உதவி தேவைப்படும் நண்பனுக்கு உதவுவதாக அவர் நினைத்தார்.
ஆனால் திரு லீ ஜி யோங்,23 தன்னுடய முன்னாள் சக ஊழியர் ஜேசனுக்குப் பணம் அனுப்பியவுடன் தனது எண்ணை அவர் முடக்கிவிட்டதை அறிந்தார்.
நண்பரின் நண்பர்களிடம் பேசியபின்தான், ஜேசன் எனும் பெயரில் தன்னிடம் பேசியது மோசடிப் பேர்வழி என்பதை உணர்ந்தார்.
தான் மிகவும் பீதியடைந்ததாகச் கூறிய திரு லீ, “இழந்த பணம் திரும்பக் கிடைக்காது எனும் நினைவே என்னை வாட்டி எடுக்கிறது” என்றார்.
வீட்டை புதுப்பிப்பதற்கு பணம் தேவைப்பட்டதாகக் கூறிக் கடன் கேட்ட “ஜேசன்” பெயரில் பேசிய மோசடி நபருக்கு, 700 வெள்ளி பணம் செலுத்தினார் திரு லீ.
உள்ளூர்ப் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் கல்வி பயிலும் மாணவருக்கு இந்தத் தொகை பெரிதுதான். தன மாதச் செலவுகளை அவர் பகுதி நேர பணிகள் மூலம் ஈட்டும் 600 வெள்ளியையும், பெற்றோரிடமிருந்து வரும் 600 வெள்ளித் தொகையையும் கொண்டு சமாளித்து வருகிறார்.
திரு லீ, கடந்த ஆண்டில் மோசடிப் பேர்வழிகள் வலையில் சிக்கிய 6,859 நபர்களில் ஒருவர். கடந்த 2022ஆம் ஆண்டில் 2,106ஆக இருந்த மோசடி வழக்குகள், 2023ஆம் ஆண்டில் 225.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர்க் காவல் துறைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டில் 8.8 மில்லியன் வெள்ளியாக இருந்த மொத்த இழப்புத் தொகை 162.5 விழுக்காடு அதிகரித்து 2023ஆம் ஆண்டில் 23.1 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
‘நான் யாரென்று தெரிகிறதா?’
“ஜேசன்” எனும் பெயரில் பேசுவது மோசடிப் பேர்வழியாக இருக்கலாம் என்று திரு லீ சந்தேகித்தாரா? இல்லவே இல்லை என பதிலளிக்கிறார்.
“அவர் என்னிடம் எடுத்தவுடன் பணம் கேட்கவில்லை.”
இது 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெரியாத எண்ணிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் தொடங்கியது.
நள்ளிரவு நேரத்தில் பாதித்த தூக்கத்தில் நான் இருந்தபோது, தொலைபேசியில் அழைத்து, வெளிநாட்டு உச்சரிப்புடன் மாண்டரின் மொழியில் பேசியவர், தனது தொலைபேசி தொலைந்துவிட்டதாகவும், என்னை மாற்றிவிட்டதாகவும் கூறினார்.
“நான் யாரென்று தெரிகிறதா” என்றார்.
பாதித்த தூக்கத்தில் இருந்த திரு லீ, 2022ஆம் ஆண்டு பகுதி நேரக் கிடங்கு உதவியாளராகப் பணிபுரிந்தபோது, தான் சந்தித்த “ஜேசன்” என்பவராகக் இருக்கலாம் எனக் கூறினார். உடனே அதனை ஏற்றுக்கொண்ட அழைப்பாளர் தனது இப்புதிய என்னை பதிவு செய்துகொள்ளுமாறு திரு லீயிடம் கூறியுள்ளார்.
மறுநாள் காலை அந்த “ஜேசன்” மீண்டும் அழைத்தார். அப்போது, தனது வாங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த பே நவ் என்னை மாற்ற உதவி செய்யச் சொன்னார்.
அதற்குத் திரு லீ வழிகாட்டுதல்களைத் தொலைபேசியில் கூற, “ஜேசன்” தனது பாதுகாப்புக் கேள்விக்கு தவறான பதிலைச் சொன்னதால், தனது இணைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.
அதன் பின்னரே அந்த “ஜேசன்” பணம் கேட்டுள்ளார்.
“தனது வீட்டை புதுப்பிப்பதற்காக அவசரமாகத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் அன்று மாலை 4.30 மணிக்கே அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதியளித்தார்” என்றார் திரு லீ.
நண்பருக்கு உதவி செய்வதாக நினைத்து, திரு லீ அந்த “ஜேசனுக்கு” பே நவ் மூலம் 700 வெள்ளிப் பணம் அனுப்பியுள்ளார்.
