எடை அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

எடை அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Sep 2026 - 6:00 am

2 mins read

குழந்தை அதிக எடையுடன் காணப்பட்டாலும் அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் போதிய அளவில் இல்லாமல் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய நாளேடான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

ஒரு குழந்தை அதிக எடையுடனும் அதே நேரத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும் இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது கேட்பதற்கு முரணாகத் தோன்றினாலும் அது பல நேரங்களில் உண்மையாக மாறுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

“துரித உணவுகள், இனிப்பு பானங்கள் போன்றவை உடலுக்கு அதிக ஆற்றலைத் தரலாம். ஆனால், இரும்பு, கால்சியம், புரதம், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அவற்றில் இருப்பதில்லை.

“எடை காட்டும் கருவி உடலின் எடையை மட்டுமே காட்டும். அந்த எடையை உருவாக்கிய உணவின் தரத்தை அது காட்டாது,” என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

“உதாரணமாக, இரண்டு குழந்தைகள் ஒரே அளவு உணவைச் சாப்பிடுவதாகக் கொள்வோம். ஒரு குழந்தை காய்கறிகள், பழங்கள், முழுத் தானியங்கள், முட்டை, தயிர், பருப்பு வகைகள் ஆகியவற்றைச் சாப்பிடுகிறது. மற்றொரு குழந்தை பிஸ்கட், துரித உணவு, இனிப்பு பானங்கள் ஆகியவற்றை அதிகம் உண்கிறது. இரண்டு குழந்தைகளுக்கும் வயிறு நிறைந்திருக்கலாம். ஆனால், சத்துணவு அடிப்படையில் இரண்டு பேரின் உணவும் ஒன்றல்ல,” என்று மருத்துவர்கள் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர்.

“அதிக எடையும் நல்ல ஊட்டச்சத்தும் ஒன்றல்ல” என்று டெல்லி சிகே பிர்லா மருத்துவமனையின் சத்துணவு நிபுணர் தீபாலி சர்மா கூறுகிறார்.

அதிக எடை கொண்ட ஒரு குழந்தை, தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்ளலாம். ஆனாலும் எலும்புகள், ரத்தம், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் அக்குழந்தைக்குக் கிடைக்காமல் போகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின்படி, சத்துணவு பற்றாக்குறை, அதிக எடை, உடற்பருமன் ஆகியவை ஊட்டச்சத்துக் குறைபாட்டின் வெவ்வேறு வடிவங்களாகும்.

டெல்லி மதுகர் ரெயின்போ மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் பவன் குமார் இது குறித்து விளக்குகிறார், “ஒரு குழந்தையின் எடையை மட்டும் வைத்து அவர்களின் சத்துணவு ஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிட முடியாது,” என்று அவர் கூறுகிறார்.

அதிகச் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்ட உணவுகளை உண்பதால், இரும்பு, கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

“ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிடலாம். ஆனாலும் முறையான உணவு கிடைக்காமல் போகலாம். எனவே, எடையை மட்டுமே நம்பாமல் குழந்தையின் வளர்ச்சி, உணவின் தரம், தூக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும்,” என்று டாக்டர் பவன் குமார் வலியுறுத்துகிறார்.

குறிப்புச் சொற்கள்
உடல் எடைஊட்டச்சத்துமருத்துவர்