சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நான்கு முக்கிய விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழா நவம்பர் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
எண் 2, பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் விழா நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் முன்னாள் நியமன உறுப்பினரும் கழகத்தின் மதியுரைஞருமான முனைவர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநரும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் உலகநாயகி பழநி கவியரசரின் கவிதைகளில் வாழ்வியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.
கண்ணதாசன் விழாவை ஒட்டி இவ்வாண்டும் 40 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட உள்ளது.
எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியின் முடிவுகள் கண்ணதாசன் விழாவில் அறிவிக்கப்படுவதுடன் முதல் பரிசு பெற்ற பாடல் இசையமைக்கப்பட்டு ஒலியேற்றப்படும்.
அத்துடன் கண்கவர் நடனம், கண்ணதாசன் புதிர்ப் போட்டி, கவிதாஞ்சலி ஆகியவையும் உண்டு.

