பிளவுகள் பெரிதாகியுள்ள உலகை எவ்வாறு வழிநடத்துவது என்ற கேள்விக்கு விடை எளிதல்ல என்றாலும் அதற்கான குறிப்புகள் நம் வரலாற்றுப் பக்கத்தில் உள்ளன.
பூசலுக்கும் உயிர்க்கொல்லி நோய்களின் பரவலுக்கும் இடையே, சிங்கப்பூரைப் போன்ற சிறிய நகரமான இத்தாலியின் ஃபுளோரன்ஸ், வளர்ச்சி கண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றிய வரலாற்றை இன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்ப்பது பயனுள்ளதாகும்.
‘சிம்’ எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய கற்றல் விழாவில் தலைவர்கள் வழிகாட்டி (The Leaders Compass) என்ற அமைப்பின் தலைவராகவும் ஹார்வர்டு கென்னடி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ள டாக்டர் டீன் வில்லியம்ஸ் அதனைத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (நவம்பர் 28) நடைபெற்ற ‘சிம் 60’ என்ற அந்தக் கற்றல் விழாவில் பங்கேற்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பித்தார்.
துணிச்சலான முயற்சிகளுக்கும் புதுமையான புத்தாக்கத்திற்கும் பெயர்போன காலகட்டமாக ஐரோப்பிய மறுமலர்ச்சி திகழ்ந்தது என்பதை டாக்டர் வில்லியம்ஸ் சுட்டினார்.
“ஓவியங்கள், சிற்பங்கள், கட்டடக்கலை ஆகியவற்றை அந்தக் கால மறுமலர்ச்சியுடன் பலர் தொடர்புபடுத்துவர். ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி, அந்தக் காலகட்டம் தயக்கமற்ற கற்பனையாற்றல் பற்றியது; புதிய முயற்சிகளை மேற்கொண்டு தடைகளைத் தகர்த்தெறிந்த தீரம் பற்றியது,” என்று அவர் கூறினார்.
பொறியாளருக்கும் கட்டடக் கலைஞருக்கும் உரிய எந்தப் பயிற்சியும் பெறாத ஃபிலீப்போ ஃப்ருனெலெஸ்கி, ஃபுளோரன்ஸ் தேவாலயத்தின் குவிமாடத்தை வடிவமைக்க முடிந்ததை டாக்டர் வில்லியம்ஸ் உதாரணமாகச் சுட்டினார்.
புத்தாக்கமும் ஆர்வமும் உள்ளவர்களைக் கட்டுப்பாடுகள் இன்றி விரிந்த கரங்களுடன் வரவேற்கும் அன்றைய கலைக்கழகங்கள் இதற்கு முக்கியக் காரணம் என்றார் டாக்டர் வில்லியம்ஸ்.
தொடர்புடைய செய்திகள்
“இதே புத்தாக்கமிகு துணிச்சல், இன்றைய தலைமைத்துவத்திற்குத் தேவைப்படுகிறது. நிபுணத்துவங்களைத் தாண்டிய புதிய சாத்தியங்களைக் கற்பனை செய்யும் ஆற்றலைப் பற்றிப் பேசுகிறேன்,” என்றார் அவர்.
சவால்கள் இருவகை
தொழில்நுட்பச் சவால்கள், தகவமைப்புச் சவால்கள் (adaptive challenges) ஆகிய இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதைச் சுட்டிய டாக்டர் வில்லியம்ஸ், இரண்டாவது வகையான சவாலில் தலைவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொழில்நுட்பச் சவால்களுக்குத் தெரிந்த தீர்வுகளைப் பயன்படுத்தலாம். ஆனால் தெரிந்த தீர்வுகளையும் கைவிடுவது தகவமைப்புச் சவால்களைக் கையாள்வதற்குத் தேவை என்றும் அவர் கூறினார்.
“முறிந்துபோன உலகச் சூழலில் தலைமைத்துவம் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மட்டுமல்ல. பிரச்சினைகளை உண்டாக்கிய அமைப்புமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் உருமாற்றுவது பற்றியதாகும்,” என்றார் அவர்.
நல்ல தலைவர்களுக்குரிய குணக்கூறுகளை விவரித்த டாக்டர் வில்லியம்ஸ், “எல்லைகளைத் தாண்டக்கூடியவர்கள் சிறந்த தலைவர்கள்; மக்களை ஒன்றிணைத்து வெவ்வேறு கோணங்களுக்கான இடத்தைத் தருபவர்கள்,” என்றும் கூறினார்.
குறிப்பாக, இளையர்களுக்கும் பிறரால் அதிகம் செவி சாய்க்கப்படாத பிரிவினருக்கும் உரமூட்டும் சூழலை இத்தகைய தலைவர்கள் உருவாக்குவதாக அவர் கூறினார்.
“இனத்தையோ மொழியையோ சார்ந்த ஆணவப்போக்கில் செல்வதற்குப் பதிலாக எல்லா வகையான மக்களையும் ஒன்றிணைப்பதில் சிங்கப்பூர் பாராட்டுக்குரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
“ஆனாலும் அத்துடன் நம் பணி ஓய்ந்துவிடுவதில்லை. புத்தாக்கத்தைத் தழுவ விரும்பும் தலைவர்கள் முதலில் ஆர்வத்துடன் ‘எது சாத்தியம்’ எனக் கேட்டு, புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதுவே நல்ல முதற்படி,” என்று அவர் கூறினார்.