சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் இவ்வாண்டுக்கான முதல் கதைக்களம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் மலையரசி சீனிவாசனின் ‘நினைவோவியம்’ நூல் வெளியீடு காணவிருக்கிறது.
நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
திரு பொன் சுந்தரராசு, குமாரி கனகலதா இருவரும் வாழ்த்துரை ஆற்றவிருக்கிறார்கள்.
திரு யூசுப் ராவுத்தர் ரஜித்தும் திருவாட்டி சித்ரா தணிகைவேலும் நூலை அறிமுகம் செய்வார்கள். செல்வி சௌமியா திருமேனி, திருவாட்டி ஷோபா குமரேசன் இருவரும் நிகழ்ச்சி நெறியாளர்களாகச் செயல்பட உள்ளனர். அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில், கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன.
பிப்ரவரி மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்பவேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் பிப்ரவரி மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘வெற்றியின் பக்கம் நான் சென்றுவிட்டேன் என்ற தைரியத்தில் சற்று அலட்சியமாக இருந்துவிட்டேன்.’
இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘கண்களை மூடவிடாமல் ஓயாமல் விரட்டும் அலைகளின் ஒலியிலிருந்து எப்படித் தப்பிப்பேன்?’
பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘முதல் நாள் இரவு கணினியில் செய்து வைத்திருந்த வேலைகள் அனைத்துமே காலையில் காணாமல் போயிருந்தன.’
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 2025 ஜனவரி 24ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு https://www.singaporetamilwriters.com/16 என்ற இணையப்பக்கத்தையோ தொலைபேசி வாயிலாக 81420220 எனும் எண்ணில் பிரதீபா வீரபாண்டியனையோ 91696996 என்ற எண்ணில் பிரேமா மகாலிங்கத்தையோ நாடலாம்.

