கவிமாலை அமைப்பின் ‘விதைகள்’ நிகழ்ச்சி, ஆகஸ்ட் 24ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ‘ஓராண்டு விதைகள்’ எனும் திட்டத்தை கவிமாலை தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ள 40 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியை வரவேற்புரையோடு தொடங்கிவைத்த கவிமாலை தலைவர் இன்பா, கவிமாலையின் நோக்கம், செயல்பாடுகள், கடந்துவந்த பாதையைப் பற்றி விளக்கினார். அடுத்த ஓராண்டுக்கு நடைபெறும் திட்டங்கள், தமிழ் மொழிக்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடம் அவர் பகிர்ந்தார்.
2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘விதைகள்’ மாணவர் அணியின் துணைத் தலைவர் ரகுநந்தன், கொவிட்-19 காலத்திலும் தடையின்றி நடத்தப்பட்ட மாணவர் அணியின் நிகழ்வுகள் பற்றியும் அணியின் நோக்கங்கள் பற்றியும் புதிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
கவிஞர் அஷ்ரஃப் அலி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அறிமுக மாணவர்களுக்குக் கவிதைகள், கவிதை நூல்கள் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். தமிழ் முரசின் இணை ஆசிரியரும் எழுத்தாளருமான கி.கனகலதா கவிதையைப் பற்றியும், அதை எழுதுவதற்கான நோக்கத்தைப் பற்றியும் விளக்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், மாணவர்களை ஒன்றிணைக்கும் விதமாகக் கவிதை குறித்த அங்கங்கள் இடம்பெற்றன. அத்துடன், தமிழ் சார்ந்த விளையாட்டுகளை மாணவர்களே தயாரித்து வந்து மற்றவர்களுடன் விளையாடினர்.
வழிகாட்டித் திட்டத்தில் இணைந்திருக்கும் 40 மாணவர்களும் நான்கு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வழிகாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்களை இணைத்து கவிதையோடு பயணிக்க வைக்கும் பணியை கவிமாலைக் குழுவினர் இணைந்து செய்யவிருக்கின்றனர். மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நிகழ்வில் உத்வேகம் காட்டியது அனைவருக்கும் மகிழ்வான தருணமாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சி நிறைவின்போது ஆசிரியர் உஷா, மாணவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக வந்திருந்த பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார்.

