துடும்பு என்றழைக்கப்படும் பெரிய மேளக்கருவியை இசைத்தபடி ஆடப்படுவது துடும்பாட்டம் எனும் தமிழர் ஆடற்கலை. அதிலிருந்து தோன்றியது சிக்காட்டம்.
இது, நாட்டுப்புறக் கலைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மரபுக் கலைகள் என்றவுடனே பரவலாக மக்கள் நினைவில் வந்து நிற்பவை ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்றவையே.
எனினும் மக்கள் வாழ்வோடு ஒன்றிணைந்து மக்களிசையின் பரிணாமமாய் திகழும் கலைகளில் முக்கிய இடம் வகிக்கின்றது சிக்காட்டம்.
தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிரபலமான சிக்காட்டம் காலங்காலமாகக் காட்டு விலங்குகளை விரட்டியடிக்கப் பயன்படுத்தப்பட்டது.
சிக்காட்டத்தின்போது துடும்பு, பறை போன்ற வெவ்வேறு வகையான கிராமியத் தோல்கருவிகளை அடித்து எழுப்பப்படும் துடிப்புமிக்க இசையொலி, ஆறு வயது முதல் அறுபது வரையிலான பார்வையாளர்களை இருக்கையில் அமரவிடாது எழுந்து ஆடவைக்கும் என்றால் அது மிகையன்று.
அப்படிப்பட்ட தருணத்தை ஏற்படுத்தியது மார்ச் 23ஆம் தேதி இடம்பெற்ற ஏகேடி குழுவின் சிக்காட்டம்.
2023ஆம் ஆண்டில் ஆக அதிகமானோர் பங்குபெற்ற ஒயிலாட்டம் என்ற சாதனையைப் படைத்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக அப்படைப்பு அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஏகேடி குழு மற்றும் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) சிராங்கூன் சமூக மன்றத்தில் நடந்தது. இதில் சாதனை அளவாக ஏறத்தாழ 250 பேர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் நாட்டுப்புறக் கலைகள் தழைத்தோங்க குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்த காலஞ்சென்ற புகழ்பெற்ற உள்ளூர்க் கலைஞரும், ஏகேடி நிறுவனருமான ஆனந்தக்கண்ணனை நினைவுகூரும் விதமாக அவர் பிறந்த நாளான மார்ச் 23ஆம் தேதி தெரிவு செய்யப்பட்டது என்றார் ஏகேடி குழுவின் இயக்குநர் ராணி கண்ணா.
“காலங்கள் கடந்தாலும் மரபுக் கலைகள் மறையாமல் தழைத்தோங்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தச் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது,” என்றார் அவர்.
சிக்காட்டக் கலையைச் சிங்கப்பூருக்கு அறிமுகப்படுத்த வேண்டும், மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும் என்று எட்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த கனவை இந்நிகழ்ச்சியின் மூலம் நனவாக்கினர் ஏகேடி குழுவினர்.
இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு மற்றொரு காரணமானவர் சிக்காட்டக்கலை ஆசானான 43 வயது மாஸ்டர் மகேந்திரன்.
தொடக்கத்தில் எட்டுப் பேருக்கு மட்டுமே சிக்காட்டத்தைக் கற்றுத்தர எண்ணிய அவர், காணொளி வழியாகக் கற்றுக்கொண்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏறத்தாழ 250 பேரைக் கண்டு வியந்துபோனார்.
பங்கேற்றோரில் ஒருவரான 23 வயது ஹரிணி, முன்பின் கேள்விப்படாத சிக்காட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்வந்ததாகக் கூறினார்.
பள்ளி விடுமுறைக் காலங்களில் பொழுதைப் பயனுள்ள வழியில் கழிக்க முடிவுசெய்தனர் சகோதரிகளான ஹரிணி, ஹரிசிணி, பவதாரிணி மூவரும்.
தமிழ் மரபுக்கலைகளை வாழவைக்கும் வாய்ப்பாக மட்டுமன்றி உடலுக்கு வலுசேர்க்கும் உடற்பயிற்சியாகவும் இதைப் பார்க்கிறார் பங்கேற்பாளர்களில் ஒருவரான 72 வயது பிரபா சந்தரன் சேத்.
சிக்காட்டக்கலையில் முக்கிய அங்கம் வகிக்கும் இசைக்கருவிகளை ஏறக்குறைய பத்தாண்டுகளாக வாசித்து வருகிறார் 21 வயது அறின் ஜெய் கண்ணன்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் உற்சாகமாக சிக்காட்டத்தை ஆடியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார் அறின் ஜெய்.

