வீராசாமி சாலையில் கலாம் உணவகம் திறப்பு

2 mins read
a80f3b7f-35e3-4147-84f4-4c668d3495d8
கலாம் உணவகம், எண் 2, வீராசாமி சாலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி காலை 10 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. - படம்: கலாம் உணவகம்
multi-img1 of 2

எண் 2, வீராசாமி சாலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி காலை 10 மணியளவில் கலாம் உணவகத் திறப்புவிழா நடைபெற்றது.

சிங்கப்பூரில் அப்துல் கலாம் இலட்சியக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கழகத்தில் பல சமூகநல நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பெரிதும் பங்களித்த திரு ஜான் ராம்மூர்த்தி இந்த உணவகத்தைத் தொடங்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் அப்துல் கலாமின் அண்ணன் வழிப் பேரன் ஷேக் சலீம் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் முன்னாள் தலைவர் அமீர் அலி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்க அங்கமாக ஜனனி நாய்க், நிகிதா ஆரணி ஆகியோரின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து நிறுவனர் ஜான் ராமமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் அப்துல் கலாம் தமது வாழ்நாள் முழுதும் வலியுறுத்திய சமய நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் பல்வேறு சமயங்களைச் சார்ந்த பெரியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்து சமயத்தைப் பிரதிநிதித்து தவத்திரு ஸ்னே குப்தா (Sneh Gupta), இஸ்லாம் சமயத்தைப் பிரதிநிதித்து திரு ஹாஜி முஸ்லிம் அகமது, பௌத்த சமயத்தைப் பிரதிநிதித்து தவத்திரு வெண் குணரமா (Ven Gunarama), சீக்கிய சமயத்தைப் பிரதிநிதித்து தவத்திரு ஹெர்பல் சிங் (Herpal Singh), பஹாயி சமயத்தைப் (Baháʼí Faith) பிரதிநிதித்து திருவாட்டி சூஸி வோங் (Suzie Wong), கிறிஸ்துவ சமயத்தைப் பிரதிநிதித்து சமய போதகர் பவானி ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அமீர் அலிக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

புதுடெல்லியில் உள்ள ‘ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ வழங்கும் மதநல்லிணக்க விருதைச் சிறப்பு அழைப்பாளர் ஷேக் சலீம், உணவக உரிமையாளர் ஜான் ராமமூர்த்திக்கு வழங்கினார்.

திரு ஷேக்சலீம், கலாமின் சுவடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

குறிப்புச் சொற்கள்