தங்கள் சுற்றுச்சூழல் குறித்து இயல்பாகவே ஆராய குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் முறை, ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.
விளையாட்டிற்கும் கற்றலுக்கும் உள்ள தொடர்பைக் கூர்ந்து கவனித்தால் வேடிக்கையான முறையில் கற்பிக்கப்படும் கல்வி, குழந்தைகளின் மேம்பட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
“விளையாடுவது எப்படி என குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது அவர்கள் இயல்பாகவே செய்ய கற்றுக்கொள்ளும் முதல் ஒருசில நடவடிக்கைகளில் அடங்கும்,” என்றார் கிட்ஸ்டார்ட் நிறுவனத்தில் ஆரம்பகால குழந்தைப்பருவ ஆலோசகராகப் பணிபுரியும் திருவாட்டி புஷ்பவல்லி நமசிவாயம், 65.
ஆரம்பகால குழந்தைப்பருவ பயிற்சியில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டுள்ள இவர், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பெற்றோருக்கும் சிறுபிள்ளைகளுக்கும் உதவி வருகிறார்.
குழந்தைகள் விளையாடும்போது பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் அதனால் அவர்களிடம் மேலும் பலவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் தூண்டப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
குழந்தைகள் தங்கள் உலகைப் புரிந்துகொள்ளவும் வலுவான அடையாள உணர்வை வளர்த்துக்கொள்ளவும் விளையாட்டு உதவுகிறது. மேலும், கற்பனைத்திறன், படைப்பாற்றல், தகவல்தொடர்புத் திறன், பேச்சுத்திறன், சிந்தனைத்திறன், உணர்திறன் முதலியவற்றையும் அவர்கள் விளையாட்டின்வழி வளர்த்துக்கொள்ள பல்வேறு வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விளையாட்டு அமைத்துக்கொடுக்கிறது.
விளையாட்டு அடிப்படையிலான கற்றல், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது அவர்கள் தயார்நிலையில் இருப்பதற்குத் தேவைப்படும் திறன்களையும் வளர்க்கிறது.
“குழந்தைகள் தங்களுக்கு விருப்பமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அர்த்தமுள்ள வகையில் தங்கள் நேரத்தைச் செலவிடும்போது, அவர்களின் கவனம் மேம்படுகிறது; தங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ளும் ஆர்வமும் ஏற்படும்,” என்றார் திருவாட்டி புஷ்பவல்லி.
தொடர்புடைய செய்திகள்
கல்வியைத் தாண்டி, குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு, குழுப்பணி போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் விளையாட்டு உணர்த்துகிறது என்றும் அவர் சொன்னார்.
குழந்தைகளின் முதல் ஆசிரியர்களான அவர்களின் பெற்றோர் அவர்களின் கற்றல் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பிள்ளைகள் விளையாடும்போது அவர்களுடன் இணைந்து அந்த நடவடிக்கைகளில் பெற்றோரும் ஈடுபடும்போது அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களை உருவாக்கலாம்.
“பெற்றோர்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே ஓர் அழகான பிணைப்பு உருவாகிறது. அது, குழந்தைகளின் சமூக, உணர்வுரீதியிலான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது,” என்றும் திருவாட்டி புஷ்பவல்லி சொன்னார்.
விளையாட்டின்வழி தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் காணும்போது பெற்றோர் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது என்றார் அவர்.
“தங்கள் குழந்தை அதிகமாகப் பேசுவதையும், படைப்பாற்றலை வெளிக்காட்டுவதையும், பிரச்சினைகளை எளிதாகத் தீர்ப்பதையும் பார்த்து பெருமிதம் கொள்ளும் பெற்றோர் அந்தத் தருணம் பற்றி பலர் என்னிடம் பேசியுள்ளனர். ‘என் குழந்தை இவ்வளவு திறமைசாலி என்பது எனக்குத் தெரியவில்லை’ என்றும் பலர் சொல்வார்கள்,” என்றார் திருவாட்டி புஷ்பவல்லி.
விளையாட்டு அடிப்படையிலான கற்றல் முறையுடன் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களின் ஈடுபாட்டை இணைக்கும்போது, குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொள்வதையும் தாண்டி மேன்மேலும் சிறப்பாக விளங்க முடியும்.

