வேலை, குடும்பம், தனிப்பட்ட கடமைகள் அனைத்தையும் சமநிலைப்படுத்துவது சில நேரங்களில் நம்மை அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக்கலாம். நமது நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்து, மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து பின்பற்றுவதன்வழி நம்மை சிறந்த நிலையில் வைத்திருப்பதை உறுதிசெய்ய முடியும்.
மன அழுத்தம் என்பது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கையின் சவால்களுக்கு இயற்கையான எதிர்வினையாகும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை எதிர்கொள்ளும்போது அட்ரினலின், கார்டிசோல் எனும் இரண்டு ஹார்மோன்களின் சுரப்பு உடலில் அதிகமாகிறது.
நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனின் தொடர்ச்சியான அதிகரிப்பைத் தூண்டுவதால் இதயத்துடிப்பு அதிகமாவதோடு ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால் நீண்ட காலத்தில் இதய ஆரோக்கியமும் நமது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியும் பாதிக்கப்படலாம்.
மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட பழக்கத்தை அமைத்துக்கொள்வது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். உடற்பயிற்சி, நேரத்தை வகுப்பது, கவனத்துடன் சுவாசிப்பது முதலிய நுட்பங்களைப் பயன்படுத்தி சுய பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளித்தால் தனிநபர்கள் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் ஆரோக்கியமான சமநிலையை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
“பரபரப்பான வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவுடன் எனது வேலை தொடர்பான மின்னிலக்கச் சாதனங்களை நிறுத்தி வைத்துவிடுவேன். எனக்குப் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்று சந்தைப்படுத்துதல் மேலாளர் தாரா ராமராஜன், 32, கூறினார்.
“சமையல் செய்வதில் நான் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். காய்கறிகளை நறுக்குவது முதல் பாத்திரத்தில் உணவுப் பொருள்களைக் கிளறி, ஒரு தட்டில் சமைத்த உணவை அழகாக அலங்கரித்து வைப்பது வரை சமையல் செய்வதன் ஒவ்வொரு படியும் நான் எதிர்கொள்ளும் மன அழுத்தத்திலிருந்து கவனத்தை திருப்ப உதவுகிறது,” என்றார் அவர்.
மன அழுத்தத்தைச் சமாளிப்பதில் ‘மீ-டைம்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுய பராமரிப்புக்கான நேரத்தின் முக்கியத்துவம் குறித்து திருவாட்டி தாரா வலியுறுத்தினார்.
“முந்தைய இரவு நான் சுய பராமரிப்புக்கு நேரம் ஒதுக்கும்போது அடுத்த நாளுக்காக மேலும் தயாராக இருப்பதை உணர்கிறேன்,” என்றார் அவர்.
தனது வேலையின் ஓர் அங்கமாக, குறுகியகால காலக்கெடுவுக்குள் பல்வேறு திட்டப்பணிகளை அடிக்கடி நிறைவேற்றிவரும் மேலாண்மை ஆலோசகர் வர்ஷினி துரை, 27, மனநிம்மதி அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொன்னார்.
முக்கியமாக, நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் மனம், உடல் அழுத்தத்தைப் போக்க தினமும் அரை மணி நேரமாவது தியானம் அல்லது யோகா செய்வதாகக் கூறினார்.
“எனது சுய பராமரிப்பில் கவனம் செலுத்துவதற்கு யோகா உதவுகிறது. அதைச் செய்யும்போது மனம் நிம்மதியடைவதுடன், மன அழுத்தமும் இல்லாமல் என்னால் இரவில் நன்றாக தூங்க முடிகிறது,” என்று குமாரி வர்ஷினி கூறினார்.
படுக்கைக்குச் செல்வதற்குமுன் தனக்குப் பிடித்த மெல்லிசைப் பாடல்களைக் கேட்பதையும் நூல் வாசிப்பதையும் தாம் வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

