தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடாமுயற்சியைக் கற்றுத் தரும் நெடுந்தொலைவோட்டம்

3 mins read
ff5b6320-0957-41a0-a233-c0db3247e5ea
நெடுந்தொலைவோட்ட வீரர் யுவராஜ் துரியாதாசு, 39. - படம்: இன்கம் இன்ஷுரன்ஸ்

தம் மூன்று குழந்தைகள் விழிப்பதற்கும் சூரியன் உதயமாவதற்கும் முன்னரே, நெடுந்தொலைவோட்ட வீரர் யுவராஜ் துரியாதாசு, 39, தமது ஓட்டப் பயிற்சியை நாள்தோறும் தொடங்கிவிடுவார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கிய இவர், தற்போது வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது 10 கி.மீ. தூரம் ஓடுகிறார். இதுவரை 90க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தயங்களில் இவர் பங்கேற்றுள்ளார்.

‘கிட்சர்சைஸ்’ உடற்பயிற்சி நிறுவனத்தை நிறுவிய இவர், உடற்­பயிற்சிக்கூட பயிற்­று­விப்­பா­ளராகப் பணியாற்றுவதற்கு அப்பாற்பட்டு ‘அல்ட்ரா மாரத்தான்’ நெடுந்தொலைவோட்டங்களில் ஓடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

“அல்ட்ரா மாரத்தான் என்பது பொதுவான 42 கி.மீ. தூர ஓட்டத்தைவிட நீண்டதூர ஓட்டமாகும். 50 கிலோமீட்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட தூரமாக அது இருக்கும்,” என்றார் திரு யுவராஜ்.

சில ‘அல்ட்ரா’ நெடுந்தொலைவோட்டங்கள் 100 கிலோமீட்டருக்கும் மேலானவை என்று குறிப்பிட்ட இவர், அத்தகைய ஓட்டங்கள் பல நாள் நீடிப்பதோடு கடினமான பாதைகளைக் கொண்டிருக்கும் என்றார்.

திரு யுவராஜின் ‘அல்ட்ரா’ ஓட்டப் பயணம், 2019ல் ஹாங்காங்கில் 30 கி.மீ. தூர ஓட்டத்துடன் தொடங்கியது.

“அந்த அனுபவம் எதிர்பாராத சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், சுற்றுப்புறத்திலிருந்த இயற்கைக் காட்சிகளின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது,” என்று இவர் நினைவுகூர்ந்தார்.

அதையடுத்து, நியூசிலாந்தின் ‘கிரேட்டர் ரிம்’ (50 கி.மீ.), தென்கொரியாவின் ‘டிரான்ஸ் ஜேஜு’ (55 கி.மீ.), ஆஸ்திரேலியாவின் ‘மார்கரெட் ரிவர் அல்ட்ரா’ (80 கி.மீ.), ஹாங்காங்கின் எச்கே100 (100 கி.மீ.) உள்ளிட்ட உலகின் கடினமான ‘அல்ட்ரா’ நெடுந்தொலைவோட்டங்களை வெற்றிகரமாக திரு யுவராஜ் முடித்துள்ளார்.

மனத்தை வலிமையாக்‌க அதற்குப் புதுப்புது சவால்களைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றார் இவர்.

ஹாங்காங்கில் நடைபெற்ற ‘டிரான்ஸ் லான்டாவ் அல்ட்ரா’ ஓட்டத்தில் மலையேறும் திரு யுவராஜ்.
ஹாங்காங்கில் நடைபெற்ற ‘டிரான்ஸ் லான்டாவ் அல்ட்ரா’ ஓட்டத்தில் மலையேறும் திரு யுவராஜ். - படம்: யுவராஜ் துரியாதாசு

“முடியாது என்ற எண்ணத்துக்கும் முடியும் என்ற நம்பிக்கைக்கும் இடையிலான மனப் போராட்டத்தை ஒவ்வொரு ‘அல்ட்ரா’ ஓட்டத்தின்போதும் மிகத் தெளிவாக நான் உணர்வேன்,” என திரு யுவராஜ் குறிப்பிட்டார்.

முழு தூரத்தையும் சிறுசிறு இலக்குகளாகப் பிரித்து ஓடுவதுதான் வெற்றிக்கான தமது முக்கிய உத்தி என்றார் இவர்.

“ஓட்டத்தின் முதல் 10 கி.மீ. தூரத்தில் கவனம் செலுத்துங்கள். அதன்பின் அடுத்த 10 கி.மீ தூரத்தில் கவனம் செலுத்துங்கள். முற்றிலுமான 100 கி.மீ. தூரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்,” என்று திரு யுவராஜ் அறிவுறுத்தினார்.

