தலைமுறைகளாகத் தொடரும் தாதிமை

3 mins read
8b7fa06f-0b69-45a0-86a9-fdd4c52ad170
தாதி நிர்வாகியாக ஓய்வுபெற்ற சிவகாமு குஞ்சுவின் (இடது) மகள் மேனகா செல்வராஜனும் மகன் ராஜீவ் செல்வராஜனும் தற்போது தாதியராக உள்ளனர்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

தாதிமைத் துறையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்து அண்மையில் ஓய்வுபெற்றார் முன்னாள் தாதிமை மேலாளர் சிவகாமு குஞ்சு, 62.

ஆனால், அவரின் பிள்ளைகள் மேனகா செல்வராஜன், 38, ராஜீவ் செல்வராஜன், 34, இருவரும் அன்னையின் வழியில் தாதியரானது எதிர்பாராததோர் இன்பத் திருப்பம்.

1987ஆம் ஆண்டில் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரியத் தொடங்கினார் சிவகாமு.

“என் அம்மாவுக்கு நான் ஒரு தாதியாக வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால், நான் தாதிப் பணிக்கு விண்ணப்பித்தேன்,” என்று கூறினார் சிவகாமு.

அவர் பணியில் சேர்வதற்கு ஈராண்டுகளுக்கு முன்புதான் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை திறக்கப்பட்டது. அப்போது அங்கே 600 படுக்கைகள் மட்டும் இருந்ததை சிவகாமு நினைவுகூர்ந்தார்.

“சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் நான் என் தாதிப் பயிற்சியை மேற்கொண்டேன்,” என்று அவர் சொன்னார்.

தான் ஒரு புதிய தாதியாக இருந்தபோது தன் குழுவினர் ஒரு நோயாளியின் காலை அகற்ற வேண்டியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

“பணியில் சேர்ந்த புதிதில் அது நிகழ்ந்தது ஒரு மறக்கமுடியாத நினைவு,” என்றார் அவர்.

அக்காலத்தில் மருத்துவமனைகளில் கணினிப் பயன்பாடு அதிகம் இல்லை என்றும் மேலும், தாதியர்க்கு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றும் சிவகாமு கூறினார்.

இருந்தாலும், மற்ற தாதியரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளும் தன்மீது காட்டிய அன்பின் காரணமாக சிவகாமு தம் வேலையை நேசித்தார்.

“அவர்கள்தான் எனக்குத் தாதிமை துறையின் மீதான ஆர்வத்தைத் தூண்டினர்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் சிவகாமு.

இத்தனை சவால்களுக்கு இடையிலும் அவர் தம் குடும்பத்தைக் கைவிடவில்லை என்றார் சிவகாமுவின் மகள் மேனகா.

“நானும் என் தம்பியும் சிறு வயதில் அம்மாவுக்குச் சில சிரமங்கள் தந்துள்ளோம். இருப்பினும், அவர் எங்களை மிகவும் பொறுமையுடன் கையாண்டார்,” என்று சிரித்தவாறே கூறினார் மேனகா.

அம்மாவின் அந்த குணம் இதுபோன்ற அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைத்தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை மகளுக்கு உணர்த்தியது.

கடந்த 15 ஆண்டுகளாகச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் மூத்த தாதியாகப் பணிபுரிந்து வரும் மேனகாவுக்கும் அம்மாவைப் போல ஒரு நாள் தாதி நிர்வாகியாக வேண்டும் என்ற லட்சியம் உள்ளது.

பணியின்போது சில நாள்கள் சோர்வளிப்பதாகவும் கடினமானதாகவும் இருந்திருக்கின்றன என்று அவர் சொன்னார்.

“அது போன்ற தருணங்களில் நான் எப்போதும் அம்மாவையும் அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததையும் நினைவில் கொள்கிறேன் - எவ்வளவு சோர்வாக இருந்தாலும் நம் ஊக்கத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது என்று.”

மேலும், இன்று தாதிமைத் துறை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நவீனமயமாகி, விரைவாக இயங்க முடிந்தாலும் அதன் மையமான மனிதநேயம் ஒருபோதும் மாறவில்லை என்கிறார் மேனகா.

அத்துடன், தன் தம்பியும் இதே துறையில் அடியெடுத்து வைத்தது தமக்கு இன்னும் பெருமை அளிப்பதாகக் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மூக்கின் வழியாக சளி மாதிரி எடுக்கும் பரிசோதனையாளராகப் பணிபுரிந்தார் ராஜீவ்.

“அந்த அனுபவம் என்னை தாதிமைத் துறையில் நுழையத் தூண்டியது,” என்றார் அவர்.

கடந்த ஓராண்டாக, ராஜீவ் தன் அக்காவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றி வருகிறார்.

தன் தொழிலைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது அவர்கள் பெரும்பாலும் வியப்படைவதாக அவர் சொன்னார்.

“ஒரே குடும்பத்தில் பல தாதியரை, அதுவும் ஓர் ஆண் தாதியை பார்ப்பது சாதாரணமானதன்று என நினைக்கிறேன்,” என்றார் ராஜீவ்.

இருப்பினும், அம்மாவின் வழியில் தானும் தன் அக்காவும் தொடர்ந்து பங்களிப்பதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக அவர் கூறினார்.

தாதிமை என்பது என் அம்மாவுக்கு வெறும் தொழிலன்று என்றார் ராஜீவ்.

“அது ஓர் உன்னதமான சேவை. சிறு வயதில் எனக்கு அது முழுமையாகப் புரியவில்லை. ஆனால், இப்போது அவர் இத்தனை ஆண்டுகள் சேவையாற்றியதைப் பாராட்டுகிறேன்,” என்றார் இந்த அன்புமகன்.

குறிப்புச் சொற்கள்