மனவுறுதியும் மீள்திறனும் நிறைந்த பயணம்

மனவுறுதியும் மீள்திறனும் நிறைந்த பயணம்

3 mins read
08715044-9854-4565-8831-80b8426e7514
ரைஃபல் ரேஞ்ச் இயற்கைப் பூங்காவில் இருக்கும் ‘கொல்லூகோ டெக்’ வரை தம் கணவரோடு நடைப்பயணத்தை மேற்கொண்ட திருவாட்டி பாட்ரிசியா டி சூசா. - படம்: பாட்ரிசியா டி சூசா.

மூன்று ஆண்டுகளுக்குமுன் இதய அறுவை சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார் திருவாட்டி பாட்ரிசியா டி சூசா.

இன்று சிகிச்சையிலிருந்து மீண்டுவந்து இந்த நிலையில் இருக்க தன் மனவுறுதியும், பிடிவாதமும்தான் காரணம் என்று அவர் கருதுகிறார்.

சிறு வயதிலிருந்தே இதயம் குறித்த பிரச்சனைகளைச் சமாளித்து, 2022இல் அறுவை சிகிச்சைக்குச் சென்றார்.

சிகிச்சைக்குப்பின் மனத்தளவிலும் உடலளவிலும் தாம் எதிர்கொண்ட பல சவால்களைச் சமாளிக்க சிங்கப்பூர் இதய அறக்கட்டளை வாரியம் பேரளவில் உதவியது என்றார் அவர்.

புக்கிட் கோம்பாக் விளையாட்டு நிலையத்தில் இருக்கும் இதய நல்வாழ்வு நிலையத்தில் மறுவாழ்வு பெற்ற அவர், அங்குக் கண்டறிந்த சமூகம் எந்த அளவிற்கு தமக்கு உறுதுணையாக இருந்து ஆதரவளித்தது என்பதைப் பகிர்ந்துகொண்டார்.

மனிதர்களோடு கலந்துரையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பங்கேற்பாளர்களாக இருந்தாலும் சரி, இயன்முறை மருத்துவராக இருந்தாலும் சரி, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி நட்புறவோடு பழகினோம்,” என்று கூறினார் திருமதி பாட்ரிசியா.

“உடற்பயிற்ச்சி என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. ஆனால், என் சிகிச்சைக்குப் பின், மனத்தளவில் நான் உறுதியாக இருந்தாலும், உடலளவில் பலவீனமாக இருந்தேன். வேறு வழியின்றி தான் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்” என்று தன் 75-ஆவது வயதில் தொடங்கிய தன் உடல் நலம் குறித்த பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார் அவர்.

உடற்பயிற்சிக்கூடத்தில் இருக்கும் சூழலைக் காட்டிலும், இதய நல்வாழ்வு நிலையத்தில் அன்பான அரவணைக்கும் ஒரு சூழலை அனுபவிக்கலாம் என்பதால் அங்கு நடக்கும் உடற்பயிற்சி அமர்வுகளில் பங்கெடுப்பது நல்ல அனுபவமாக இருந்தது என்றார் அவர்.

எப்படியாவது தமது உடலைத் தேற்றி, முன்பு இருந்த நிலையைவிட மேலும் உயர வேண்டும் என்ற மனவுறுதியோடும் மீள்திறனோடும் போராடி, ஒரே ஆண்டில் அவர் குணமடைந்தார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமது 77வது பிறந்தநாள் நெருங்கியபோது, ரைஃபல் ரேஞ்ச் இயற்கைப் பூங்காவில் இருக்கும் ‘கொல்லூகோ டெக்’ வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.

31 மீட்டர் உயரத்தில், ஏறத்தாழ பத்து மாடிக் கட்டட உயரத்தில் அமைந்துள்ள ‘கொல்லூகோ டெக்’கிற்குச் செல்ல வேண்டும் என்ற இலக்கோடு படிப்படியாகப் பயிற்சி செய்து, இறுதியாகத் தம் கணவரின் துணையோடு அவ்விலக்கை எட்டியதாக திருவாட்டி பாட்ரிசியா நினைவுகூர்ந்தார்.

தனக்கு உறுதுணையாக இருந்து சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் பயணத்தில் பெரும் பங்கு வகித்த தன் மருத்துவர், பேராசிரியர் டான் ஹுவே சீம்-க்கு நன்றி தெரிவித்தார் திருமதி பாட்ரிசியா.

சிங்கப்பூர் இதய அறக்கட்டளை வாரியத்தின் தலைவராகவும் பணிபுரியும் பேராசிரியர் டான் 13 வருடங்களாகத் தன் உடல் நிலையைக் கண்காணித்து ஒரு வழிகாட்டியாகவும் விளங்கியதாக அவர் கூறினார்.

இவரைப் போலவே, சிங்கப்பூர் இதய அறக்கட்டளை வாரியம் கடந்த 55 ஆண்டுகளாக நோயாளிகள் பலருக்கும் உதவி வருகிறது. இதய நோயோடு போராடுபவர்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்கள் நலமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற அவ்வமைப்பு ஊக்குவிக்கிறது.

சிங்கப்பூர் இதய அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி ஆங்.
சிங்கப்பூர் இதய அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி ஆங். - படம்: ஜெஃப்ரி ஆங்

“பணம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, உடல்நலத்தின்மீது கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர்,” என்று சிங்கப்பூரர்களின் அலட்சிய போக்கைச் சாடினார் சிங்கப்பூர் இதய அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி ஆங்

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது, இடையிடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது, மின்தூக்கிக்கு பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது போன்ற எளிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

திருமதி பாட்ரிசியாவை போல, பலரின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, 55 ஆண்டுகளாக மக்களுக்குச் சேவையாற்றி வருகிறது சிங்கப்பூர் இதய அறக்கட்டளை வாரியம்.

வரும் காலங்களில் புத்தாக்க முறைகளைப் பயன்படுத்தி, இதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து, சிங்கப்பூர் மக்களிடையே நலவாழ்க்கை முறையை ஊக்குவிப்பதே இதய அறக்கட்டளை வாரியத்தின் இலக்கு என்றார் திரு ஆங்.

குறிப்புச் சொற்கள்