தற்காப்புக் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள அணஞ்ச பெருமாள் நாராயணன், 52 வயதில் தம் மகனுடன் ‘கராத்தே’ கற்க முற்பட்டார்.
மூன்று ஆண்டுகளாக அதனை நன்கு கற்று வந்த திரு நாராயணன், சிறந்த தேர்ச்சியைக் குறிக்கும் கறுப்புப் பட்டையைப் (black belt) பெற்றார்.
ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் பக்கவாதம், அவரை திடீரெனப் பற்றியது.
2021ல் கொவிட்-19 கிருமிப்பரவல் நிலவிய நேரத்தில், வீட்டில் இருந்தபோது தம் வலது கையையும் காலையும் அசைக்க முடியாமல் தவித்ததைத் திரு நாராயணன் நினைவுகூர்ந்தார்.
“கன்னியாகுமரியில் நாட்டு விளையாட்டு எனும் தற்காப்புக் கலையைக்கற்றேன். அத்துடன், கடந்த ஆறு ஆண்டுகளாக ‘நாகாமுரா’ அனைத்துலக கராத்தே பள்ளியில் ‘கியோகுஷின்’ பாணியிலான கராத்தே பயற்சியைப் பெற்றேன்,” என்று தற்போது 58 வயதாகும் திரு நாராயணன் கூறினார்.
தொடக்கத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு அவர், சிறிய பொருள்களைத் தூக்குவது, எழுதுவது, படிகள் ஏறி இறங்குவது போன்ற சிறிய வேலைகளைச் செய்வதற்குக்கூட தடுமாறினார்.
இயல்பாக வாழ முடியாமல் வாடியபோதும் குடும்பம் பக்கபலமாக இருந்து ஆதரவளித்ததாகத் திரு நாராயணன் நன்றியுணர்வுடன் கூறினார்.
“சமையல் வேலைக்காக என் மனைவி தயாராகும்போது காய்கறிகளை நறுக்குவது, மாவு பிசைவது போன்ற சின்னஞ்சிறு வேலைகளைச் செய்ய என்னை ஊக்குவிப்பார். இந்த வேலைகளே எனது நுண்தசைகளை இயக்குவதற்கான பயிற்சியாகவும் இருந்தன,” என்றார் திரு நாராயணன்.
தொடர்புடைய செய்திகள்
மறுமலர்ச்சி கண்ட கராத்தே கனவு
முடங்கிக் கிடக்கப் போவதில்லை என்ற உறுதியுடன் மறுபடியும் கராத்தே பயிற்சியைத் தொடர திரு நாராயணன் காத்திருந்தார்.
அடிப்படையான சில உடற்பயிற்சிகளுடன் தொடங்கிய அவர், தமது உடலுக்கு மெல்ல உரமூட்டினார்.
இதற்கு மகன் கெளஷிக் நாராயணன் துணைபுரிந்தார்.
தந்தைக்கு ஊக்கமளிக்க அவருடன் வீட்டுக்குக் கீழ் மெதுநடை செல்வது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாக 23 வயது திரு கௌஷிக் நாராயணன் தெரிவித்தார்.
“அப்பாவுக்காகவே கூடுதலாக உடற்பயிற்சி செய்தேன். நானும் உடனிருந்து அவ்வாறு செய்யும்போது அவரது நம்பிக்கை கூடும் என நம்பினேன்,” என்று திரு கெளஷிக் கூறினார்.
தற்போது, 20 பேருடன் சண்டையிட இயலும் அளவிற்குத் தமது திறமை வளர்ந்துள்ளதைக் கண்டு திரு கெளஷிக், நெகிழ்ச்சி அடைகிறார்.
“வருங்காலத்தில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை அப்பாவின் கராத்தே பயணம் எனக்குக் கற்பித்தது. ஒருவேளை எனக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அப்பாவைப் போல், விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு மீண்டுவருவேன்,” என்று அவர் கூறினார்.
திரு நாராயணனின் ‘சென்சேய்’ (sensei) எனப்படும் தற்காப்புக் கலை ஆசிரியர் தம்மை மறுபடியும் கராத்தே பயிற்சிகளுக்கு வர ஊக்கமளித்து மிகுந்த பொறுமையுடன் தனக்கு பயிற்சி அளித்ததாகவும் அவர் கூறினர்.
நாகாமுரா பள்ளி 2023ல் திரு நாராயணனையும் ஆசிரியராக்கிக் கெளரவித்தது.
“விடாமுயற்சியும் கட்டொழுங்கும் எனது வெற்றிக்கான படிக்கட்டுகள். தொடர்ந்து பயிற்சி செய்தால் வெற்றி மெல்ல நம்மை நெருங்கும்,” என்றார் திரு நாராயணன்.

