உண்ணும் உணவில் அதிக சர்க்கரை இருப்பதால் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் பல தெரிவித்துள்ளன.
ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 தேக்கரண்டி (30 கிராம்) அளவு மட்டுமே சர்க்கரை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த அளவு சர்க்கரையை உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?
உடல் எடையைப் பேணலாம்
கேக்குகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள் போன்றவற்றில் அதிக சர்க்கரை உள்ளது.
அதிக சர்க்கரை உள்ள உணவுகளில் பெரும்பாலும் கலோரி அதிகமாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. குறைந்த அளவு சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்வதால் உடல் எடையைப் பேணலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சருமநலம் மேம்படும்
அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகள், ஹார்மோன் சுரப்பு அளவைப் பாதித்து முகப்பருக்களை ஏற்படுத்தும். தொடர்ந்து அதிக சர்க்கரை உண்பதால் சருமத்தில் உள்ள ‘கொலாஜன்’ சத்து சேதப்படும்.
சர்க்கரை அளவைக் குறைப்பதால் சருமநலத்தை மேம்படுத்தலாம்.
நீரிழிவு அபாயம் குறையும்
உணவிலிருந்து வெளிப்படும் சர்க்கரை, ரத்தத்தில் சேர்கிறது. அதிகரிக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடலில் சுரக்கும் இன்சுலின் உதவுகிறது.
ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது இன்சுலினின் ஆற்றலை விஞ்சக்கூடும். இதனால் நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகலாம்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, சர்க்கரை குறைவாக உள்ள உணவு நீரிழிவு ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்க உதவும்.
சிறந்த பல் பராமரிப்பு
அதிக சர்க்கரை கொண்ட உணவு உண்பதால் பற்களை பாதுகாக்கும் கடினமான ‘எனாமல்’ நாளடைவில் அழியும். இதனால் பற்கள், ஈறுகள் பாதிப்படைந்து ஈறு அழற்சியும் ஈறு தொடர்பான பிரச்சினையும் ஏற்படலாம்.
சர்க்கரை அளவை குறைப்பதால் பற்களும் ஈறுகளும் பாதுகாக்கப்படும்.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்
அதிக சர்க்கரை உள்ள உணவுகளில் பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்புச் சத்து (saturated fats) அதிகமாக இருக்கும்.
இதனால் இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
குறைந்த அளவில் சக்கரை உள்ள உணவை உண்பதால் உடல் எடையைப் பேண முடிவதுடன் இதய நோய் ஏற்படும் சாத்தியத்தையும் குறைக்க முடியும்.