சிங்கப்பூரின் தனித்துவமான உணவங்காடி நிலையக் கலாசாரம், கடந்த 2020ஆம் ஆண்டு யுனெஸ்கோ கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில், இப்போது தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய உடையான ‘கெபாயா’ அப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அணியப்பட்டு வரும் இந்த ‘கெபாயா’ உடை தயாரிக்கப்படும் ‘பாத்தேக்’ வகை துணிகள் நெடிய பாரம்பரியம் கொண்டவை.
‘பாத்தேக்’: நுட்பமான வேலைப்பாடு
‘பாத்தேக்’ இலைகள், செடி கொடிகள், பூக்கள் எனப் பல அழகிய வடிவங்களை பல வண்ண மை கொண்டு துணிகளில் அச்சேற்றும் நுட்பமான வேலைப்பாடு.
‘பாத்தேக்’ கலைஞர்கள் பசை போன்ற பொருளைக் கொண்டு துணிகளில் தேவைப்படும் வடிவங்களை முதலில் வரைவார்கள். பின்னர் அத்துணியைச் சாயத்தில் நனைக்கும்போது, வரையப்பட்ட பகுதிகள் சாயத்தை உறிஞ்சாமல், பிற பகுதிகளில் வண்ணம் ஏறும்.
தொடக்கத்தில் ‘குளுட்டனஸ்’ அரிசியிலான பசை, தேன், மெழுகு உள்ளிட்ட பொருள்கள் கொண்டு இவை வரையப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு காலந்தொட்டு, அவை நேர்த்தியான தரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
காலப்போக்கில், ‘பாத்தேக்’ எனும் ஜாவானியச் சொல், அதன் நுட்பம் மட்டுமன்றி, அந்தத் துணியையும் குறிக்கும் பெயரானது.
இந்த ‘பாத்தேக்’ துணி, தாவரங்கள், விலங்கினங்கள், பொருள்கள், சின்னங்கள் உள்ளிட்ட மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு, அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, பெரிய துணியில் வடிவமைக்கப்படுகிறது.
‘இண்டிகோ’ எனும் பூக்களிலிருந்து வரும் கருநீல நிறம் உள்ளிட்ட இயற்கைச் சாயங்கள் இவ்வகை துணிகளில் பயன்படுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
‘பாத்தேக்’ சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் ‘பாத்தேக்’ துணிகள் செம்பு அல்லது மரத்தினாலான அச்சு கொண்டு தயாரிக்கப்பட்டன. பொதுவாக ‘கெபாயா’ உடை, ‘பத்திக்’ துணியில் வடிவமைக்கப்பட்ட மேல்சட்டையுடன், நீளமான தைக்கப்படாத துணியினை முன்புற மடிப்புகளுடன் உடுத்தப்படுகிறது.
பொதுவாக மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு உடுத்தப்படும்போது அடர்நிறங்களாலான ‘பாத்தேக்’ துணிகள் பயன்படுத்தப்படும்.
உடைகள் தவிர, கைக்குட்டைகள் உள்ளிட்ட இதர பொருள்களிலும் ‘பாத்தேக்’ துணிகள் பயன்பாட்டில் உள்ளன.
மூத்தோர் காலத்து உடை எனும் எண்ணம் சற்று பரவலாக இருந்தாலும், அவற்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘கெபாயா’ உடை வெவ்வேறு காலகட்டங்களுக்கேற்ப நவீன வடிவம் எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், மலேசியப் பகுதிகளில் ஆண்களும் இதனை அணியத் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றனர்.