இந்த ஒழுக்கம் இவரது குடும்ப வாழ்க்கையையும் வடிவமைக்கிறது. காலை 5 மணிக்கெல்லாம் பயிற்சியை தாம் தொடங்கிவிடுவதால், தம் குழந்தைகளுடன் பின்னர் நேரம் செலவிட முடிவதாக இவர் சொன்னார். மின்னிலக்கச் சாதனங்களில் குறைந்த நேரம் செலவிடுவது, சமச்சீரான உணவுப் பழக்கம், வாரயிறுதிகளில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது போன்ற அம்சங்களை தமது வாழ்க்கைமுறையில் திரு யுவராஜ் கடைப்பிடித்து வருகிறார்.

மனைவி டெபோரா தயானியுடனும் மூன்று குழந்தைகளுடனும் யுவராஜ் துரியாதாசு.
மனைவி டெபோரா தயானியுடனும் மூன்று குழந்தைகளுடனும் யுவராஜ் துரியாதாசு. - படம்: யுவராஜ் துரியாதாசு

“விளையாட்டு, உடற்பயிற்சி இரண்டும் மனவுறுதி தரும் என்பதை என் குழந்தைகள் சொந்தமாக உணர வேண்டும்,” என்று கூறிய இவர், “அவர்களது வாழ்க்கைமுறையில் நல்ல பழக்கங்களை அறிமுகப்படுத்துவதே பெற்றோரான எனது பொறுப்பு, மாறாக அதைக் கட்டாயப்படுத்துவதன்று,” என்றார்.

வாரத்திற்கு குறைந்தது 16 மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளும் திரு யுவராஜ், ஓய்வுக்கும் அதே அளவு முக்கியத்துவம் தருகிறார்.

ஓட்டங்களில் காயங்களைத் தவிர்க்க உறக்கம், ஊட்டச்சத்து, தசை வலுவூட்டும் பயிற்சிகள் முதலியவற்றுக்கு இவர் முன்னுரிமை அளிக்கிறார்.

“குறைந்த உடல் வெப்பநிலை, கால் தவறி விழுதல், எலும்பு முறிவு போன்ற ஆபத்துகள் எந்நேரத்திலும் ஏற்படலாம். ஓட்டங்களின்போது பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிப்பது முக்கியம். அத்துடன், தன்னம்பிக்கையும் அவசியம்,” என்றார் இவர்.

திரு யுவராஜுக்கு ‘அல்ட்ரா’ நெடுந்தொலைவோட்டங்கள் வெறும் பந்தயங்கள் அல்ல. விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை கற்றுத் தரும் முக்கியப் பாடங்கள் அவை.

“நெடுந்தொலைவோட்டங்களின்போது ஒவ்வொரு நிலையையும் கடக்கும்போது அது ஒரு சிறிய வெற்றி,” என்றார் இவர்.

இவ்வாண்டு ஜனவரியில் ஹாங்காங்கில் நடைபெற்ற ‘எச்கே100’ (100 கி.மீ.) ‘அல்ட்ரா’ நெடுந்தொலைவோட்டத்தில் திரு யுவராஜ் பங்கேற்றார்.
இவ்வாண்டு ஜனவரியில் ஹாங்காங்கில் நடைபெற்ற ‘எச்கே100’ (100 கி.மீ.) ‘அல்ட்ரா’ நெடுந்தொலைவோட்டத்தில் திரு யுவராஜ் பங்கேற்றார். - படம்: யுவராஜ் துரியாதாசு

இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி மரினா அணைக்கட்டில் நடைபெறவுள்ள 55 கி.மீ. தூர ‘இன்கம் ஈக்கோ ரன்’ (Income Eco Run) நெடுந்தொலைவோட்டத்தில் திரு யுவராஜ் பங்கேற்கவுள்ளார்.

‘இன்கம் இன்ஷுரன்ஸ்’ நிறுவனத்தின் 55வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் இலக்குடன் இது நடைபெறுகிறது.

இவ்வாண்டு செல்லப்பிராணிகள் பிரிவு, 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவசப் பதிவு உள்ளிட்ட புதிய அம்சங்கள் கொண்ட இந்நிகழ்வு சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030ஐ ஆதரிக்கிறது.

ஓட்டத்தில் ஓடப்படும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ‘இன்கம் இன்ஷுரன்ஸ்’ $1 நன்கொடை வழங்கும்.

‘இன்கம் ஈக்கோ ரன் 2025’ பற்றிய மேல்விவரங்களுக்கு income.com.sg/ecorun என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்