மாலை 4.45 மணி ஆகியும் தனது வங்கிக்கு பணம் வந்து சேராததை உணர்ந்த திரு லீ, “ஜேசனை” அழைக்க முயன்றார். இணைப்பு கிடைக்காததால் குறுந்செய்து அனுப்ப முயல, வாட்சாப்பிலும் முடக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.
“பிற தெரிந்த நண்பர்களைத் தொடர்பு கொண்டு கேட்டேன், உண்மையான ஜேசன் தனது எண்ணை மாற்றவில்லை என்று தெரிந்து கொண்டேன்” என்றார். அதற்குப் பின்னர் காவல்துறைக்குப் புகார் அளித்தார் திரு லீ.
மோசடிக்கு முன் நம்பிக்கைக்காக நட்பு பாராட்டுதல்
போலி நண்பர்கள் பேரில் நடக்கும் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும்பாலும் தெரியாத எண்களிலிருந்து தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் அழைப்புகள் வந்துள்ளன. அழைக்கும் மோசடிப் பேர்வழி, நண்பரைப் போலப் பேசி அவர்களின் புதிய எண்ணைப் பதிவு செய்து கொள்ளச் சொல்கின்றனர்.
பின்னர் அம்மோசடிப் பேர்வழிகள் மீண்டும் அழைத்து, தங்களால் வங்கிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியவில்லை என்றோ, நிதிச் சுமையை எதிர்கொள்வது போன்றோ நம்பவைத்து கடன் கேட்கின்றனர்.
மோசடிப் பேர்வழிகள் பாதிக்கப்பட்டவர்களிடம், உணவக முன்பதிவு செய்ய உதவும் இணைப்புகள் போலத் தோன்றும் பாதுகாப்பற்ற இணைய இணைப்புகளை சொடுக்கும்படியும் கேட்கலாம்.
போலி நண்பராக அழைக்கும் மோசடிப் பேர்வழிகள், பண உதவி கேட்பதற்கு முன், பாதிக்கப்பட்டவர்க்குத் தெரிந்தவர் போல நடித்து நம்பிக்கையை வளர்க்க முயல்கின்றனர் என்றார் சிங்கப்பூர்க் காவல்துறை மோசடித் தடுப்புப் பொதுக் கல்வி அலுவலகச் செயல்பாட்டுத் துறையின் உதவி இயக்குநர் ரோஸி ஆன் மெக்கின்டைர்.
அவர்கள் பொதுமக்களின் உதவி செய்யும் மனப்பான்மையை, அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர் என்றார்.
திரு லீ தனது பணத்தை திரும்பப் பெற வாய்ப்பில்லை என்பதை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்.
ஒருவேளை தன்னை ஜேசன் என்று சொல்லிக்கொண்ட நபரிடம் நேரில் சந்திக்கவோ, வேறு வழியில் ஜேசனின் அடையாளத்தை உறுதி செய்யவோ கோரி இருந்தால் முன்கூட்டியே சுதாரித்து இம்மோசடி நடைபெறுவதைத் தடுத்திருக்கலாம் என்றார் அவர்.
போலி நண்பர் அழைப்பு மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்
பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும்
- மோசடி நோக்கத்திலான இணைப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வைரஸ் தடுப்புச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும்.
- இணையத் தேடுத்தளத்தில் தானாகவே பாப்-அப் வருவதைத் தவிர்க்க செயல்முறைகளை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.
- செயல்பாட்டு முறைகள், செயலிகள், வைரஸ் தடுப்பு மென்பொருள் ஆக அண்மைய பாதுகாப்பு அம்சங்களுடன் இருப்பதை உறுதிசெய்யவும்.
மோசடியை அடையாளம் காண அதிகாரபூர்வ வழிகளை நாடவும்
- அழைத்தவரின் அடையாளத்தை உறுதிசெய்ய ஏற்கெனவே அறிந்த எண் அல்லது சமூக ஊடகப் பக்கம் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
- நம்பிக்கைக்குரியவரிடம் அழைத்தவரின் அடையாளத்தை உறுதிசெய்யுங்கள்.
- வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
- அதிகாரபூர்வ வழிகளில் மட்டும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும். மாறாக அனுப்பிவைக்கப்படும் இணைப்புகளைச் சொடுக்கவேண்டாம்.
- 1800-722-6688 எனும் எண்ணில் scamalert.sg எனும் இணையப்பக்கத்தில் அதிகாரபூர்வமாக மோசடிகளை அடையாளம் காணுங்கள்.
அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லவும்
- மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் உடனே தெரிவித்து காவல்துறையிடம் புகாரளியுங்கள்.
- ஆக அண்மைய மோசடி தடுப்பு ஆலோசனைகளுக்கு ScamAlert வாட்ஸ்அப் பக்கத்தைப் பின்தொடர்ந்து அதனை குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிருங்கள்.
சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது

