்வாழ் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான அரவிந்த் சங்கரன்.
இக்கருத்தரங்கு வெறும் தொடக்கம்தான் என்றும் இதனை ஆண்டுதோறும் நடத்த சங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவ்விருவரும் கூறினர்.
அச்சங்கம் வழக்கமாக ஏற்பாடு செய்துவரும் ஐஇம்பேக்ட் (IIMPACT) எனும் ஒன்றரை நாள் நிகழ்ச்சியும் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும். அதை முன்னிட்டு, இருநாட்டு வர்த்தகங்களுக்கும் உதவும் சில முயற்சிகளையும் செயல்படுத்தவுள்ளதாக அவர்கள் கூறினர்.
“எங்கள் மையக் கருத்து என்னவெனில், இந்தியாதான் உலகிலேயே ஆகப்பெரிய வாய்ப்புகளின் இருப்பிடம். ஆனால், இந்தியாவிற்குப் பல சவால்களும் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள மற்ற நாடுகளாலும் உதவமுடியும். இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்பட்டால் இருதரப்பினரும் நல்ல வாய்ப்புகளைத் தம்வசப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எதிர்காலத்தில் சிங்பாஸுக்கும் இந்தியாவின் ஆதார் அட்டைக்கும் தொடர்பு ஏற்படுத்தப்படலாம்.
“நாங்கள் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறோம். இதன்மூலம் சிங்கப்பூரிலிருந்து சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் இந்தியாவில் கால்பதிக்கவும் சிங்கப்பூர் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சிபெறவும் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்த முயல்கிறோம்,” என்றார் திரு சங்கர்.