1,060 பொம்மைகளோடு ஆக நீளமான ‘பார்பி’ ஓடுபாதை

1,060 பொம்மைகளோடு ஆக நீளமான ‘பார்பி’ ஓடுபாதை

2 mins read
3b080f60-7275-4a20-a669-a1b29e209b46
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்பி பொம்மைகள் நிறைந்த ஓடுபாதை. - படம்: பீஸ் ஆஃப் ஆர்ட் எஸ்ஜி
multi-img1 of 2

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்பி (Barbie) பொம்மைகளை வெவ்வேறு பரிமாணங்களில் கண்டு ரசிப்பதோடு, மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரு பார்பி பொம்மையையும் வடிவமைக்கலாம்.

மரீனா ஸ்குவேர் கடைத்தொகுதியில் ஜூன் 25 முதல் ஜூலை 1 வரை நடைபெறும் ‘தி விங்ஸ் ஆஃப் ஆர்ட்’ (The Wings of Art) நிதி திரட்டுக் கண்காட்சியில் சிங்கையின் ஆக நீளமான பார்பி பொம்மைகளின் ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவிருக்கும் இக்கண்காட்சி, வசதி குறைந்தோருக்காக $100,000 திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘பீஸ் ஆஃப் ஆர்ட் எஸ்ஜி’ (Peace of Art SG) என்ற லாப நோக்கற்ற அமைப்பு இந்நிதி திரட்டுக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு பார்பி பொம்மைக்கு, வார நாள்களில் 75 வெள்ளி கட்டணமும் வாரயிறுதிகளில் 85 வெள்ளி கட்டணமும் செலுத்தி, வருகையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அதை வடிவமைத்துக் கொள்ளலாம்.

வருகையாளர்கள் வடிவமைக்க 1,000 பொம்மைகள் இருக்கின்றன. அவற்றிற்கு முன்பதிவு செய்ய peace-of-art.sg இணையத்தளத்தை நாடலாம்.

உள்ளூர் கலைஞர் யூனிஸ், பீங்கானை வைத்து வடிவமைத்த பார்பி பொம்மை.
உள்ளூர் கலைஞர் யூனிஸ், பீங்கானை வைத்து வடிவமைத்த பார்பி பொம்மை. - படம்: பீஸ் ஆஃப் ஆர்ட் எஸ்ஜி

60 மீட்டர் நீளமுடைய இந்த ஓடுபாதையில், 60 உள்ளூர்க் கலைஞர்கள் வடிவமைத்த 60 பார்பி பொம்மைகளையும் வருகையாளர்கள் பார்வையிடலாம்.

இந்த 60 பொம்மைகளும் ஏலத்திற்கு வருகின்றன என்பதால், https://str.sg/Ffcu என்ற இணையத்தளத்திற்கு சென்று மக்கள் ஏலத்தில் பங்கேற்கலாம்.

திரட்டப்படும் நிதி சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆதரிக்கும் வசதி குறைந்த சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் வழங்கப்படும்.

தனித்துவமான வடிவத்தில் ஒரு கலைப்பொருளைப் பெற்றுக்கொள்வதோடு, சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும் மக்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.

குறிப்புச் சொற்கள்