உதவி தேவைப்படுவோருக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொட்டலங்களை வழங்கும் மலபார் நகைக்கடைக் குழுமத்தின் ‘பட்டினியில்லா உலகு’ எனும் சமூகநலத் திட்டம் விரிவாக்கம் காண்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மேலும் பல நகரங்களில் உள்ள கூடுதலானோருக்கு உதவி வழங்குவது நோக்கம்.
‘ஸீரோ ஹங்கர்’ எனும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மைமிக்க மேம்பாட்டு இலக்கு 2ஐ ஆதரிக்கும் இத்திட்டத்தின்கீழ், தற்போது 31,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இனி அன்றாடம் 51,000 ஊட்டச்சத்து உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மலபார் குழுமத் தலைமையகத்தில் மே 28ஆம் தேதி, உலகப் பட்டினி தினத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குழுமத் தலைவர் எம் பி அகமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் கோவா மாநில ஆளுநர் பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, இந்த விரிவாக்கத் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
தற்போது இந்தியாவின் 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 37 நகரங்களிலும் வளைகுடா நாடுகளில் உள்ள சில நிலையங்களிலும் ‘பட்டினியில்லா உலகு’ திட்டத்தின்கீழ் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இனி, 70 நகரங்களுக்கு அது விரிவுபடுத்தப்படும். தொண்டூழியர்கள், உதவி தேவைப்படுவோரை அடையாளம் கண்டு உணவுப் பொட்டலங்களை விநியோகிப்பர்.
மேலும், ஆப்பிரிக்க நாடான ஸாம்பியாவில் உள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிருப்பதாகக் குழுமம் தெரிவித்தது.
மலபார் குழுமம் ஏற்கெனவே வயது முதிர்ந்த ஆதரவற்ற, ஏழைப் பெண்களுக்கு உதவும் ‘பாட்டி இல்லம்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதன்கீழ், இலவச உணவு, தங்குமிடம், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதுவரை, பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கு மலபார் குழுமம் 29 மில்லியன் அமெரிக்க டாலர் (S$39 மில்லியன்) நிதியை வழங்கியுள்ளது.

