தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மொழிக் கற்றல் மாதிரிகளை வடிவமைத்துவரும் வல்லுநர்களிடம், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, பரவி, மருவி வந்த மொழியைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கற்பிப்பது சாத்தியமா எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, கல்வி, வேலை எனத் தொடங்கி, அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டதாக மாணவர்களும் இளையர்களும் நம்பத் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பணிகளை, குறைந்த நேரத்தில் சிறப்பாக முடிக்க செயற்கை நுண்ணறிவு உதவுவதாகக் கூறினார் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர் மதன் சிதம்பரநாதன், 23.
தமது எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கவும், கட்டுரைகளைத் திறம்பட எழுதவும், கணினி நிரல்களை விரைவாக எழுதி முடிக்கவும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருப்பதாகக் கூறினார்.
கருத்துகளை ஒன்றுதிரட்டி பொருள்படத் தெளிவாக எழுத செயற்கை நுண்ணறிவு உதவுவதாக கூறினார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக உளவியல் மாணவி அருணா கந்தசாமி.
மாணவர்கள் பலரும் கல்வி சார்ந்த, குறிப்பாக மொழிசார் தெளிவுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது, மொழியின் மீதான செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை நடைமுறையில் திறம்படப் பயன்படுத்தும் உத்திகள் குறித்த நூல்கள், விளக்கக் காணொளிகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
பெரும்பாலும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு ஆங்கில மொழியில் அமைந்திருந்தாலும், சீன மொழி தொடங்கி, தமிழ், இந்தி என பரவலாகப் பேசப்படும் பல மொழிகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எனினும், பன்முகத் தன்மையும் கலாசார நுணுக்கங்களும் நிறைந்த தமிழ் மொழியின் அடிப்படையில் அமைந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது எளிதல்ல.
சிக்கலான இலக்கணக் கட்டமைப்புகள் கொண்ட மொழியைக் கையாளும்போது, மொழியின் மரபைச் சரிவர பயன்படுத்தாமல் போக வாய்ப்புள்ளதாகவும் அதன் பன்முகத்தன்மை மறைந்து ஒரு பொது கட்டமைப்புக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது என்று சொல்லும் தமிழார்வலரும் எழுத்தாளருமான ஹேமலதா, தற்போது வரை தமிழ் மொழியை நன்கு கையாளும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் வெளிவரவில்லை என்று கருதுகிறார்.
அடிப்படையாக அனைவரும் பயன்படுத்தும் மொழி மாற்றச் செயலிகள் கூட, தமிழிலிருந்து பிற மொழிக்கு ஒப்பீட்டளவில் நன்கு மொழிமாற்றம் செய்வதாகவும், எம்மொழியிலிருந்தும் தமிழுக்கு மாற்ற தரமான செயலிகள் இல்லை என்றும் சொன்னார்.
எடுத்துக்காட்டாக, மரியாதையைக் குறிக்கும் அன், அள், அர் விகுதிகளை மொழி மாற்றுச் செயலிகள் சரியாகக் கையாள்வதில்லை என்றார். உயர்திணை, அஃறிணைப் பண்புகளையும் சரியாகக் கையாளுவதில்லை என்றும் சொன்னார்.
இதனைச் சரியாக முறைப்படுத்த நீண்ட, ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.
தமிழ் மொழியின் சொல்லகராதியை, இயந்திரக் கற்றல் முறையில் செயற்கை நுண்ணறிவு மாதிரிக்கு பயிற்றுவிப்பது எளிதுதான் என்றாலும் அதன் பயன்பாடுகள், இலக்கண விதிகள் குறித்து பயிற்றுவிப்பது சவாலானதுதான்.
முன்னேறிச் செல்லும் உலகில் ஈடுகொடுத்து மொழி வளர்ச்சி காண வேண்டும் என்றாலும், அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சிறந்தது என்று கருதுகிறார் மொழி தொடர்பான புத்தாக்க நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் குணசேகரன். மொழியின் கூறுகளுடன், இலக்கிய, இலக்கண ஆய்வுகள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு இயந்திரத்தைக் கற்பிக்க வேண்டும் என்றார்.
“இயந்திரத்திற்குப் புரிதலை ஏற்படுத்துவது சவாலானது என்றாலும் அதன் திறன் அபாரமானது. அதனைப் பயன்படுத்தி நமக்கேற்றவற்றைச் சாதிப்பது நம் கையில்தான் இருக்கிறது” என்று ஆழமாக நம்புகிறார் இவர்.
தமிழின் தனித்துவத்தைப் பாதுகாப்பது முதன்மையான குறிக்கோள் என்றால் அதனை அடைய அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களைத் தனிப்பயனாக்கம் செய்வதுதான் சிறந்தது என்றார் அவர்.
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் அதற்கு முந்தைய தொழில்நுட்பத்தைக் காட்டிலும் சிறந்ததாகவே செயல்படும். அதனை அந்நியமாக்கிப் பார்க்காமல் உதவியாகப் பார்த்து, அதனை நமது தேவைக்கேற்றபடி உருவாக்கி வைத்துக்கொள்வது எக்காலத்திலும் சிறந்தது என்பது தொழில்நுட்பத்தில் ஈடுபடும் பல தமிழார்வலர்கள் கருத்தாக உள்ளது.