தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் தமிழிலக்கத்தியத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது என்று நகைச்சுவை நாவலர் புலவர் மா. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் நெறியாளராக இருந்த கலைஞர், நிகழ்ச்சியில் பேசுவதற்கு பேரறிஞர் அண்ணாவை அழைத்த விதத்தை அவையோர் வியந்து இரசித்ததையும் கலைஞரின் ஒரு கட்டுரையைப் படித்த அண்ணா, இந்தக் கட்டுரையை எழுதிய பெரியவர் யார் எனக் கேட்டதையும் குறிப்பிட்டு, கலைஞருக்கு இளவயதிலேயே மொழிமீதிருந்த ஆளுமைத்திறனை வியந்து பேசினார் புலவர் இராமலிங்கம்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இடம்பெற்ற ‘கலைஞர் நூற்றாண்டு - கலைஞரின் இலக்கியம்’ என்ற கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன், முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், முனைவர் இரத்தின வேங்கடேசன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, முனைவர் முரு. இளவழகன், முனைவர் மன்னை க. இராஜகோபாலன், முனைவர் ச. ஜெகதீசன், சிங்கப்ப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், தமிழ் வள்ளல் நாகை தங்கராசு, மதிப்புறு முனைவர் இரா. தினகரன் ஆகியோர் படைப்பிலக்கியத்தில் கலைஞர் கருணாநிதி படைத்த முத்திரை குறித்துப் பேசினர்.
கலைஞரின் வசனத்தில் உருவான பராசக்தி, சாக்ரட்டீஸ், மனோகரா, சேரன் செங்குட்டுவன், பூம்புகார் ஆகிய திரைப்படங்களிலிருந்து சில நிமிடக் காட்சிகள் நிகழ்ச்சியின் இடையிடையே ஒளிபரப்பப்பட்டன.
ஜோஸ்கோ பயண நிறுவனத்தின் ஆதரவுடன் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.