புதுப்பிக்கப்பட்ட சமகாலக் கலைப்படைப்புகளோடு மீண்டும் திரும்புகிறது சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் கற்றல் காட்சிக்கூடம் (Learning Gallery).
பல ஆண்டுகளில் முதன்முறையாகச் சில கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், எட்டு உள்ளூர்க் கலைஞர்களின் படைப்புகளோடு இம்முறை முழுமையாகச் சிங்கப்பூரர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2ஆம் தேதிமுதல் அடுத்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்காக இக்காட்சிக்கூடம் திறந்திருக்கும்.
கலை வழியாகச் சமூகத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, கற்றல் காட்சிக்கூடத்தின் மூலம் ஒரு மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க முற்படுகிறது சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம்.
குழந்தைப் பருவத்தை மையமாகக் கொண்டு, நம் ஆளுமையை வடிவமைப்பதில் அக்காலகட்டத்திற்கு இருக்கும் ஆற்றலை எடுத்துக்காட்டும் விதமாகக் கலைப் படைப்புகள் விளங்கும்.
மேலும், அடையாளம், இயற்கை, சுற்றுச்சூழல், நினைவாற்றல் எனப் பல்வேறு கருப்பொருள்களும் இப்படைப்புகளின் மூலம் வெளிப்படும்.
கற்றல் காட்சிக்கூடத்திற்கு அனைவருக்கும் அனுமதி இலவசம்.
தொடர்புடைய செய்திகள்
கற்றல் காட்சிக்கூடத்தின் சீரமைப்பையும் எஸ்ஜி60 கொண்டாட்டங்களையும் முன்னிட்டு, ஆகஸ்ட் 2ஆம் தேதி சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம் ஒரு கலைத் திருவிழாவையும் நடத்துகிறது.
இதில் குடும்பங்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேல்விவரங்களுக்கு https://www.singaporeartmuseum.sg/art-events/exhibitions/learning-gallery என்ற இணையத்தளத்தை நாடலாம்.

