சிங்கப்பூரையும் இந்தியாவையும் சேர்ந்த சுகாதார நிபுணர்களை இணைக்கும் அந்திமகாலப் பராமரிப்பு முதன்மைப் பயிற்சித் திட்டத்தை (Palliative Care Accessibility Core Training program - PACT) அறிமுகம் செய்துள்ளது சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம்.
சிங்கப்பூர் - இந்தியா 60 ஆண்டுகால அரசதந்திர உறவு கொண்டாடப்படும் வேளையில், சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் 30 ஆண்டுகால பங்காளித்துவத்தை இத்திட்டம் வலுப்படுத்தும்.
இந்தியாவில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 30 சுகாதாரத் துறை வல்லுநர்களையும் சிங்கப்பூர் வல்லுநர்களையும் ஒண்றிணைத்து, துறை ரீதியிலான நிபுணத்துவப் பறிமாற்றத்திற்கு வழிவகுக்கும் இப்பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழா மார்ச் 3ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சினில் நடைபெற்றது.
‘பேலியம் இந்தியா’ அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இத்திட்டத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்தோருக்கான மருத்துவம், இசை வழி சிகிச்சை, வலி மேலாண்மை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்களிக்கவுள்ளனர்.
கூ டெக் புவாட் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் அந்திமகாலப் பராமரிப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் அகிலேஸ்வரன் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பயிற்சியின் மூலம், மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ 35,000 நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மருத்துவச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத் தலைவர், தொடர்பு தகவல் அமைச்சின் மூத்த ஆலோசகரும் (அரசாங்கத் தொடர்பு) பிரதமர் அலுவலக துணைச் செயலாளருமான ஜனதாஸ் தேவன் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இவருடன், ‘பேலியம் இந்தியா’ அமைப்பின் தலைவர் பினோத் ஹரிஹரன், கேரளா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தில் வலியைச் சமாளிப்பதன் சிக்கலான அறிகுறிகள், புற்றுநோய் தவிர்த்து சிறுநீரகம், சுவாச மண்டலம், இதயம், நரம்பியல் மண்டலம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை சமாளிப்பது குறித்து பகிரப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மேம்பட்ட பராமரிப்பு, வலி மேலாண்மை, வாழ்வின் இறுதிக் கட்டத்திலுள்ள நோயாளிகளுக்கான பராமரிப்பு உள்ளிட்டவையும் ஆலோசிக்கப்படும்.
இந்த அமைப்புகள் இணைந்து 2026ல் நடத்தவுள்ள வட்டமேசைக் கலந்துரையாடலில் பங்கேற்கும் நிபுணர்களுக்கு இந்திய சுகாதாரத் துறைத் தலைவர்களுடன் கொள்கை, அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து கலந்தாலோசிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்திய நிபுணர்கள் சிங்கப்பூருக்கு வருகையளித்து நேரடிப் பயிற்சிகள் பெறவும் வாய்ப்பளிக்கப்படும்.
“சிங்கப்பூரைப் போல கேரளாவும் விரைவாக மூப்படைந்து வரும் சமூகம். இத்திட்டத்தை இந்தோனீசியாவில் வெற்றிகரமாக நடத்தினோம். இந்தியாவின் மக்கள்தொகை பெரிது. சிங்கப்பூர் நிபுணர்களைக் கொண்டு முதற்கட்டமாக 30 நிபுணர்களைப் பயிற்றுவிக்கிறோம். அவர்கள் பிறருக்குப் பயிற்சி அளிப்பார்கள். இது சங்கிலித் தொடராக அமையும்.
“சிங்கப்பூரால் இயன்றதைச் செய்கிறோம். இதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த வல்லுநர்கள் தங்களது சொந்த நேரத்தை ஒதுக்குகிறார்கள்,” என்றார் திரு ஜனதாஸ் தேவன்.
மக்களுடனான தொடர்பு, இந்தியா - சிங்கப்பூர் உறவின் அடித்தளம். சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க மக்கள், பல தலைமுறைகளுக்குமுன் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இந்தியாவிலிருந்தும் பிற தெற்காசிய நாடுகளிலிருந்தும் வந்த மக்களின் கலாசார அடிப்படைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவையும் மேம்படுத்த முடியும்,” என்றார் அவர்.
திட்டத்தை வழிநடத்தவுள்ள மருத்துவர் அகிலேஸ்வரன், “வலி மேலாண்மை, இறுதிகாலப் பராமரிப்பு என அனைத்தும் கலாசாரத்துடன் தொடர்புடையவை. சிங்கப்பூர் நிபுணர்கள் இந்திய வல்லுநர்களிடமிருந்து கலாசார நுணுக்கங்களைக் கற்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.
“எனக்குப் பல்வேறு விதமான மக்களைச் சந்திக்கவும் எனக்குத் தெரிந்தவற்றைச் கற்றுத் தருவதும் அவர்களிடமிருந்து கற்பதும் மிகவும் பிடித்தமானது. இந்தத் திட்டத்திற்குப் பங்களிப்பது மனநிறைவு தருகிறது,” எனச் சொன்னார் இதில் பயிற்சியளிக்கவுள்ள மருத்துவர் வித்யா தர்ஷினி பிள்ளை.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய டாக்டர் மோகனன், “ஆண்டாண்டு காலமாக இந்தியக் கலாசாரத்தில் உள்ள கவனிப்பு, ஆறுதல், கனிவு மனப்பன்மையை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது வலி மேலாண்மையின் அடிப்படைக் கூறு,” என்றார்.
இதை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் கேரளாவில் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் நிபுணர்கள் முன்வந்து தகவல் பறிமாற்றத்தில் பங்களிப்பது சிறப்பு என்றும் தெரிவித்தார்.
கேரளாவின் அந்திமகாலப் பராமரிப்பின் தந்தை என்றழைக்கப்படும் திரு ராஜகோபால், “2030க்குள் கேரள மக்கள்தொகையின் 20 விழுக்காட்டினர், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.
“உலகின் பல பகுதிகளிலும் இந்நிலை உள்ளது. மேலும், 20 வெவ்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்ட 7 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் நாட்பட்ட வலியுடன் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தேவையான சிறந்த வலி மேலாண்மை, சிகிச்சைத் திட்டம் தேவைப்படுகிறது,” என்று காணொளி வழி அவர் தெரிவித்தார்.

